காட்டுத் தீ-01

‘பசி’

யூசுப் என் யூனுஸ்

காட்டுத் தீ பகுதியூடாக வாராந்தம் கொதிநிலை அரசியலைப் பற்றி பேசலாம் என்று எதிர் பார்க்கின்றோம். இந்த வாரம் நமது கதாபாத்திரங்கள் மோதி, கோட்டா அம்பானி இவர்களில் இரண்டு பேர் அரசத் தலைவர்கள் அடுத்தவர் ஆசியாவிலே மிகப் பெரிய குபேரோ.

என்னதான் விமர்சனங்கள் சர்ச்சைகள் இருந்தாலும் நமது பார்வையில் இந்திரா காந்திக்குப் பின்னர் இந்தியாவுக்கு செல்வாக்கான தலைவராக மோடி இருக்கின்றார். நமது இந்தக் கருத்துக்களுடன் முரண்படுகின்ற பெரிய ஒரு கூட்டம் இருப்பதும் நமக்குத் தெரியும்.

இந்திய அரசியலில் இன்று பிஜேபி மிகப் பெரிய கட்சி. அவர்களது அரசியல் செயல்பாடுகள் தொடர்ப்பில் நமக்கும் மிகப் பெரிய ஒவ்வாமைகள் இருந்தாலும் அந்தக் கட்சியின் தமைத்துவ ஆளுமையை எம்மால் மட்டம் தட்டிப் பேச முடியாது. மோதிக்கு சமமான ஒரு அரசியல் தலைமை எதிரணில் கண்ணுக்கெட்டிய தொலைவில் இல்லை.

இலங்கை அரசியலை எடுத்துக் கொண்டால் ராஜபக்ஸாக்களின் செல்வாக்கு கடந்த தேர்தலின் போது மோதியைவிட இங்கு கொடிகட்டிப் பறந்தது. இந்த ஆட்சி இன்னும் ஒரு கால் நூற்றாண்டுகள் வரையும் போகும் என்பது ராஜபக்ஸாக்களின் அரசியல் எதிரிகளிடத்தில் கூட இருந்தது.

அவர்களது அரசியல் செல்வாக்கு மஹிந்த ராஜபக்ஸ என்ற மனிதனது பிம்பத்தில் இருந்து கட்டி எழுப்பப்பட்டாலும். அவரது சகோதரன் கோட்டாபே ராஜபக்ஸ சிங்கள பேரினத்தாரின் ஹீரோவாக மிகக் குறுகிய காலத்துக்குள் வளர்க்கப்பட்டிருந்தார்.

அதற்கு ஊடகங்கள் கணிசமான பங்களிப்பை வழங்கி இருந்தது. ஆனால் இந்த கோட்டா என்பது வெறும் மாயை என்பது அவர் பதவிக்கு வந்த இரு வருடங்களுக்குள்ளேயே உறுதியானது. அவர் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட ஒரு பாத்திரம்.

இந்தியாவில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் பிரதமர் மோதி மீது இன்று வலுவான நம்பிக்கையில் இருக்கின்றார். இலங்கை ஜனாதிபதிக்கு அந்த நிலையில்லை. சமகாலத்தில் இந்தளவு குடி மக்களினால் வெறுக்கப்பட்ட உலகத் தலைவர் இவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற நிலை.

சர்வதேச அரங்கில் மோதிக்கு என தனியான ஒரு இடம் இருக்கின்றது. ஆனால் இலங்கை ஜனாதிபதி என்றால் சர்வதேசத் தலைவர்கள் முகம் சுழிக்கும் நிலை.

நாடு பெரிதாக இருந்தால்தான் தலைவர்களுக்கு மவுசு என்று இதனைக் கணக்குப் போடக் கூடாது. ஸ்ரீமா அம்மையார் இலங்கைத் தலைவராக இருந்த நாட்களை எண்ணிப் பாருங்கள்.

அந்த நாட்களில் இந்தியாவில் இந்திரா பிரதமராக இருந்தாலும் உலக அரங்கில் இந்திராவுக்கு சமமாக அல்லது அதனை விட சில சந்தர்ப்பங்களில் ஸ்ரீமா அம்மையர் ஒரு படி மேல் இருந்த சந்தர்ப்பங்களும் நிறையவே இருந்தன.

படிப்புத்தான் இதற்குக் காரணம் என்பதும் இல்லை. உலகில் முதல் பெண் பிரதமரான ஸ்ரீமா நாம் அறிந்த வரையில் எட்டாம் வகுப்பு வரைதான் படித்திருக்கின்றார். ஆனால் அவர் ஆளுமை காரணமாக சர்வதேச உறவுகள் மிகவும் சிறப்பாகப் பேணப்பட்டு வந்ததால் வரலாற்றில் உலகத் தலைலவர்கள் வரிசையில் அவரால் அமர முடிந்தது.

அவர் ஆட்சிக் காலத்தில் தனது சொந்தத் தேவைகளுக்காக-உறவுகளுக்காக அரச கஜானாவில் இருந்து பணத்தைக் கையாடினார் என்ற குற்றச்சாட்டுக்கள் இன்றுவரை இல்லை.

மோதிக்கும் பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லை. ஆனால் நாம் இங்கு பேசுகின்ற ஜனாதிபதி கோட்டா அவரது ஒட்டு மொத்த மெதமூலன-ரஜபக்ஸ குடும்பமுமே இனவாதம், பொய், புரட்டு ஏமாற்று அச்சுறுத்தல் கொலை பிடிவாதம் பக்கச்சார்பு மோசடி ஊழல் கொள்ளை அறியாமை என்பனதான் இவர்களது தகைமைகள் என்பது இன்று அம்பலமாகி இருக்கின்றது.

குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கவசத்தைப் இவர்கள் பாவிக்கின்றார்கள். மோதி-கோட்டா ஆளுமை இமயம்-சீகிரிய இடை வெளி போன்றது.

தேச பக்தர்களாக தம்மைக காட்டிக் கொண்டவர்கள் மக்களுக்கும் நாட்டுக்கும் துரோகம் செய்த விடயங்கள் தொடர்பான நீண்ட பட்டியல் இன்று முன்வைக்கப்படுகின்றது.

இங்தான் நமது மூன்றாவது பாத்திரத்தை அறிமுகச் செய்யப் போகின்றோம். இந்தியாவில் பிரதமர் மோதிக்கு ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லாவிட்டாலும், அரசியல், தேர்தல் செலவுகள் என்று வரும் போது கௌதம் அதானி போன்ற பெரும் பண முதலைகள் உதவிக்கு வருகின்றார்கள் என்பது புதிய கதை அல்ல. அதனால் அவர்களுக் உதவப் போன இடத்தில்தான் இன்று மோதிக்கும் சிக்கல் வந்திருக்கின்றது.

இந்திய இலங்கை அரசுகளுக்குத் தெரியாது தனி நபராக தலையிட்டு மோதி இலங்கையில்  அதானிக்கு வர்த்த நலன்களைச் செய்து கொடுத்தார் என்பது இன்று இந்தியாவிலும் இலங்கையிலும் பெரும் குற்றச்சாட்டாக இருக்கின்றது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான ராகுல் காந்தி மோதி அட்டகாசங்கள் எல்லை கடந்தும் இன்று நடக்கின்றன என்று டுவிட்டரில் பதிந்திருக்கின்றார்.

இந்திய ஊடகங்களும் இது பற்றி மோதியிடத்தில் கேள்விகளை எழுப்புகின்றன. இதனால் மோதிக்கும் தலையிடி. கோப் குழுவில் நடந்த விசாரணையில் இது அம்பலத்துக்கு வந்தது.

பின்னர் குறிப்பிட்ட இலங்கை மின்சார சபையின் தலைவர் பேர்டினன்டோ தான் மன அழுத்தம் மற்றும் பசிக்கொடுமை காரணமாக அன்று அப்படித் தவறிப் பேசி விட்டதாகவும் அதனை வாபஸ் வாங்கிக் கொள்வதாகவும் கூறி இருந்தார். (இன்று நாடு முழுவதும் அழுத்தம் பசிக் கொடுமை எனவே எலலோரும் பொய்களைத்தான் பேசிவிட்டு வாபஸ் வாங்கின் கொள்ளலாம்) ஆனால் யாரும் இந்தக் கதையை நம்பத் தயாராக இல்லை.

சர்ச்சைக்குறிய கோட்டாவும் இதனை உடனே மறுத்திருந்தார். மோதி இது வரை வாய்திறக்கவில்லை. அதானி குழுமம் கவலை வெளியிட்டுள்ளது.

மின்சார சபைத் தலைவர் ஜனாதிபதியின் வேண்டுகோள் தொடர்ப்பில் எழுத்து மூலம் தனது பாதுகாப்புக் கருதி ஆவணத்தில் பதிந்த (24.11.2021) குறிப்பு சமூக ஊடகங்களில் பிரசுரமாகி வருகின்றது.

மேலும் அமைச்சரை அனுமதி பெறமுன்னரே அதானிக்கு அந்த வர்தத்க நலன்கள் கையளிக்கப்பட்டு> பின்னர்தான் அமைச்சரவையில் அனுமதி வாங்கப்பட்டிருந்தது. இது எதனைக் காட்டுகின்றது.

அப்படியானால் குறிப்பிட்ட தலைவர் பேர்டினன்டோ அச்சுறுதத்லுக்கு பயந்து கதையை மாற்றினாரா அல்லது அந்த முறைகேட்டை தானே முன்னின்று செய்ததாக மறுவாக்கு மூலம் கொடுக்கப் போகின்றாரா என்று நாம் கேள்வி எழுப்புகின்றோம்.

நமது நாட்டில் ரில்லியன் கணக்கான மக்கள் பணம் அரசியல்வாதிகளின் நலன்களுக்காக கையாடப்படுகின்றது என்பது இவ்வாறான சம்பவங்களில் உறுதியாகின்றன.

இந்தியாவில் கெதம் அதானி, மோதி தேர்தல் செலவுக்கு உதவுகின்றார் என்று வைத்தக் கொண்டால் இலங்கை ஆட்சியாளர்களுக்கு அதானியுடன் முறைகேடான இந்த வர்த்தகத்தில் என்ன நடந்திருக்கும் என்ற கேள்வியை குடிமக்கள் சார்ப்பில் எழுப்புகின்றோம்.

அத்துடன் மோதி தனக்கு அழுத்தம் கொடுக்கின்றார் என்றும் அங்கு சொல்லப்பட்டிருக்கின்றது. அப்படியானால் தேச பக்தர்கள் இறையான்மை காட்டிக் கொடுத்து விட்டார்களா என்றும் கேட்கத் தோன்றுகின்றது.

ஏதோ பெரும் பசியில்தான் நாட்டில் கொள்ளைகள் நடக்கின்றன என்பது மட்டும் உறுதி! பேர்டினன்டோ கோப்பில் பார்த்த அணுமான் வேலை இந்தியா இலங்கை அரசியலில் நெருப்பெடுத்திருக்கின்றது.

நன்றி:19.06.2022 ஞாயிறு தினக்குரல்

 

 

 

Previous Story

கோமாவுக்குப் போன கோஷங்கள்!

Next Story

துரோகி ஹீரோவான கதை!