போராட்டங்களால் பிரச்சினையைத் தீர்ப்பது சிக்கலாகின்றது பந்தை கைமாற்றும் அரசு: பிரதமர் உரையின் சுருக்கம் இதுதான்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். இதன்போது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை தமது அரசாங்கம் விரைவில் முன்னெடுக்கும் என பிரதமர் தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் இன்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார்.

அந்த உரையின் முழு விபரம் வருமாறு,

நண்பர்களே! எங்கள் நாடு மிகவும் இக்காட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த தருணத்தில் உங்கள் மத்தியில் உரையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

50 ஆண்டு காலத்துக்கும் மேலான எனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் தீர்மானம் மிக்க அரசியல் மைல்கற்களை கடந்து வந்துள்ளேன் என்பதை குறிப்பிட வேண்டும்.

கோவிட் தொற்றுநோய்க்கு பின்னர் நாம் எதிர்கொள்ள வேண்டி நேரிட்ட பொருளாதார பிரச்சினைகளை நம் நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என நான் நம்புகிறேன்.

இத்தொற்றுநோய் தாக்கத்திலிருந்து நம் மக்களை எம்மால் பாதுகாக்க முடிந்தபோதும், தற்போது எங்கள் நாடு சவால்களுக்கு உட்பட்டு இருப்பதை எமக்கு உணர முடிகின்றது.

நாடு முடக்கப்பட்டதோடு அந்நியச் செலாவணி வீழ்ச்சியடைந்ததுடன், வெளிநாட்டு கையிருப்பு சிதைவடைந்தது என்பதை நான் கூறி தெரிய வேண்டியதில்லை.

கடலில் எண்ணெய் கப்பல்கள் கண்களுக்கு எட்டும் தூரத்தில் இருந்தபோதும் அவற்றை பெற்றுக் கொள்வதற்கான டொலர் எம்மிடம் இல்லாதததால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதற்கு நேரிட்டுள்ளது.

யுத்தத்தை வெற்றிகொண்டு 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட பின்னர் மக்களுக்கு ஆற்றிய உரை, தற்போது எனது நினைவிற்கு வருகின்றது.

அன்று ‘மின்சார தடையில்லாத நாடொன்றை எதிர்காலத்தில் கட்டியெழுப்புவோம்’ என நான் கூறினேன். அதற்காக நாம் மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து நாம் செயலாற்றிய போதும், கடந்த அரசாங்கம் எமது வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லாமையினால் அந்த எதிர்பார்புகளை எம்மால் பூர்த்தி செய்ய முடியாமல் போனது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல நாட்களாக வரிசையில் நிற்கும் மக்களின் கஷ்டம் எமக்கு நன்கு புரிகின்றது. எரிவாயுவை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்ற பெண்களின் வேதனையை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

பொருட்களின் விலை, விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அனுபவித்து வரும் துன்பம் குறித்து நம் அனைவருக்கும் நல்ல புரிதல் உள்ளது.

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம் என நாம் சகல கட்சிகளுக்கும் அழைப்புவிடுத்தோம். ஆனால் வரவில்லை.

இந்த தருணத்தில் கட்சி குறித்து சிந்திப்பதைவிட நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதே நம் அனைவரதும் பொறுப்பாகும்.

யார் பொறுப்பை ஏற்காவிடினும் ஆட்சியிலுள்ள கட்சி என்ற வகையில் நாம் அந்த இறுதி பொறுப்பை ஏற்க வேண்டும். நாம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருவோம்.

இப்படி வீதியில் இறங்கிப் போராடுவதால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும். உல்லாசப் பிரயணிகள் வருகை குறையும். இந்த வீதிப் போராட்டம் பிரச்சினைக்குத் தீர்வல்ல. தனது காலத்தில் நடந்த தவறுகளைப் பற்றி ஒருவார்த்தையேனும் பேசாத பிரதமர் தனது பேச்சில் எதிரணியை குற்றம் சாட்டி இருந்தார். அவரது பேச்சுக் குறித்து மக்களது பதிவுகளை பார்க்கும் போது அதற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. கடும் விமர்சனங்களைத்தான் அங்கே பார்க்க முடிகின்றது.

Previous Story

ஐயா பயணம் சௌக்கியமா!

Next Story

22 மில்லியன் மக்களின் வாழ்வை நாசமாக்கிய 226 பேர்!