மற்றுமொரு  சதித்திட்டம்

-நஜீப் பின் கபூர்-

அரசியல் என்று வருகின்ற போது அங்கே இராஜதந்திரம் சூழ்ச்சிகள் சதிகள் போராட்டங்கள் மோதல்கள் பேச்சுவார்த்தைகள் கருத்து முரண்பாடுகள் என்பதற்குப் பஞ்சமே இருக்காது. இலங்கையின் வரலாறு இந்திய-லாலா நாட்டிலிருந்த வந்த விஜயனுடன் பதிவுகளில் தெளிவாக இருந்தாலும் அதற்கு முன்னர் இயக்கர் நாகர் என்ற பூர்வீகக் குடிகளின் வரலாறு என்றும் ஒன்றிருக்கின்றது என்பதனை எவரும் மறக்க முடியாதது. அப்படிப் பார்க்கின்ற போது அமெரிக்காவை செவ்விந்தியர்களிடமிருந்து வெள்ளையர் பிடுங்கிக் கொண்டது போல-  அவுஸ்திரேலியாவை ஆதிக்குடிகளின் பிடியிலிருந்து ஆங்கிலேயர் பறித்தெடுத்துக் கொண்டது போல ஒரு வரலாறுதான் நமது நாட்டிற்க்கும் இருக்கின்றது.

இன்று நமது ஆதிக்குடிகள் சில ஆயிரம் பேருக்குக்குள் அடங்கிப் போக வந்தேறிகள் (சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், இந்தியத் தமிழர், மலேயர், பறங்கியர்) நாட்டுக் குடித் தொகையில் 23 மில்லியன் என்று தமது ஆதிக்கத்தை இங்கு நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் முன்னமே வந்தவன் பின்னே வந்தன் வியாபாரத்துக்கு வந்தவன் ஐரோப்பியருக்கு துணைக்காக இங்கு வந்தவர்கள் என்று இங்கு வாழ்கின்ற மக்களிடத்தில் பிளவுகள். இப்படி இனங்கள் மதங்கள் குழுக்கள் என்று பல கோஷ்டிகள் நாடு பூராவும் வாழ்ந்து வருகின்றன. அவர்களின் பரவல்கள் சில இடங்களில் செரிவாகவும் இன்னும் சில இடங்களில் ஐதாகவும் காணப்படுகின்றன. இனங்கள் என்று பார்க்கின்ற போது சிங்களவர்கள,; இலங்கைத் தமிழர்கள், சோனகர்கள், இந்தியத் தமிழர்கள் மலேயர் பறங்கியர் ஆதிவாசிகள் என்ற பிரிவினரே இங்கு பிரதான குழுக்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.

இவர்களை மத ரீதியாக பார்க்கும் போது பௌத்தர்கள் இந்துக்கள் இஸ்லாமியர்கள் கிருஷ்துவர்கள் என்ற நான்கு பிரிவுக்களில் நோக்க வேண்டி இருக்கின்றது. அவை கூட இந்தியாவில் இருந்துதான் இங்கு வந்தன என்பதிலும் தர்க்கங்கள் இருக்க நியாயம் இருக்காது. அவை பற்றிய ஆராய்வதோ விவாதிப்பதோ நமது நோக்கமுமல்ல. இலங்கையின் அரசியல் பின்னணியைப் பார்க்கும் போது இந்தப் பிரிவுகளை மனிதில் வைத்துக் கொள்ள வேண்டும். அரசியல் ரீதியில் பார்க்கின்ற போது மன்னராட்சி தென்னிந்தியப் படையெடுப்புக்கள் ஐரோப்பியர் ஆதிக்கம் அதிலும் போத்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் காலம் என்றும் வருகின்றன. சுதந்திரத்தின் பின்னர் சோல்பரி அரசியல் யாப்பு 1972 குடியரசு அரசியல் யாப்பு குறுகிய காலத்தில் வந்த ஜேஆரின் 1978- மேற்கத்தியத்தை திருப்பதிப்படுத்தும் அரசியல் மாற்றங்கள் என்று பார்க்க வேண்டி இருக்கின்றது.

1978ல் உருவான அரசியல் யாப்பே நாட்டை சுதேச போக்கிலிருந்து தாரான்மை வாதத்துக்கு மாற்றியது. அந்த யாப்புத்தான் இன்றைய நமது அரசியல் நெருக்கடிகளுக்கு ஆணிவேராக அமைந்திருக்கின்ற என்ற ஒரு குற்றச்சாட்டும் நாட்டில் இருக்கின்றது. இந்தக் கருத்துடன் நமக்கும் உடன்பாடுகள் இருக்கின்றன. காரணம் தான் சார்ந்த கட்சியை மையப்படுத்தி தன்னலச் சிந்தனையுடன்  முதல் முறையாக ஒரு யாப்பு இங்கு வரையப்பட்டது 1978ல் என்பதாகும். அதன் பின்னர் பதவிக்கு வந்தவர்கள் இன்று அதனை ஒரு முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு தன்னல யாப்பு மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இப்படி யாப்பில் நடக்கின்ற மாற்றங்களில் 22வது திருத்தம் என்று இன்று ஒன்று பேசப்படுகின்றது. அதிலும் முற்று முழுதான தேச நலன்கள் குடிகளின் நலன்களை என்பதனை விட தன்னல அரசியலை முன்னிருத்தித்தான் அதுவும் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்களின் நலன்களைப் பேணுவதுதான் இதன் பிரதான இலக்கு என்ற நிலையில்தான் 22ல் அத்தியாயங்கள் முன்வைக்கபட்டிருக்கின்றன. இந்த 22 யோசனைகளை பார்க்கும் முன்னர் அதிகார மாற்றங்கள் அல்லது தன்னல இருப்பை உறுதிப்படுத்துவது-தளர்த்துவது என்ற திருத்தங்கள்  19, 20, 21களில்  அவதானிக்கப்பட வேண்டும். அவை பற்றி இப்போது  சுருக்கமாகப் பார்ப்போம்.

இலங்கை அரசியலில் அண்மைக் காலத்தில் நடந்த மிகப் பெரிய கட்சி சார் அரசியல் புரட்சி சு.கட்சியில் இருந்து அதாவது அதிகாரத்தில் இருந்து  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸாக்காவுக்கு எதிராக மாற்றுப் போட்டியாளராக அந்தக் கட்சியின் செயலாளர் மைத்திரி பால சிரிசேன எடுத்த அதிரடி அரசியல் தீர்மானத்தைக் குறிப்பிட வேண்டும். இது எவ்வளவு ரிஸ்கானது என்றால் தான் தோற்றுப் போய் இருந்தால் இந்த நேரத்தில் ராஜபக்ஸாக்கள் தன்னை ஆறடி மண்ணுக்குள் புதைத்திருப்பார்கள் என்ற மைத்திரியின் ஜனரஞ்சகமான வார்த்தை நல்ல உதாரணமாகும்.

எனவேதான் தேர்தல் முடிவு உறுதியாகும் வரை மைத்திரி குருனாகல-தொடங்கஸ்லாந்த என்று தென்னம் தோப்புக்கள் தலைமறைவாக இருந்ததும், முடிவு தனக்குச் சாதகமாக இல்லாவிட்டால் மேற்கத்திய தூதுவராலயம் ஒன்றில் குடும்பம் சகிதம் தஞ்சமடையும் முயற்சியிலும் அவர் இருந்தார் என்று நாம் ஏற்கெனவே ஒரு முறை சொல்லி இருந்தோம். அன்று மக்களுக்கு

மைத்திரி கொடுத்த வாக்குறுதிப்படி 19வது திருத்தத்தைக் கொண்டு வந்து தனக்குப் பின்னர் பாராளுமன்றத்துக்கு அதிகாரம் சென்றடையும் மாற்றத்தையும் 19ல் நிறைவேற்றி இருந்தார். அவர் இந்த விட்டுக் கொடுப்பை செய்தாலும் அவர் பதவியில் இருக்கும் வரை தனது பிடியைப் பாதுகாக்கும் ஏற்பாடுகள் அதில் இருந்ததும் தெரிந்ததே. அதன் பின்னர் மைத்திரி-ரணில் குடித்தனத்தில் லடாய் வந்த போது மைத்திரி-மஹிந்த உறவுகள் மலர்ந்து ரணில் பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டதும், அதனை நீதி மன்றம் நிரகரித்தும் தெரிந்தே. இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த பின்னணியில் ராஜபக்ஸாக்கள் நாட்டில் மக்கள் மத்தியில் தனது பிடியை மீண்டும் இருக்கிக் கொண்டனர்.

மஹிந்தாவுக்கு மூன்னறாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் நிற்க முடியாத நிலையில் தம்பி கோட்டா தனக்குப் பேரினத்தின் மத்தியில் நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டிருந்தார். பௌத்த விகாரைகள்தான் அவரது தேர்தல் பிரச்சார மையங்கள் என்ற நிலையில் தொழிற்பட்டு வந்தன. சிங்கள இனத்தின் மீட்சியாளன். நமக்கும் ஒரு ரஷ்யப்-புட்டின் என்றெல்லாம் பெரிய வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டு, அவை அரசியல் சந்தையில் நல்ல விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த இடத்தில்தான் நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை இனமான முஸ்லிம்களை கடும் போக்கு சிங்களவர்கள் சம்மட்டியால் கண்ட கண்ட இடங்களில் சாத்திக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்கள் தமது தனித்துவ அடயாளங்களுடன் நாட்டில் நடமாட முடியாத நிலை. இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் சிங்களவர்களின் துரோகிகள் என்று அன்று முத்திரை குத்தப்பட்டிருந்தது.

அதே போன்று தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் கிடையாது 13 திருத்தத்தை நாம் கிழித்தெரிவோம் என்றலெ;லாம் ஞானசாரர் மற்றும் சரத் வீரசேக்கர போன்றவர்கள் தேர்தல் மேடைகளில் பேசி பேரினத்தாரை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். இவர்களின் இந்த கோஷங்கள் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டிருக்க, சில தனியார் ஊடகங்களும் அதற்கு பசளை போட்டுக் கொண்டிருந்தன. இன்று அந்த ஊடகங்களை அதே இனத்தைச் சேர்ந்த சமூக ஊடகங்கள் தறுமாறாக கிழித்து வாங்கிக் கொண்டிருக்கின்றன.

இப்படி வெற்றிகரமான பேரின பரப்புரைக்கு மத்தியில் களணியில் கோட்டாவை கடவுளின் அவதாரம் என்று ஒரு பாம்புக் கதையும் பரப்புரைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நவீன உலகில் இந்தக் கதையை பெரும்பாலான சிங்கள மக்கள் நம்பினார்கள். இவை எல்லாம் பெரும் போலி நாடகங்கள்-ஏற்பாடுகள் என்று தயாரிப்பாளர்களே இன்று பகிரங்கமாக சந்தியில் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். எப்படி இருந்தால் அந்த நேரத்தில் இவற்றை எல்லாம் பாவித்து கோட்டா சிங்கள மக்களின் ஹீரோவாகவும் ஜனாதிபதியாகவும் ஆசனத்தில் அமர்ந்து விட்டார்.

அப்படி அதிகாரத்துக்கு வந்தவர் தனக்கு நாட்டை சிறப்பாக முன்னெடுத்தச் சொல்ல மைத்திரியின் 19 தாவது அரசியல் திருத்தம் பெரும் தடையாக இருக்கின்றது. அதனை வைத்துக் கொண்டு ஒன்றும் பண்ண முடியாது. அத்துடன் தனது தம்பி எழு தலையாரும் தனக்கு துனைக்கு வேண்டும். அவரும் அரசியலில் உள்வாங்கப்பட வேண்டும். எனவே இரட்டைப் பிரசா உரிமைக்காரர்களும் கட்டாயம் தேவை என்று தனக்கு என்னனென்ன அதிகாரங்கள் வேண்டுமே அத்தனையையும் அவர் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொண்டார்.

இப்போது அவர் நல்லாச் செய்வார் என்று எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வேடிக்கை என்னவென்னறார் 19 திருத்தத்துக்கு யாரெல்லாம் கை உயர்த்தினார்களோ அவர்களே 20க்கும் கைதூக்கினார்கள். ஆனால் மைத்திரி மட்டும் வாக்களிப்பை தவிர்த்துக் கொண்டிருந்தார். எனவே தன்னலத்துக்குதான் இங்கு யாப்புகள் மாற்றப்படுகின்றன-திரிவு படுத்தப்படுகின்றன என்ற எமது வாதம் இங்கு வலுவாகின்றது.

அடுத்த வேடிக்கை என்னவென்றால் நாம் 19தை நீக்கிவிட்டு கோட்டாவுக்குக் கொடுத்த அதிகாரங்கள் அதாவது 20 திருத்தம் நாட்டைக் குட்டிச்சுவராக்கிவிட்டது. அவர் சர்வாதிகாரியாகி விட்டார். துணைக்கு வந்த ஏழுதலையாலும் ஏதுவுமே பண்ண முடியவில்லை. சேர் பேயில் அவரால் நல்லாச் செய்யவும் இயலாமல் போய்விட்டது. என்று கைதூக்கிய அதே ஆட்கள் இன்று நாடாளு மன்றத்துக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் ஜனாதிபதி பேரளவில்தான் வேலை பார்க்க வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

இந்தப் பின்னணியில்தான் நாட்டில் ‘கோ ஹோம் கோட்டா’  போராட்டங்கள்.  ஏப்ரல் 9 நிகழ்வுகளின் பின், செல்வாக்குடன் இருந்த பிரதமர் மஹிந்த தலைதெரிக்க ஓடி ஒழித்தார். பின்னர் அவர் திருமலையில் இராணுவமுகமில் அடைக்களம் என்று சில நாட்களுக்குப் பின்னர் தெரிய வந்தது. ஆடிப்போன ஜனாதிபதி ஜீ.ஆரும் தவறு நடந்து விட்டது. நான் எனது அதிகாரத்தைக் மட்டுப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன். இதோ அதிகாரத்தைக் குறைக்கு 21 வருகின்றது. எல்லாம் தயார்.! அதிகாரத்தைப் பிடியுங்கள,; என்று சொல்ல நாட்டில் ஏற்பட்டிருந்த சூட்டை ரணிலைப் பிரதமராகப் போட்டு தனித்துக் கொண்டார்.

இப்போது கதை வேறு. தான் இருக்கும் வரை அதிகாரம் உள்ளபடி என்னிடத்தில் இருக்கும் எனக்குப் பின்னர்தான் அதிகாரம் மாறும் என்று இப்போது புதிய கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார். நாம் முன்பு சொன்ன 21டை குழிதோன்றிப் புதைத்து விட்டு இப்போது 22 எனும் புதிய அரசியல் சீர்திருத்தம் என்று ஒன்றைதான் மக்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இது தங்கையைக் காட்டி அக்காலுக்கு தாலிகட்டப் பண்ணிய கதையாகத்தான் காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை அப்படிச் செய்யப் போகின்றேன் இப்படிச் செய்யப் போகின்றேன் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கப் போகின்றேன் என்று அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் போது  சண்டித்தனம் பேசிய நமது நீதி அமைச்சர் விஜேதாச இப்போது தருவதைப் பிடியுங்கள் அடுத்த விடயங்களைப் பின்னர் பார்ப்போம் என்று அடக்கிவாசிக்கின்றார். இது பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய ஐமச. செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இப்படி முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொள்வதால் தாங்கள் தலையில் இடிதான் விழும் என்று திட்டியதையும் அங்கு பார்க்க முடிந்தது.

இது புலி பூனையான கதை. அவருக்கு எதிர்பார்த்த அமைச்சுப் பதவி கிடைத்து விட்டது. அவர் கரை சேர்ந்து விட்டார். இப்போ வேறு என்னதான் பேச முடியும். எனவே இந்த 22ல் பெரிதாக மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றங்கள் எதுவுமே கிடையாது என்று சட்டம் தெரிந்த கூட்டணிக்காரர் சுமாந்திரன் கூட சொல்லி இருந்தார். எதிர்க் கட்சிகளும் ஏன் ஆளும் மொட்டுக் கட்சியில் உள்ள பலர் கூட தற்போது 22 விவகாரத்தில் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்கின்றார்கள். அதனை விவாதிப்பதே தேவையற்ற வேலை. இப்படி  கருத்தும் இருக்கின்றது.

இதற்க்கிடையில் ஜனாதிபதி வீட்டுக்குப் போய்தான் ஆக வேண்டும் அதன் பின்னர்தான் அடுத்த விடயங்கள் என்று மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். சர்வதேசமும் இந்த ஆள் இருக்கும் வரை எந்த உதவியும் கிடையாது என்று குறுக்கே நிற்க்கின்றது. முகத்துக்கே கூறியும் வருகின்றார்கள். மக்களோ அடுத்த நேரச் சாப்பட்டுக்கு வழிதெரியாது விளி பிதுங்கி நிற்க்கின்றார்கள். பட்னிச்சாவும் கண்னெதிரில் தெரிகின்றது. வருவதாகச் சொன்ன கப்பல்களையும் காணோம்.

எரிபொருளும் சமயல் எரிவாய்வும்  கப்பல்களில் ஏற்றப்படும் முன்னரே இங்கு மக்கள் வாரக் கணக்கில் தெருவில் நிற்க்கின்றார்கள். இது வரையும் டசன் கணக்கான உயிர்கள் அந்தக் கியூவில் நின்று செத்து மடிந்திருக்கின்றன. ரணில் கொண்டு வருவதாகச் சொன்ன டொலர்களையும் காணோம். அவரது  சர்வதேச நண்பர்களையும் காணோம். எல்லோரையும் தெரிந்தவருக்கு இப்போது ஒன்றுமே தெரியாத நிலை. நாட்டில் மக்கள் உணர்வுகள் கொதி நிலையில் இருக்கின்றது.

குமுறும் அந்த எரிமலை எப்போது பிளந்து கொண்டு வெளியே வரும் என்பது இன்றோ நாளையோ என்பது தெரியாது. இனியும் மக்களுக்கு சுமைதாங்க முடியாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.

நாட்டில் ஸ்திரமான ஆட்சியைத்தான் சர்வதேசம் கேட்டு நிற்க்கின்றது. உள்நாட்டிலும் அரசின் செல்வாக்கு இன்று வெரும் மூன்று சதவீதம் என்று சரிந்துள்ளதாக நடுநிலையான கணிப்புகள் கூறுகின்றன என்று 43வது படையணி வைத்திருக்கும் சம்பிக்க  கூறுகின்றார். நாமும் இந்தத் தகவலை எங்கோ பார்த்த ஞாபகம்.

ஆனால் மொட்டுக் கட்சிச் செயலாளர் சாகல காரியவாசம் ராஜபக்ஸ்க்களின் செல்வாக்க ஒரு சதவீதம் கூட சரியவில்லை என்று கூறுகின்றார். இவர்கள் பூமியில்தான் வாழ்கின்றார்களா என்றுதான் பார்க்க வேண்டும். புரிகின்றதா ராஜாக்கள் மீதுள்ள விசுவாசம்.? எனவே 22வது திருத்தமும் மக்களுக்கு எதிரான மற்றுமொரு சதித் திட்டம் என்றுதான் இதனை சொல்ல வேண்டி இருக்கின்றது. அதன் உள்ளடக்கத்தை பார்த்த போது நமக்கு இப்படி ஒரு குறிப்பைத்தான் முன்வைக்க வேண்டி இருக்கின்றது.

நன்றி:10.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பந்துல இராஜினாமா 

Next Story

ரணில்  இல்லத்திற்கு தீ வைப்பு