பாகிஸ்தான்: 14 வழக்குகளில் இருந்து இம்ரான் கானுக்கு ஜாமீன்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் கடந்த ஏப்ரல் 10-ம்தேதி இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதன் பின்னணியில் அமெரிக்காவின் சதி உள்ளது என்று அவர் குற்றம் சாட்டி வருகிறார்.

புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தக் கோரி இம்ரான் கான் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்த போராட்டங்களின்போது வன்முறையை தூண்டியதாக அவர் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வழக்குகளில் ஜாமீன் கோரி பெஷாவர் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2-ம் தேதி இதனை விசாரித்த தலைமை நீதிபதி குவாசிர் ரஷித், 14 வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் வழங்கினார். வரும் 25-ம் தேதி வரை இம்ரான் கானை கைது செய்யக்கூடாது என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே தனியார் தொலைக்காட்சிக்கு இம்ரான் கான் அண்மையில் அளித்த பேட்டியில்,”பாகிஸ்தானின் நிர்வாக கட்டமைப்பில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதனால் நாடு மோசமான விளைவுகளை சந்திக்கும். பாகிஸ்தான் 3 ஆக உடையும் ஆபத்து உள்ளது” என்று கூறியுள்ளார்.

இலங்கையை போன்று பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்த சூழலில் அரசுக்கு எதிரான போராட்டங்களை இம்ரான் கான் தீவிரப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

Previous Story

 21 வது திருத்தம் இழுபறி

Next Story

சிறுபான்மைமீதான தாக்குதல்: அமெரிக்க அறிக்கைக்கு இந்தியா கண்டனம்