ஒரு தந்தை – மகனின் வினோத சந்திப்பு!

திறன்பேசிகள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, மனித வாழ்வு மொத்தமும் ஒளிப்படங்களாக மாறி உலகை நிறைத்துக்கொண்டிருக்கின்றன. வாழ்வின் மகத்தான தருணம் ஓர் ஒளிப்படமாக மாறும்போது, அது வரைபட எல்லைகளைக் கடந்து மனித மனங்களை ஆக்கிரமித்துக்கொள்கிறது.
அதுபோன்ற படங்களுக்கு எந்தவித விளக்கமும் தேவைப்படுவதில்லை. அவை ‘பேசும் பட’ங்களாக மாறிவிடுகின்றன.. அப்படியொர் பேசும் படம், ஒரு செல்ஃபியாக, கடந்த 2019, மே மாதத்தில் வங்க தேசத்தில் எடுக்கப்பட்டது.
அதை எடுத்தவர் வங்காளதேசத்தின் ரயில்வே துறையில் பயணச்சீட்டு பரிசோதகராக பணிபுரியும் ஒரு இளைஞர். அவருடைய அப்பா அதே துறையில் ரயிலின் கடைசி பெட்டியில் பயணிக்கும் ‘ரயில்வே கார்ட்’.

பெரும்பாலான தெற்காசிய நாடுகளின் பயணிகள் ரயிலாக இருந்தாலும் சரக்கு ரயிலாக இருந்தாலும் அவற்றின் கடைசி பெட்டி ஓர் அழகான சின்ன வீடுபோல் இருக்கும். அதன் முதுகில் ‘x’ குறி வரையப்பட்டிருக்கும்.

அந்தப் பெட்டியில் அந்த ரயிலின் காவலாளியாக இருப்பவர் பச்சைக்கொடியுடன் வருவார். வழி நெடுகிலும் உள்ள ஊர்களில் உள்ள ரயில்வே கிராசிங்குகளில் தென்படும் மனித முகங்கள் அவருக்குப் பரிச்சயமானவை.

குறிப்பாக குழந்தைகளின் கையசைப்பு ரயில்வே காவலாளிகளுக்கு அன்பின் சிறகைப்பு!

இந்த நெகிழ்ச்சிகரமான சம்பவத்தில் வரும் அப்பாவும் ஒரு ரயில் காவலாளி என்பதால், அவர் பணிபுரிந்து வந்த ‘பார்டர் எக்ஸ்பிரஸ்’ ரயிலில், வங்களாதேசத்தின் குல்னாவிலிருந்து சிலஹாத்திக்கு காவலாளியாக கடைசி பெட்டியில் சென்று கொண்டிருந்தார். மகனும் ரயில்வேயில் இணைந்து ‘ஜூனியர் டிடிஈ’ ஆக வேலை செய்யத் தொடங்கினார்.

மகன், பஞ்சகரில் இருந்து பர்பதிபூருக்கு ‘த்ருதஜன் எக்ஸ்பிரஸ்’ ரயிலில் சென்று கொண்டிருந்தார். இந்த இரண்டு ரயில்களும் புல்பாரி என்கிற நிலையத்தில் நின்று செல்லும்போது அப்பாவும் மகனும் சந்தித்துக் கொள்கிறார்கள். ‘பாபா சாப்பிட்டீர்களா? பயணம் எப்படியிருந்தது?’ என்று அன்புடன் விசாரித்த அந்த மகனுடைய பெயர் வாசிப்பூர் ரஹ்மான்.

அந்த அன்பான அப்பாவின் பெயர் ஷுவோ. மகன் அப்பாவை நலம் விசாரித்ததுடன் நிற்கவில்லை. அந்தக் கணத்தில் தனது திறன்பேசியை கையில் எடுத்தார். அடுத்த தண்டவாளத்தில் நிற்கும் ரயிலின் கடைசி பெட்டியில் கையில் வாக்கி-டாக்கி சாதனத்துடன் நின்றுகொண்டிருக்கும் தன்னுடைய தந்தையை தன்னை நோக்கிப் பார்க்கும்படி கூறி அந்த தருணத்தை ஒரு செல்ஃபியாக எடுத்தார்.

அந்த நிலையத்தில் இரண்டு ரயில்களும் நின்று செல்லும் 60 வினாடிகளில் தந்தையை ஒவ்வொருமுறையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தாலும் இந்த செல்ஃபி தருணம் வங்காள தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.

2019இல் முதல்முறையாக சமூக வலைதளத்தில் இப்படம் பகிரப்பட்டபோது, அப்பாவுக்கும் மகனுக்கும் வாழ்த்துகள் அன்பின் மழையாகப் பொழிந்தன. ஒருவர் இந்த செல்ஃபியை பகிர்ந்து சொன்னார்.. ‘இப்படிப்பட்ட தந்தை மற்றும் மகனாக இருப்பது ஒரு பாக்கியம்!’ .

இந்தியாவிலிருந்து ஒருவர் இப்படிக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார் ‘அப்படிப்பட்ட படத்தை எடுக்கும் அதிர்ஷ்டம் நமக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் அந்தப் படம் அன்பின் வடிவமாக இருக்கிறது’.

மகன் வாசிப்பூர் ரஹ்மான் தானெடுத்த செல்ஃபியை முதன்முதலில் இணையத்தில் பதிந்தபோது படத்துக்குக் கீழே இப்படி பதிந்தார்: ‘அப்பாவும் நானும், புல்பாரி நிலையத்தில் சந்தித்துக்கொள்கிறோம்.

டாக்கா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சிலஹாத்தி எல்லையைக் கடக்கிறோம். அவர் ஒரு கடமையுணர்வு மிக்க ரயில்க் காவலர். நான் ஒரு பயணச்சீட்டுப் பரிசோதகன்’.

Previous Story

எத்தியோப்பியா  தாக்குதலில் 230 பேர் பலி

Next Story

கோட்டாபய தற்போதும் USA குடிமகன்!..?-பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்