“குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்” – 

உதய்பூர் படுகொலை

-நிதின் ஸ்ரீவாஸ்தவா-

இரண்டு பெரிய வாயில்களைச் சுற்றிலும், இரண்டு டஜன் ராஜஸ்தான் போலீஸார் ஆயுதங்களுடன் தயாராக நிற்கிறார்கள். குறுகலான ஒரு சாலை. கடந்த மூன்று நாட்களாக அங்கு ஈ, எறும்பு கூட உள்ளே நுழைய முடியாத அளவிற்கு காவல்துறை கண்காணிப்பும் கட்டுப்பாடுகளும் பலமாக உள்ளன.

உதய்பூர் படுகொலை

ரஷீதா பேகம்

ராஜஸ்தானின் உதய்பூரின் இந்தப் பகுதி ‘ஹாதிபோல்’ என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இங்குள்ள ஒரு தெருவில், தையல்காரரான கன்ஹையாலால், இரண்டு முஸ்லிம் இளைஞர்களால் கொடூரமாக கொல்லப்பட்டார்.

அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. கன்ஹையாலாலை கொலை செய்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.

உதய்பூர் உள்பட மாநிலம் முழுவதும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. வீடுகளிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். அவர்களில் பலர், நடந்த சம்பவத்தால் இப்போதும் அதிர்ச்சியில் உள்ளனர்.

கொலை செய்த இரு இளைஞர்களும் முஸ்லிம்கள். கொலை சம்பவத்தை வீடியோ எடுத்துள்ள அவர்கள், முகமது நபி குறித்த பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கை இது என்று கூறியுள்ளனர்.

உதய்பூர் முஸ்லிம்கள்

இந்த விஷயம் தொடர்பாக அப்பகுதி முஸ்லிம் சமூகத்தில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. அன்றிரவு கன்ஹையா லால் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு திரண்ட மக்கள் கூட்டத்தையும் கோபத்தையும் பழைய நகரைச் சேர்ந்த ரியாஸ் ஹுசைன் பார்த்துள்ளார்.

“நீங்க நிற்கும் இடத்தில் நேற்று முந்தைய நாள் இரவு, பெருமளவில் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. என் வாகனங்கள் உடைக்கப்பட்டன. அண்டை வீட்டாரின் மூன்று வாகனங்கள் எரிக்கப்பட்டன. இந்த நாட்டின் சமூக நல்லிணக்கத்திற்கு கண்டிப்பாக களங்கம் ஏற்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

உதய்பூர் படுகொலை
ரியாஸ் ஹுசைன்

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பை கருத்தில் கொண்டால், இப்போதும் உதய்பூரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

இந்த சமீபத்திய சம்பவத்திற்குப் பிறகு, நான் சென்ற எல்லா முஸ்லிம் பகுதிகளிலும், மக்கள் வெளிப்படையாகப் பேச விரும்பவில்லை. கேமராவில் வர விரும்பவில்லை. அவர்கள் தங்கள் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி விடுகின்றனர். ஒரு முஸ்லிம் பெயருடன் தங்களை யாரும் கேமராவில் பார்ப்பதை அவர்கள் தவிர்க்கிறார்கள்.

நகரின் மிக நெரிசலான கஹர்வாடி பகுதியில் உள்ள தனது வீட்டின் வெளியே ஒரு மேடையில் அமர்ந்திருந்த முகமது ஃபிரோஸ் மன்சூரை நான் சந்தித்தேன்.

“அன்றாட வாழ்க்கையில் ஒரு சாதாரண மனிதனுக்கு, இந்த சம்பவங்களுடன் எந்த சம்பந்தமும் இல்லை. சில பைத்தியக்காரர்களால் இந்த சம்பவம் நடந்தது. இதன் பின்விளைவை எங்களைப்போன்ற ஒவ்வொரு சாமானியனும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இதையெல்லாம் ஒரேயடியாக விட்டுவிட்டு எங்களால் போக முடியாத நிர்பந்தத்தில் நாங்கள் உள்ளோம். வீட்டை விட்டு வெளியேறவும், இந்தப்பகுதியை விட்டு வெளியேறவும் எங்களால் முடியாது. ஆனால் மனதிற்குள் மிக அதிகமான பீதி உள்ளது,”என்று அவர் குறிப்பிட்டார்.

உதய்பூர் படுகொலை

முகமது ஃபிரோஸ் மன்சூர்

ஒரு வருடத்தில் மாறிவிட்ட ராஜஸ்தான்

ராஜஸ்தானில் வகுப்புவாத வன்முறை வரலாறு மிகவும் ஆழமானது அல்ல. ஆனால், கடந்த ஓராண்டாக கரௌலி, ஜோத்பூர், அல்வர், தற்போது உதய்பூர் ஆகிய இடங்களில் நடக்கும் சம்பவங்கள் பொதுமக்களின் மனங்களில் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. சிறுபான்மை சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல.

உதய்பூர் பழைய டவுன் ஷிப்பில் வசிக்கும் ஒரு தாய், தனது குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும், இதுபோன்ற மன அழுத்தத்தால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் கவலையடைந்துள்ளார்.

கேமராவில் வெளிப்படையாகப் பேசிய குலாப் பானோ, “நாங்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். ஆனால் இதுவரை இப்படி பார்த்ததில்லை. எனக்கு பயமாக உள்ளது. எனக்கு குடும்பம் இருக்கிறது. அதனால் மனதில் பீதி நிறைந்துள்ளது.

குழந்தைகள் மிகவும் பயந்து போயுள்ளனர். பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு பிறகு இப்போதுதான் பள்ளிக்கூடம் திறந்தது. ஆனால் இப்போது மறுபடியும் மூடப்பட்டுள்ளது. எங்கள் குழந்தைகள் என்ன படிப்பார்கள்?”என்று கேள்வி எழுப்பினார்.

உதய்பூர் படுகொலை
குலாப் பானோ

பழிவாங்கும் உணர்வால் பயம்

கன்ஹையா லாலின் கொடூரமான கொலையால் மக்களிடையே கோபம் நிலவுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவலில் உள்ளனர், விசாரணை நடந்து வருகிறது. ஆனால் பழிவாங்கும் உணர்வு கணிசமாக அதிகரித்துள்ளது போலத்தெரிகிறது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதிலும், புதன்கிழமை அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டனர்.

இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்க இன்றைய தினம் ஒரு பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உதய்பூரில் ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 8 ஆயிரம் பேர் திரண்டனர். முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஊடகங்கள் மூலமாகவும் செய்திகள் கொடுக்கப்பட்டன.

“இந்து சமூகத்தினர் பயப்படுபவர்கள் அல்ல. எந்த தவறான புரிதலிலும் இருக்க வேண்டாம். மதச்சார்பற்ற நாடு என்ற தண்டனையை இந்தியா இனி அனுபவிக்காது. உதய்பூரின் இந்து சமுதாயம் மற்ற எல்லா மதங்களையும் எப்போதும் ஆதரித்து வருகிறது. ஆனால் நீங்கள் வந்து எங்கள் சொந்த மக்களை பட்டப்பகலில் கொல்வீர்கள் என்பது இதற்கு அர்த்தம் அல்ல,” என்று உதய்பூர் இந்து ஜாக்ரன் மஞ்ச் இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் சக்தி சிங் கூறினார்.

கலவரங்கள் மற்றும் வன்முறைகளுக்கு எந்த வரம்பும் இல்லை. சாதாரண மக்கள் மட்டுமே இதில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நிதர்சனம். கன்ஹையா லால் கொல்லப்பட்ட பகுதியில், பிறந்து வளர்ந்த பெரியவர்களும் கூட இப்போது பயந்து போயுள்ளனர்.

உதய்பூர் படுகொலை

உதய்பூர் இந்து ஜாக்ரன் மஞ்ச் இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர்

57 வயதான ரஷீதா பேகம், வண்டியில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார்.

“பசி, தாகத்துடன் நாங்கள் இருக்கிறோம். எங்கே போவது? வெளியில் சென்றால் போலீஸ் தடியால் அடிக்கும். இத்தனை காலத்தில் இதுபோன்ற சூழலை முதல்முறையாக பார்க்கறோம்.

இப்போது என்ன செய்வது? யார் இதை செய்தார்களோ, அவர்களுக்கு தண்டனை கிடைக்கப்போகிறது. ஒரு கையை தட்டினால் சத்தம் வராது. மற்றவர்களை ஏன் தண்டிக்கிறீர்கள்,”என்று அவர் வினவினார்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

பலர் இதை வெறுப்பை கிளப்பும் உரைகள் மற்றும் சமூக ஊடகங்களில் தூண்டிவிடும் பேச்சுக்களுடன் தொடர்புபடுத்துகிறார்கள். உதய்பூரும் இதற்கு முன் இவ்வளவு ஆழ்ந்த பதற்றத்தை பார்த்ததில்லை, உணர்ந்ததும் இல்லை.

ராஜஸ்தான் அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர் ஹாஜி முகமது பக்‌ஷ், உதய்பூர் நகரம் உலகம் முழுவதும் புகழ் பெற்ற அமைதியான நகரம் என்பதில் இன்றும் கர்வம் கொள்கிறார்.

“இங்கு எல்லோரும் மிகுந்த அன்புடனும் பாசத்துடனும் வாழ்கின்றனர். இப்போது மட்டுமல்ல, மகாராணா பிரதாப் காலத்தில் ஹக்கிம் கான் சூரி தளபதியாக இருந்த காலத்திலிருந்தே அப்படித்தான் உள்ளது.

ஆனால் சில காலமாக , சில அரசியல்வாதிகள், தங்களின் சுயநலத்திற்காக இந்த சுமூகமான சூழலை குலைத்து அமைதியின்மையை உருவாக்குகின்றனர். ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் அமைதியை விரும்பாத சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.

Previous Story

ராக்கெட்ரி நம்பி விளைவு: ஊடகங்கள் பார்வையில் படம் எப்படி இருக்கிறது?

Next Story

கொலம்பியா சிறையில் கலவரம்; தீயில் சிக்கி 51 கைதிகள்  பலி