UKபிரதமர் போரிஸ் ஜான்சன் OUT 

சொந்தக் கட்சியிலே எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய பிரதமரை கட்சித் தேர்ந்தெடுக்கும் என்றும், அதுவரை காபந்து பிரதமராக நீடிப்பதாகவும் அறிவித்தார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டை வழிநடத்துவார் என்று தங்களுக்கு நம்பிக்கையில்லை எனக் கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதார அமைச்சர் ஷாஜித் ஜாவேத் ஆகியோர் நேற்று பதவி விலகினர்.

இதனையடுத்து நாட்டின் புதிய நிதியமைச்சராக நதீம் ஜஹாவி நியமிக்கப்பட்டார். ஆனால், ஜவாஹியும் பிரதமர் பக்கம் நிற்கவில்லை. போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என்று அவரும் வலியுறுத்தினார்.

தொடர் எதிர்ப்புகளைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் இன்று (வியாழன்) ராஜினாமா செய்திருக்கிறார்.

ராஜினாமா அறிவிப்பு குறித்து நாட்டு மக்களிடம் போரிஸ் ஜான்சன் உரையாற்றும்போது, “நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். புதிய தலைவர் வர வேண்டும் என்பது கன்சர்வேட்டிவ் கட்சியின் விருப்பம். அரசியலில் யாரும் தவிர்க்க முடியாதவர்கள் அல்ல” என்று தெரிவித்தார்

போரிஸ் ஜான்சனின் ராஜினாமா முடிவை எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி ‘நல்ல செய்தி’ என்று கூறி வரவேற்றுள்ளது.

பிரிட்டனின் அடுத்த பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி தேர்ந்தெடுக்கும் என்ற நிலையில், அந்தப் போட்டியில் முன்னாள் நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, போரிஸ் ஜான்சனுக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகையில், “கடந்த 48 மணி நேரத்தில் பிரிட்டன் ஆளுங்கட்சியில் நடந்துவரும் நிகழ்வுகளைக் கண்டு ‘எதிர்த்துப் போராடுவேன்’ என்று போரிஸ் கூறினார். ஆனால், இப்போது அவரே தான் பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

அவர் அக்டோபர் மாதம் வரை கேர்டேக்கர் பிரதமராக நீடிப்பார். கன்சர்வேட்டிவ் கட்சியின் வருடாந்திர கூட்டத்திற்காக புதிய தலைவர் தேர்வாகும் வரை அவர் பிரதமராக பொறுப்பு வகிப்பார்” என்று தெரிவித்திருந்தது.

போரிஸ் ஜான்சன் ராஜினாமாவுக்கு காரணம்

போரிஸ் ஜான்சனுக்கு எதிரான போர்க்கொடி ஏதோ 2 நாட்களுக்கு முன்னரே எழுந்தது என்று அணுகக் கூடாது. போரிஸ் ஜான்சன் 2019ல் பிரிட்டன் பிரதமராக பதவியேறார்.

அந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தொடங்கிய கரோனா தொற்று ஓரிரு மாதங்களிலேயே உலகை ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது. பிரிட்டன் மோசமான கரோனா அலைகளை சந்தித்தது. இரு தவணை தடுப்பூசிக்குப் பின்னரும் அங்கு கரோனா அலை ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில்தான் கரோனா ஊரடங்குக்கு இடையே பிறந்த நாள் விருந்து நடத்தி சர்ச்சையில் சிக்கினார் போரிஸ் ஜான்சன. ஜூன் 2020-இல் அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதன்மூலம், பிரிட்டனின் பிரதமராக ஆட்சியில் உள்ள ஒருவர் மீது சட்டத்தை மீறியதாக அபராதம் விதிக்கப்படும் முதல் பிரதமராக அவர் ஆனார்.

இதுவே அவர் மீது சொந்த கட்சியில் எதிர்ப்பு கிளம்ப காரணமாகியது. இது ஒருபுறம் இருக்க, போரிஸ் ஜான்சன் வரி உயர்வை அமல்படுத்தினார். இதன் மீதும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கடந்த மாதம் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் போரிஸ் ஜான்சனின் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த மொத்தம் உள்ள 359 எம்.பிக்களில், 211 எம்.பி.க்கள் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாகவும் 148 எம்.பிக்கள் அவருக்கு எதிராகவும் வாக்களித்தனர். அப்போதே அவரது தலைமை ஆட்டம் கண்டதும் உறுதியாகிவிட்டது.

இந்த எதிர்ப்புகள் எல்லாம் வலுப்பெற்று நிதியமைச்சர், சுகாதார அமைச்சர் இன்னும் சில ஜூனியர் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலகி இருக்கிறார்.

Previous Story

போரிஸ் பிரதமராக தொடருவார்!

Next Story

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பாரிய இலாபம் !காசு எங்கே?