முகமது நபிகள் குறித்த நூபுர் ஷர்மா கருத்தால் ராஞ்சியில் : 2 மரணம்

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நூபுர் ஷர்மாவின் முகமது நபிகள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வெள்ளியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 15 வயதான முதாசிர் ஆலம், 24 வயதான சாஹில் ஆகியோர் துப்பாக்கி சூட்டால் உண்டான காயங்களால் உயிரிழந்தனர்.

ராஞ்சி வன்முறை

துப்பாக்கி தோட்டாக்களால் காயமடைந்த இந்த இருவர் உட்பட காயமடைந்த அனைவரும் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்தில் அனுமதிக்கப்பட்டனர். இந்த இருவரின் மரணத்தை மருத்துவ அறிவியல் கழகத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

ஜார்கண்ட் காவல்துறை செய்தித் தொடர்பாளர் அமோல் வி.ஹோம்கர் இந்த மரணங்களை பிபிசியிடம் உறுதி செய்தார்.

“வெள்ளிக்கிழமை நடந்த வன்முறையின் போது, போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தகவல் கிடைத்துள்ளது. கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசாரும் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இது நடந்தபோது 12 போலீசார், 12 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். ஒரு போலீஸ்காரர் உட்பட சிலருக்கு தோட்டா காயங்கள் ஏற்பட்டன,” என்று அவர் குறிப்பிட்டார்.

“காயமடைந்த 22 பேரில் சிலரது நிலை கவலையளிப்பதாக உள்ளது. இவர்களில் 2-3 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மற்றவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்,” என்று ஹோம்கர் தெரிவித்தார்.

15 வயதான முதாசிர் ஆலத்திற்கு தலையில் குண்டடிபட்டது. அவன் பெற்றோருக்கு ஒரே மகன். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது, அவரது கருப்பு ஆப்கன் குர்தா சில இடங்களில் கிழிந்து, வெள்ளை நிற பேண்டில் ரத்தச் சிவப்பு நிறத்தில் கறைகள் இருந்தன. அவரது தாயார் நிகத்தின் உடல்நிலை அழுதழுது மோசமடைந்துள்ளது.

முதாசிரின் தந்தை மற்றும் சித்தப்பா

முதாசிரின் தந்தை மற்றும் சித்தப்பா

இவரது குடும்பம் ஹிந்த்பீடி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறது. முதாசிர் சுடப்பட்டபோது அவரது தந்தை பர்வேஸ் ஆலம் சிம்தேகாவில் இருந்தார். மகனுக்கு காயம் ஏற்பட்ட செய்தி கிடைத்ததும், அவர் ராஞ்சிக்கு ஓடி வந்தார்.

‘என் மகன் அனைவரிடமும் நட்பாக இருப்பான்’

“முதாசிர் எனது ஒரே மகன். வறுமையின் காரணமாக எங்களால் அவனை சரியாகப் படிக்க வைக்க முடியவில்லை. நாங்கள் இருவரும் (தந்தை மற்றும் மகன்) குடும்பத்தை நடத்துவதற்காக வேலை செய்தோம். என் மகன் மிகவும் நட்பாக இருந்தான். அவனை ஏன் சுட்டார்கள்? அவன் செய்த தவறு என்ன?” என்று பிபிசியிடம் பேசிய பர்வேஸ் கேள்வி எழுப்பினார்.

முதாசிரின் சித்தப்பா முகமது ஷாஹித் அயூபி, அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் மாவட்டத் தலைவராக உள்ளார். தனது சகோதரரின் மகனை போலீசார் சுட்டுக் கொன்றதாக அவர் குற்றம் சாட்டினார். இதற்கு ஜார்கண்ட் அரசும் அதன் நிர்வாகமும் பொறுப்பு என்று அவர் கூறியுள்ளார்.

“காவல்துறையினர் ஏகே-47 மற்றும் கைத்துப்பாக்கிகளால் சுட்டனர். அவர்கள் வானத்தில் சுட்டிருக்க வேண்டும். ஆனால் போராட்டக்காரர்களைக் குறிவைத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதன் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. போலீஸ்காரர்கள் முன்னால் இருந்து சுடுவதை அவற்றில் நீங்கள் பார்க்கலாம்,” என்று ஷாஹித் அயூபி பிபிசியிடம் தெரிவித்தார்.

“முதாசிரோ அல்லது போராட்டக்காரர்களோ பயங்கரவாதிகளோ தீவிரவாதிகளோ இல்லை. காவல்துறை ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தியது. யார் உத்தரவு போட்டது. உண்மையில் நாட்டிற்குள் விஷம் பரவிவிட்டது. அதே மனநிலைக்கு நமது அதிகாரிகளும் மாறிவிட்டனர். இதனால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.”

வன்முறைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு ராஞ்சியில் ஒரு சாலை
Previous Story

தமிழர் பகுதியில் புத்தர் சிலை: தமிழ் மக்களின் எதிர்ப்பால்   நிறுத்தம்

Next Story

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம்: இந்தியா விலகல்