/

இந்தியா; இஸ்லாமிய நாடுகளுடனான உறவில் பாதிப்பா?

இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், முகமது நபிகள் குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துகள் காரணமாக இந்தியாவுக்கு ராஜரீதியாக ஏற்பட்டிருக்கும் விரும்பத்தகாத விளைவுகள் முடிவுக்கு வருவதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி
இந்தியாவுக்கு எதிரான குரலில் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

முகமது நபிகள் குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்லாமிய நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இந்தோனீசியா, இராக், மாலத்தீவுகள், ஜோர்டான், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன. 

முன்னதாக, குவைத், இரான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள், தங்கள் நாடுகளில் உள்ள இந்திய தூதர்களை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்திருந்தன. சௌதி அரேபியா இந்த விவகாரம் தொடர்பாக, கடும் வார்த்தைகளை பிரயோகித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.

இவற்றில் பெரும்பாலான நாடுகளுடன் நட்புறவை பேணிவரும் இந்தியாவுடைய தூதரக அதிகாரிகள், அந்நாடுகளை சமாதானப்படுத்த முயற்சித்துவருகின்றனர். ஆனால், புயல் இன்னும் ஓய்வதாக இல்லை.

இந்து தேசியவாத கட்சியான பாஜகவின் செய்தித்தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா இந்த சர்ச்சையின் மையப்புள்ளியாக உள்ளார். கடந்த மாதம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார். அதுதொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

பாஜகவின் டெல்லி ஊடகப்பிரிவு தலைவராக இருந்த நவீன் ஜின்டாலும் இதுதொடர்பாக சர்ச்சையை கிளப்பும் வகையிலான ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா சந்தித்துவரும் ஆழமான மதப்பிரிவினையை நூபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜின்டால் ஆகியோரின் கருத்துகள் பிரதிபலிப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

2014ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் மற்றும் தாக்குதல்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக நூபுர் ஷர்மாவின் கருத்து இந்தியாவின் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம் சமூகத்தினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சில மாநிலங்களில் ஆங்காங்கே போராட்டங்களுக்கும் வழிவகுத்திருக்கிறது. நூபுர் ஷர்மாவின் கருத்துகள் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், அதனை  மீண்டும் இங்கே கூறவில்லை.

நவீன் ஜின்டால் மற்றும் நூபுர் ஷர்மா இருவரும் இது தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளனர். மேலும் நூபுர் ஷர்மாவை இடைநீக்கம் செய்துள்ள பாஜக, ஜின்டாலை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

“எந்தவொரு மதத்தையும் சேர்ந்த மத ஆளுமைகளை இழிவுபடுத்துவதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. மேலும் எந்தவொரு பிரிவையோ மதத்தையோ இழிவுபடுத்தும் அல்லது அவமதிக்கும் எவ்வித சித்தாந்தத்திற்கும் பாஜக எதிரானது. அத்தகைய நபர்களை அல்லது கொள்கைகளை பாஜக முன்னிறுத்தாது” என பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூபுர் ஷர்மா

 நூபுர் ஷர்மா

இஸ்லாமிய நாடுகளின் கோபம்

நாட்டின் உள்விவகாரம் சர்வதேச விவகாரமாக உருவெடுத்துள்ளதால் இவ்விவகாரத்தில் பாஜகவின் எதிர்வினை போதாது என, நிபுணர்கள் கூறுகின்றனர். இஸ்லாமிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் வாயிலாக அந்நாடுகளின் கோபம் கண்கூடாக தெரிகிறது.

இந்தியாவிடமிருந்து பொது மன்னிப்பை எதிர்பார்ப்பதாக கத்தார் தெரிவித்துள்ளது.

“இத்தகைய இஸ்லாமிற்கு எதிரான வெறுப்பு கருத்துகளுக்கு தண்டனையே வழங்காமல் அவற்றை தொடர அனுமதிப்பது, மனித உரிமைகள் பாதுகாப்பு மீதான கடும் ஆபத்துகளை ஏற்படுத்தும். மேலும், முஸ்லிம்கள் மீதான தவறான அபிப்ராயங்கள் வளரவும் அவர்களை விளிம்புநிலைக்குத் தள்ளுவதற்கும் வழிவகுக்கும்.

இது, வன்முறை மற்றும் வெறுப்பு சுழற்சியை உருவாக்கும்”, என கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவும் அதன் அறிக்கையில் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்துள்ளது.”பாஜகவின் செய்தித் தொடர்பாளரின் கருத்துக்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தைப் பதிவு செய்கிறது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில “உதிரி சக்திகள்” தெரிவித்த கருத்துகள், இந்திய அரசின் கருத்துகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என, கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் தெரிவித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் மற்ற தூதரக அதிகாரிகளும் இந்த சர்ச்சை கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இருதரப்பையும் விமர்சித்த இந்தியா

57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஒஐசி) மற்றும் பாகிஸ்தானும் இதுதொடர்பாக இந்தியாவை விமர்சித்துள்ளது. ஆனால், இந்திய அரசு வழக்கம்போல இருதரப்பையும் விமர்சித்துள்ளது. ஓஐசியின் கருத்து, “தேவையற்ற மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்டவை” என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

பாஜக தலைமை மற்றும் இந்திய அரசின் தலைமை இருவரும் இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டியிருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படி செய்யவில்லையென்றால் அரபு நாடுகள் மற்றும் இரானுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து உருவாகும் என அவர்கள் கூறுகின்றனர்.

குவைத், கத்தார், சௌதி அரேபியா, பஹ்ரைன், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அங்கம் வகிக்கும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடனான (ஜிசிசி) இந்தியாவின் வர்த்தகம் 2020-21ஆம் ஆண்டில் 87 பில்லியன் டாலராக உள்ளது.

லட்சக்கணக்கான இந்தியர்கள் இந்த நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் கோடிக் கணக்கிலான பணத்தை இந்தியாவுக்கு அனுப்புகின்றனர். இந்தியாவின் எரிபொருள் இறக்குமதிக்கான முக்கிய ஆதாரமாக இந்நாடுகள் உள்ளன.

இந்திய பிரதமராக 2014இல் ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து நரேந்திர மோதி இந்நாடுகளுக்கு தொடர்ச்சியாக பயணம் செய்துவருகிறார். ஐக்கிய அரபு அமீரகத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. மேலும், ஜிசிசியுடனான விரிவான ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

2018ஆம் ஆண்டில் அபுதாபியில் முதல் இந்து கோயிலின் பிரபலமான முன்மாதிரி நிகழ்ச்சியில் நரேந்திர மோதி கலந்துகோண்டார். இந்தியா மற்றும் அந்நாடுகளுக்கு இடையேயான வளர்ந்துவரும் உறவுக்கு உதாரணமாக இது கூறப்பட்டது.

இதன் பின்னணியில், இந்தியாவுக்கு எதிரான குரலில் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. பன்னாட்டு அமைப்புகளில் இந்தியாவை ஐக்கிய அரபு அமீரகம் ஆதரித்திருந்தது.

இந்த சர்ச்சை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மற்ற நாடுகளுடன் ராஜரீதியிலான இந்தியாவின் சமீபத்திய வெற்றிகளை பாதிக்கச் செய்யலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக டெஹ்ரானுடனான இந்தியாவின் உறவு மந்தமான நிலையில் உள்ளது. இந்தியாவுக்கு எதிர்வரும் நாட்களில் வருகை தரவுள்ள இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்டோல்லஹியனின் வருகையை இந்த சர்ச்சை பாதிக்கலாம்.

அரபு நாடுகளில் பணியாற்றிய முன்னாள் வெளியுறவு அதிகாரியான அனில் ட்ரிகுனாயத் கூறுகையில், இந்தியா தற்போது கடினமான சூழலில் உள்ளதாகவும் தலைமை மட்டத்திலான தீவிரமான முயற்சிகள் மட்டுமே எதிர்மறையான வீழ்ச்சியை தடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அரபு நாடுகள்
லட்சக்கணக்கான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த வீழ்ச்சியால் ராஜரீதியாக ஏற்படும் இழப்புகள், அந்த பிராந்தியத்துடனான இந்தியாவின் உறவை கடுமையாக பாதிக்கச் செய்யும் என, மற்ற ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“இந்தியாவுடன் நட்பை பேணும் நாடுகள் இந்தியாவின் உள்விவகாரங்களை விமர்சிக்கும்போது இந்திய அதிகாரிகள் தற்காப்புடனேயே எதிர்வினையாற்றுவார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் பதற்றத்தை தணிக்க இந்திய தூதரக அதிகாரிகள் உடனடியாக மன்னிப்பு கோருகின்றனர், பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்” என, வில்சன் சென்டர் திங் டேங்கின் ஆசிய திட்டத்தின் துணை இயக்குனர் மைக்கேல் குகேல்மான் தெரிவித்தார்.

தங்கள் நாடுகளில் உள்ள மக்களின் கோபத்தைத் தணிக்கவும் அரபு நாடுகள் நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டு வருகிறது. இந்தியாவை விமர்சிக்கும் ஹேஷ்டேக்குகள் அந்த நாடுகளின் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது. அந்நாடுகளின் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இவ்விவகாரம் இடம்பிடித்துள்ளது.

இந்திய பொருட்களை புறக்கணிக்க கோரும் ஹேஷ்டேகுகளும் டிரெண்டாகிவருகின்றன. கத்தார் மற்றும் குவைத்தில் உள்ள அங்காடிகளில் இந்திய பொருட்களை நீக்கும் செய்திகளும் வருகின்றன. குவைத்தில் உள்ள அல்-அர்தியா கூட்டுறவு பல்பொருள் அங்காடியில் அரபி மொழியில், “இந்திய பொருட்களை நாங்கள் எடுத்துவிட்டோம்” என எழுதப்பட்டுள்ளது.

ஆனால், இத்தகைய கோபத்தின் வெளிப்பாடுகள் உள்ள போதிலும், ஜிசிசி மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவு முக்கியமானது எனவும், ஆபத்துகளை தணிக்கும் வழிகளை இருதரப்பும் ஆராய வேண்டும் எனவும், குகேல்மான் உள்ளிட்ட ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“இந்த விவகாரத்தில் இந்தியா அதன் சொந்த செல்வாக்கால் பாதுகாக்கப்படுகிறது. ஏனெனில், தங்களின் பொருளாதார நலன்களுக்காகவும் தொடர்ந்து எரிசக்தியை இறக்குமதி செய்வதற்காகவும் வளைகுடா நாடுகளுக்கு இந்தியா தேவை. மேலும், அந்நாடுகளுக்கு இந்தியர்கள் வந்து வாழ்வதும் பணிபுரிவதும் தொடர வேண்டும். ஒட்டுமொத்தமாக, இந்தியாவுடன் தொழில் புரிவது தொடர்வது அவர்களின் தேவையாக உள்ளது” என அவர் தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளுக்கு இந்நாடுகள் எதிர்வினையாற்றுவதற்கு எல்லைகள் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

வளர்ந்து வரும் பிரிவினை

இந்தியாவில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மத பிரிவினை அதிகரித்திருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த சில வாரங்களாக சில இந்து அமைப்புகள் வாரணாசியில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்திற்கு சென்று, நூற்றாண்டு பழமையான மசூதியில் வழிபடுவதற்கு அனுமதி கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த மசூதி கோயில் இடிபாடுகளில் கட்டப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

தூண்டும் வகையிலான விவாதங்களை தொலைக்காட்சி சேனல்கள் நடத்திவருகின்றன. சமூக ஊடகங்களில் பரவலான வெறுப்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடைய பெரும்பாலானோர் அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், நூபுர் ஷர்மா பாஜக கூறுவதுபோன்று “உதிரி நபர்” அல்ல என, விமர்சகர்கள் கூறுகின்றனர். அக்கட்சியின் கருத்துகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளராக அவர் இருந்தார்.

இந்த சர்ச்சையை தொடர்ந்து சர்வதேச அரங்கில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, இந்தியாவுக்கான அழைப்பு மணியாக உள்ளது எனவும் பிரித்தாளும் அரசியல் சர்வதேச விளைவுகளை ஏற்படுத்தும் என இந்தியா கற்க வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“இந்தியாவில் வளர்ந்துவரும் நச்சு அரசியல் இந்தியாவுக்குள்ளேயே எப்போதும் தங்கியிருக்காது என்பதை இந்தியா கற்றுவருகிறது. இந்தியாவின் செல்வாக்கு உலகளவில் வளரும் நிலையில், மற்ற நாடுகளுடனான அதன் ராஜரீதியிலான மற்றும் பொருளாதார ரீதியிலான உறவுகள், வலுப்படும்போது, உள்நாட்டு அரசியல் வெளிநாடுகளில் விரும்பத்தகாத விளைவுகளை எற்படுத்துவதில் பங்கு வகிக்கும்” என, குகேல்மான் தெரிவித்துள்ளார்.

Previous Story

முகமது நபி குறித்து அவதூறு:| இந்திய தூதரகத்திற்கு  ஈரான், கத்தார், குவைத் சம்மன்!

Next Story

 நுபுர் ஷர்மாவிற்கு குவிஹெச்பி தலைவர் ஆதரவு..!