கட்டாய ராணுவ சேவை உள்ள நாடுகள்!

இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணி நியமனங்களுக்கான திட்டம் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ‘அக்னிபத் யோஜ்னா’ என பெயரிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ராணுவத்தில் பணிக்கு சேர்வார்கள்.

இந்திய ராணுவம்

இந்த திட்டத்தின்கீழ் பணியமர்த்தப்பட்ட இளைஞர்களில், 25 சதவீதப் பேருக்கு நான்கு ஆண்டுகள் கழித்து இந்திய ராணுவத்தில் மேலும் பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும். மீதமுள்ளவர்கள் வேலையை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

இந்த அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டது முதல், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன.

இந்தியாவில் முதன்முறையாக ராணுவத்தில் இளைஞர்களை குறுகிய காலத்திற்கு பணியமர்த்தப்படவுள்ளனர்.

ராணுவத்தில் இத்தகைய ஆட்சேர்ப்பு வெளிநாடுகளிலும் நடந்து வருவதாக மத்திய அரசு கூறுகிறது.

இந்தியாவை போலவே, உலகில் பல்வேறு நாடுகளில் குறுகிய காலத்திற்கு ராணுவத்தில் ஆட்சேர்ப்பு என்பது உள்ளது. இத்தகைய நாடுகளில் ராணுவத்திற்கு சேவை செய்வது கட்டாயம் என்பது இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று. இத்தகைய நாடுகளில், இதற்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டம் இதுப்போன்று அல்ல.

ராணுவத்திற்கு சேவை செய்வதை கட்டாயமாக்கியிருக்கும் நாடுகள் எவை? அதன் விதிமுறைகள் என்ன? என்பதை பார்க்கலாம்.

இஸ்ரேல்

இஸ்ரேல் நாட்டில் ராணுவத்தில் சேவை செய்வது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டாயமாகும். இஸ்ரேலிய பாதுகாப்பு படையில் ஆண்கள் மூன்று ஆண்டுகளும், பெண்கள் சுமார் இரண்டு ஆண்டுகளும் பணியாற்றுவது கட்டாயம்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள இஸ்ரேலிய குடிமக்களுக்கு இது பொருந்தும்.

புதிதாக குடியேறியவர்களுக்கும், சில மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மருத்துவ அடிப்படையில் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

கூடுதலாக, சில சிறப்பு விதிகளின் அடிப்படையில், விளையாட்டு வீரர்கள் குறுகிய காலத்திற்கு சேவை செய்யலாம்.

தென் கொரியா

தேசிய ராணுவ சேவைக்கான மிகவும் வலுவான அமைப்பைக் கொண்டுள்ளது தென் கொரியா. உடற் தகுதியுடைய ஆண்கள் அனைவரும் ராணுவத்தில் 21 மாதங்களும், கடற்படையில் 23 மாதங்களும், விமானப்படையில் 24 மாதங்களும் பணியாற்றுவது கட்டாயமாகும்.

இது தவிர, தென் கொரியாவில் காவல்துறை, கடலோர காவற்படை, தீயணைப்பு சேவை மற்றும் சில சிறப்பு விதிகளில், அரசு துறைகளில் பணியாற்றும் வாய்ப்பும் உள்ளது.

ஆனால், ஒலிம்பிக் அல்லது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ராணுவத்தில் கட்டாயமாகப் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இப்போட்டிகளில் பதக்கம் வெல்ல முடியாத வீரர்கள் மீண்டும் வந்து ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.

வட கொரியா

கட்டாய ராணுவ சேவையை நீண்ட காலமாக கொண்டுள்ள நாடு வட கொரியா. இந்த நாட்டில் ஆண்கள் 11 ஆண்டுகளும், பெண்கள் ஏழு ஆண்டுகளும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.|

எரித்திரியா

ஆப்ரிக்க நாடான எரித்திரியாவிலும் ராணுவத்தில் கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இந்த நாட்டில் ஆண்கள், இளைஞர்கள் மற்றும் திருமணமாகாத பெண்கள் 18 மாதங்கள் நாட்டின் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.

மனித உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி, எரித்திரியாவில் இந்த 18 மாத சேவை சில ஆண்டுகளும் நீட்டிக்கப்படுகிறது. சில நேரங்களில் அது காலவரையின்றி செய்யப்படுகிறது.

எரித்திரியாவில் இதுபோன்ற முடிவால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். ராணுவத்தில் கட்டாய சேவை செய்ய விரும்பாத பலர் பிரிட்டனில் தஞ்சம் அடைய கோருவதுண்டு.

சுவிட்சர்லாந்து ராணுவம்

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் 18 வயது முதல் 34 வயது வரையுள்ள ஆண்களுக்கு ராணுவ சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை கடந்த 2013ம் ஆண்டு, சுவிட்சர்லாந்து வாக்கெடுப்பின் மூலம் முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்யப்பட்டது.

2013ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக இந்த விவகாரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் கட்டாய சேவை 21 வாரங்கள் வரை நீடிக்கும். அதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் கூடுதல் பயிற்சி அளிக்கப்படும்.

அந்நாட்டு பெண்களுக்கு ராணுவத்தில் கட்டாயம் சேர வேண்டும் என்ற விதி இல்லை. ஆனால் அவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் ராணுவத்தில் சேரலாம்.

பிரேசில் ராணுவ வீரர்கள்

பிரேசில்

பிரேசிலில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ராணுவ சேவை கட்டாயம். இந்த கட்டாய ராணுவச் சேவை 10 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும்.

உடல்நலம் போன்ற காரணங்களுக்காக, ராணுவத்தில் கட்டாயமாக பணியாற்றும் விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம்.

ஒரு இளைஞர் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தால், சிறிது காலத்திற்குப் பிறகு அவர் ராணுவத்தில் கட்டாய சேவைக்கு செல்ல வேண்டியிருக்கும்.

இந்த நாட்டில், படைவீரர்களுக்கு இதற்கு சிறிய சம்பளம், உணவு மற்றும் படைமுகாமில் தங்குவதற்கான வசதிகள் கிடைக்கும்.

சிரியா

சிரியாவிலும் ஆண்களுக்கு ராணுவ சேவை கட்டாயம்.மார்ச் 2011ஆம் ஆண்டு, அந்நாட்டு அதிபர் பஷர் அல்-அசாத் கட்டாய ராணுவ சேவைக்கான கால அளவை 21 மாதங்களில் இருந்து 18 மாதங்களாக குறைக்க முடிவு செய்தார்.

அரசுப் பணிகளில் இருப்பவர்கள், கட்டாய ராணுவப் பணியைச் செய்யாவிட்டால், அவர்களின் வேலை பறிக்கப்படும். கட்டாய ராணுவ சேவையில் இருந்து தப்பிப்பவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

ஜார்ஜியா ராணுவ வீரர்கள்

ஜார்ஜியா

ஜார்ஜியாவில் ஒரு வருட ராணுவ சேவை கட்டாயமாகும். இதில், மூன்று மாதங்கள் போர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மீதமுள்ள 9 மாதங்கள் தொழில்முறை ராணுவத்திற்கு உதவும் அதிகாரியாக பணியாற்ற வேண்டும்.

ஜார்ஜியா கட்டாய ராணுவ சேவையை நிறுத்தியது. ஆனால், அதற்கு 8 மாதங்களுக்குப் பிறகு, 2017ம் ஆண்டு அதை மீண்டும் தொடங்கியது.

லிதுவேனியா

லிதுவேனியாவில் கட்டாய ராணுவ சேவை 2008ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. 2016ம் ஆண்டில் , லிதுவேனியா அரசு அதை ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் தொடங்கியது. அதிகரித்து வரும் ரஷ்ய ராணுவ அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

ஆனால் 2016ல் மீண்டும் இந்த முறை தொடங்கப்பட்டது. இங்கு 18 முதல் 26 வயதுக்குட்பட்ட ஆண்கள் கட்டாயமாக ஒரு வருடம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். இதில், பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஒற்றை தந்தையர்களுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு இதனை நடைமுறைப்படுத்தியதன் மூலம் ஆண்டுத்தோறும் நடக்கும் பணியில் 3500 பேர் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாடு அதிபர் அலுவலகம் தெரிவித்தது.

ஸ்வீடன் ராணுவம்

ஸ்வீடன்

100 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்வீடன் நாடு 2010ம் ஆண்டு கட்டாய ராணுவ சேவையை ரத்து செய்தது. 2017 ஆம் ஆண்டில், அதை மீண்டும் தொடங்குவதற்கு வாக்களிக்கப்பட்டது.

இந்த முடிவிற்குப் பிறகு, ஜனவரி 2018 முதல் ஆண்கள், பெண்கள் என 4000 பேரை கட்டாய ராணுவ சேவைக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, 2025ம் ஆண்டுக்குள் 8 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்கள் கட்டாய ராணுவ சேவையில் சேர்க்கப்படுவார்கள்.

துருக்கி

மேலும், , 20 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆண்களுக்கும் துருக்கியில் ராணுவ சேவை கட்டாயமாகும். அவர்கள் 6 முதல் 15 மாதங்கள் வரை ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.

கீரிஸ்

கீரிஸில், 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு 9 மாதங்கள் ராணுவப் பணி கட்டாயம்.

ஈரான்

இது தவிர, ஈரானில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 24 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.

கியூபா

கியூபாவில், 17 முதல் 28 வயதுடைய ஆண்கள் இரண்டு ஆண்டுகள் கட்டாய ராணுவ சேவையில் பணியாற்ற வேண்டும்.

Previous Story

இந்தியா:முஸ்லிம் சாம்ராஜ்ஜியத்திற்கு அடித்தளமிட்ட குத்புதீன் ஐபக் 

Next Story

கறுப்பு பிறந்த தினம்! கொழும்பில்  அதிரடிப்படையினர் குவிக்கப்பு !!