முஸ்லிம்கள் பற்றிய நாடகத்தை பாதியில் நிறுத்திய  உறுப்பனார்கள் :ஏன்?

கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் ஒரு நாடகம் நடந்து கொண்டிருந்தபோது அதை பஜ்ரங் தளம் இயக்க உறுப்பினர்கள் பாதியில் தடுத்து நிறுத்தினர். முஸ்லிம் குடும்பம் சந்திக்கும் துன்பங்களை மையமாகக் கொண்டது அந்த நாடகம்.

பஜ்ரங்தளம் நாடகம்

‘ஜோதேகிருவனு சந்திரா’ என்ற பெயரிலான அந்தக் கன்னட நாடகம், “ஃபிட்லர் ஆன் தி ரூஃப்’ என்ற ஆங்கிலப் படத்தின் தழுவலாகும். அந்தத் திரைப்படம் ஒரு யூதக் குடும்பத்தின் துயரங்களைப் பற்றிக் கூறுவதாக எடுக்கப்பட்டிருந்தது. அதற்குப் பதிலாக நாடகத்தில் இஸ்லாமியக் குடும்பம் மையப்படுத்தப்பட்டது.

‘முஸ்லிம் குடும்பத்தை மையமாக வைத்து ஏன் நாடகம் நடத்த வேண்டும்’ என்பதுதான் அவர்களுடைய ஆட்சேபம் என்று நாடகத்தில் நடிக்கும் கோட்ரப்பா பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

“கடைசி மூன்று முக்கியக் காட்சிகளில் போலிஸ் வேடத்தில் நான் நடிப்பதால் மீசையை சரி செய்துகொண்டிருந்தபோது, ​​அமைப்பாளர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. நாடகம் முடிந்ததும் அவர்களிடம் பேசுகிறேன் என்று சொன்னேன். நான் மேடைக்குள் நுழையும்போது, ​​சிலர் கோஷம் எழுப்பியபடி மேடைக்கு வந்தனர்” என கோட்ரப்பா கூறினார்.

“பெண்ணின் தந்தை தனது மகளிடம் மேடையில் விடைபெறும் காட்சி அரங்கேறிக் கொண்டிருந்தது. அப்போது சிலர் வந்து ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று முழங்கத் தொடங்கினார்கள். நாடகத்தை நடத்தி முடிக்க அனுமதிக்குமாறு நாங்கள் அவர்களிடம் கெஞ்சினோம். பார்வையாளர்கள் கூட அழுதனர். அவர்கள் எங்களில் யாருடைய பேச்சையும் கேட்க மறுத்துவிட்டனர் ” என்று கோட்ரப்பா கூறினார்.

ஆரம்பத்தில், மேடையில் நடித்தவர்களுக்கு வந்து கோஷம் எழுப்பியவர்கள் யார் என்றே தெரியவில்லை. “நாடகம் நிறுத்தப்பட்டு பார்வையாளர்களை வெளியேறுமாறு அவர்கள் கூறினார்கள். அதன் பிறகுதான் அவர்களுக்கு ஆட்சேபத்துக்குக் காரணம் ஒரு முஸ்லீம் குடும்பத்தை மையப்படுத்தியதுதான் என்பதை உணர்ந்தோம். அவர்கள் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் என்று எங்களிடம் கூறப்பட்டது” என்று கோட்ரப்பா கூறினார்.

மூன்று மகள்களைக் கொண்ட படே மியான் என்ற பேக்கரி தொழிலாளியைச் சுற்றி கதை நகர்கிறது. கடந்த இருபது ஆண்டுகளாக கர்நாடகாவின் பல இடங்களில் இந்த நாடகம் நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஜூன் 16 அன்று, இது ஷிவமோகா நகரில் நடத்தப்பட்டது. இது 750 முதல் 800 பேர் வரையிலான பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

கர்நாடகா பஜ்ரங் தளம்

ஜூலை 3-ஆம் தேதி சொரபா தாலுகாவில் உள்ள அனவட்டியில் நடத்தப்பட்டபோதுதான் இந்தப் பிரச்னை ஏற்பட்டது. “மண்டபத்தில் இருந்து பார்வையாளர்கள் வெளியேறிய பிறகு காவல்துறையினர் வந்தனர்” என்றார் கோட்ரப்பா.

“இல்லை, நாங்கள் புகார் அளிக்க வேண்டாம் என்று விரும்பினோம். அதனால் என்ன பயன்? இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும்” என்றார்.

இருப்பினும், ஷிவமோகாவில் நடந்த நாடகக் கலைஞர்கள் கூட்டத்தில் மாவட்ட துணை ஆணையர், கண்காணிப்பாளர் ஆகியோரை அணுகி முறைப்படி புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

“அனைத்து நாடகக் கலைஞர்கள் முன்னிலையில் மீண்டும் நாடகத்தை அனவட்டியில் நடத்தவும் கூட்டம் முடிவு செய்தது” என்று நாடகக் கலைஞர் சஸ்வேஹள்ளி சதீஷ் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

நாடகம் நிறுத்தப்பட்டதற்கு பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆச்சார்தான் காரணம் என நாடக கலைஞர்கள் குற்றம் சாட்டினர்.

இதை அவர் மறுத்துள்ளார். “நான் அங்கு இருந்தேன். நாங்கள் எதுவும் செய்யவில்லை. நாடகம் பார்த்துவிட்டுத் தான் கிளம்பினோம். வேறு யாரும் நாடகத்தை நிறுத்தவும் முயற்சிக்கவில்லை. என் பெயர் ஏன் இதில் வருகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களுடன் இணைந்து சென்றாலும் எந்த இந்து அமைப்பிலும் நான் உறுப்பினராக இல்லை” என்றார் ஸ்ரீதர் ஆச்சார்.

நாடகம் நிறுத்தப்பட்டதற்கு யார் காரணம் என்று காவல்துறையும் தெரிவிக்கவில்லை.

“இது ஒரு உள்ளரங்கில் நடந்த தனியார் விழா. இதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. ஏற்பாட்டாளர்களிடம் இருந்து புகார் எதுவும் வரவில்லை” என்றார் ஷிவமோகா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி.எம். லக்ஷ்மி பிரசாத்.

“சில சலசலப்பு நடப்பதாக பொதுமக்கள் எங்களுக்குத் தெரிவித்தனர், காவல்துறையினர் சென்றடைவதற்குள், பெரும்பாலான மண்டபம் ஏற்கனவே காலியாக இருந்தது” என்று அவர் கூறினார்.

இந்து ஆர்வலர் கொலை செய்யப்பட்டதால் கடந்த சில மாதங்களாக போராட்டங்களும் தடை உத்தரவையும் கண்டது ஷிவமோகா. இங்குதான் ஹிஜாப் அணிந்து வந்த பெண்கள் தேர்வுகளைப் புறக்கணித்தனர்.

Previous Story

அரஃபா உரை: மக்காவில் இனி தமிழிலும் ஒலிக்கும்

Next Story

கூட்டமைப்பை சிதைக்கும் நோக்கம் -இரா. சம்பந்தன் பதில்