தற்காலிக அதிபராகிறார் சபாநாயகர் அபேவர்தனா?

இலங்கை பார்லிமென்ட் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனா தற்காலிக அதிபராக பதவியேற்பார் என கூறப்படுகிறது. இதனிடையே, பிரதமர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாக ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அதிபர் கோத்தபயா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் பதவி விலக கோரி போராட்டங்கள் நடந்தன. கோத்தபயா அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதனையடுத்து அவர் அங்கிருந்து தப்பிசென்றார். பின்னர், அதிபர் மாளிகை போராட்டக்காரர்கள் பிடியில் வந்தது.

தொடர்ந்து, அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டும்படி இலங்கை சபாநாயகர் மகிந்த அபேவர்தனாவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கை விடுத்தார். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கோத்தபயா, பிரதமர் ரணிலிடம் உறுதியளித்ததாக தகவல் வெளியானது. அதேநேரத்தில், ரணில் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய சஜித் பிரேமதாசா, இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில், சபாநாயகர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கோத்தபயாவும், ரணிலும் பதவி விலக வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களும் தெரிவித்தனர். அதனை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

மேலும், இலங்கை பார்லிமென்ட் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனாவை இடைக்கால அதிபராக பதவியேற்கும்படி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

சுயாதீன கட்சி தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படி இலங்கை சபாநாயகர் தற்காலிக அதிபராக பதவியேற்பார் எனவும் தெரியவந்துள்ளது.

கோத்தபயா மாளிகையை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போராட்டக்காரர்கள், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் வீட்டிற்குள்ளும் புகுந்தனர். ரணில் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே, அனைத்து கட்சிகள் அடங்கிய அரசை அமைப்பதற்கு ஏதுவாக பிரதமர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாக ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.

Previous Story

ஆளும்கட்சி  உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம்  அவசர கோரிக்கை

Next Story

ஹீரோவாகும் ஹிருனிகா