இடைக்கால அனைத்துக் கட்சி அரசு என்பது என்ன?

எம். மணிகண்டன்

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியள்ள இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்திருக்கிறது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இலங்கையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பதவி விலகிவிட்டனர். இப்படியொரு நெருக்கடியான சூழலில் தேசிய அரசு ஒன்றை அமைக்கப் போவதாக அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருக்கிறார்.

இடைக்கால அரசு அல்லது தேசிய அரசு என்பது என்ன, இதற்கும் பொருளாதார நெருக்கடிக்கும் என்ன தொடர்பு, இடைக்கால அரசு அமைந்துவிட்டால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைத்து விடுமா என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்தக் கட்டுரை.

இடைக்கால அரசு, காபந்து அரசு, தேசிய அரசு என்பது என்ன?

இடைக்கால அரசு என்பது ஆளும் அரசு கலைக்கப்படும் பட்சத்தில் தற்காலிகமாக அமைக்கப்படும் ஒரு அரசு.

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள இடைக்கால அரசு அல்லது காபந்து அரசு என்பது ஒரு தேசிய அரசைக் குறிப்பதாக இருக்கிறது. பொதுவாக தேர்தலில் வெற்றிபெறும் கட்சி அல்லது கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெறுவார்கள். ஆனால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள இடைக்கால அரசியல் அனைத்துக் கட்சிகளையும், அனைத்துத் தரப்புகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த அரசில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக இருப்பார்கள். நாட்டில் பெரும் வன்முறை, உள்நாட்டுப் போர், தீர்க்கப்படாத பிரச்னைகள், பஞ்சம் உள்ளிட்டவை ஏற்படும்போது இதுபோன்ற அனைத்துக் கட்சி அரசுகள் அமைக்கப்படுவது வழக்கம்.

கிரீஸ், இஸ்ரேல், பாலத்தீனம், தென்னாப்ரிக்கா, லெபனான் போன்ற நாடுகளில் இதுபோன்ற அனைத்துக் கட்சி அரசுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையில் 2015-ஆம் ஆண்டில் இதேபோன்ற அரசு அமைக்கப்பட்டது.

தேசிய அரசு ஏன் அமைக்கப்படுகிறது?

பொருளாதார ரீதியாக அரசுமீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. அரசை மாற்றி அமைத்து, நாட்டை கட்டியெழுப்பப் போகிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக இத்தகைய திட்டத்தை அரசு கையிலெடுத்திருக்கிறது என்கிறார் முன்னாள் எம்.பி.யும் அரசியல் ஆய்வாளருமான மயில்வாகனம் திலகராஜ்.

தேசிய அரசின் அதிகாரம் எப்படிப்பட்டது?

தேசிய அரசின் அதிகாரம் தற்போது இருக்கும் அதிகாரத்தைப் போன்றதே. அதில் எந்த மாறுதலும் இல்லை.

தற்போது ஆளும் எஸ்.எல்.பி.பி. என்கிற இலங்கை பொதுஜன பெரமுன கூட்டணியில் 160 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தேசிய அரசு அமைப்பதால் இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசுக்கு ஆதரவாகச் சேர்க்கமுடியும். வேறு மாற்றம் ஏதுமிருக்காது என்கிறார் திலகராஜ்.

தேசிய அரசு அமைப்பதற்கு ஆதரவு எப்படி இருக்கிறது?

ஆளுங் கூட்டணியைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இதுவரை அதிபரின் தேசிய அரசு அமைக்கும் முயற்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை. இதுவரை அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் இடம்பெற்றவர்களும் ஆளுங் கூட்டணியைச் சேர்ந்தவர்களே. “எதிர்கட்சியைச் சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இடம்பெறாத வரையில் தேசிய அரசு என்பதற்குப் பொருள் கிடையாது” என்கிறார் திலகராஜ்.

தேசிய அரசு அமைப்பதற்கு ஆளுங் கூட்டணிக்குள் முழு ஆதரவு இருக்கிறதா?

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த நான்கு மாதத்துக்கு முன்பு 160 உறுப்பினர்களின் ஆதரவுடன் பட்ஜெட்டை நிறைவேற்றியது அரசு. ஆனால் இப்போது விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோரின் கட்சிகள் அரசுக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றனர். இதன்படி “ஆளுங் கூட்டணியிலேயே சுமார் 20 உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக இருப்பார்கள்” என்கிறார் திலகராஜ்.

ஆயினும் இலங்கையைப் பொறுத்தவரை ஆளுங் கூட்டணியில் உள்ள 11 கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிட்டவை என்பதால் சட்டப்படி கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாகவே அங்கீகரிக்கப்படுகிறார்கள். அதனால் கூட்டணிக் கட்சிகள் விலகிச் செல்வதற்கு வாய்ப்புக் குறைவு என்றே கருதப்படுகிறது.

 தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது?

“ஆளும் கூட்டணியில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறுவதில்லை என்பதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. அதுவும் இத்தகைய நெருக்கடியான நிலையில் அமைச்சரவையில் சேர்ந்தால், அரசியல் ரீதியாகப் பெரும் விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் விலகி இருப்பதையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்வு செய்யும்” என்கிறார் திலகர் ராஜ்

முஸ்லிம் கட்சிகள் நிலை என்ன?

“தேசிய அரசில் அங்கம் வகிக்க இஸ்லாமியக் கட்சிகளும் விரும்பவில்லை. ஆனால் தலைமைக்குக் கட்டுப்படாமல் ஆளுங் கூட்டணிக்கு முஸ்லிம் கட்சிகளின் எம்.பி.க்கள் ஆதரவளிக்க வாய்ப்புள்ளது” என திலகர் ராஜ் கூறுகிறார்.

“மக்களின் கொதிநிலையை அடக்குவதே”

பொருளாதாரத்தை மீளமைத்து நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பதே தேசிய அரசின் நோக்கமாக இருக்கும் என்று ஆளுங் கூட்டணி கூறுகிறது. ஆயினும்

“மக்களின் கொதிநிலையை அடக்குவதே” உண்மையான நோக்கமாக இருக்கும் என்கிறார் அரசியல் ஆய்வாளர் திலகராஜ். இப்போதைக்கு இதன் தேவை ஏதுமில்லை என்கிறார் அவர்.

ஏன் ஆதரவில்லை?

“அமைச்சரவையில் எதிர்க்கட்சிகளைச் சேர்க்க வேண்டுமெனில் முதலில் அனைத்துக் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். அதன் பிறகு இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும். ஆனால் இது எதையும் செய்யாமல் அவசரமாக இதற்கான முயற்சிகள் நடைபெற்றிருப்பதே அடிப்படையான காரணம்” என்கிறார் இலங்கை பத்திரிகையாளர் வித்யாதரன்.

பிரதமர் ஏன் ராஜிநாமா செய்யவில்லை?

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சரவை முழுவதும் ராஜிநாமா செய்தாலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவில்லை. அதற்கான திட்டம் ஏதும் இல்லை என்று பிரதமர் அலுவலகம் விளக்கமளித்திருக்கிறது. இதற்கு சட்ட ரீதியான பின்னணி இருக்கிறது என்கிறார் வித்யாதரன்.

“இலங்கையின் சட்டப்படி அதிபர் பதவி விலக நேர்ந்தால் பிரதமரே தற்கால அதிபராகப் பதவியேற்பார். அதிபரின் அதிகாரம் முழுவதும் பிரதமருக்கு வந்துவிடும். தற்போது எதிர்க்கட்சிகள் மற்றும் போராட்டம் நடத்தும் மக்களின் முக்கியக் கோரிக்கையாக இருப்பது அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பதுதான். அதிபர் மாளிகை முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இது வலுவடைந்து தாம் பதவி விலக நேர்ந்தால் அந்தப் பதவி வேறு யாருக்கும் சென்றுவிடக் கூடாது என்று கோட்டாபய ராஜபக்ஷ கருதியிருக்கலாம். அதன் காரணமாகவே அனைத்து அமைச்சர்களும் பதவி விலகினாலும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் நீடித்திருக்கிறார்.” என்கிறார் வித்யாதரன்

இப்போது கோட்டாபய ராஜபக்சவுக்கு இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன?

“அவர் பதவி விலகுவதுதான்” என்கிறார்கள் பத்திரிகையாளர் வித்யாதரனும், அரசியல் ஆய்வாளர் திலகராஜும்.

“எனினும் பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கவுக்குத் தருவது நெருக்கடியைத் தளர்த்துவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். அதேபோல், ரணில், சிறிசேனா போன்றோரை உள்ளடக்கிய உச்ச ஆலோசனைக் குழுவை நியமிப்பது பற்றியும் அவர் யோசிக்கலாம்” என்கிறார் வித்யாதரன்.

கோட்டாபய ராஜபக்சவை எதிர்க்கட்சிகள் பதவி நீக்கம் செய்ய முடியுமா?

இலங்கை அரசியல் சட்டப்படி அதிபருக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் குற்றப் பிரேணனை எனப்படும் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் அது நிறைவேற்றப்பட வேண்டும்.

எதிர்க்கட்சிகள் ஏன் அதிபரைப் பதவி நீக்கும் தீர்மானத்தைக் கொண்டு வரவில்லை?

எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் சுமார் 65 உறுப்பினர்களே இருக்கிறார்கள். அதிபரைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இது போதுமான எண்ணிக்கை இல்லை. ஆளுங் கூட்டணியில் இருப்போர் பதவி நீக்கத் தீர்மானத்துக்கு வாக்களிக்கக் கூடும் என்ற பொதுவான கருத்து உள்ளது.

“ஒருவேளை அதிபர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச அகற்றப்பட்டாலும் அந்தப் பதவியில் இந்த நெருக்கடி காலத்தில் அமர்வதற்கு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் தயாராக இல்லை” என அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

Previous Story

குமார் சங்ககாரவின் மனைவியும் ஆர்ப்பாட்டத்தில்

Next Story

தற்போது ஜனாதிபதி செயலகம் சுற்றிவளைப்பு!