அணு ஆயுத அட்டாக்தான்! நேரடி வார்னிங் தந்த ரஷ்யா! நடுங்கி நிற்கும் அமெரிக்கா

உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்துமா என்ற கேள்விக்கு ரஷ்ய அதிபர் புடினின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பரபரப்பு பதில் அளித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா போர் முடிவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்தும்.. இதுவரை எதிலும் அமைதிக்கான உடன்படிக்கை செய்யப்படவில்லை.

அதிலும் இப்போது உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை நேட்டோ நாடுகள் தங்கள் மாநாட்டில் பேச அழைத்து உள்ளது. இதனால் கண்டிப்பாக ரஷ்யா இப்போதைக்கு போரை முடிவிற்கு கொண்டு வர எந்த விதமான முயற்சிகளையும் எடுக்காது என்றே நம்பப்படுகிறது.

அணு ஆயுதம்

இந்த போர் தொடங்கியதில் இருந்தே இது அணு ஆயுத போராக இருக்குமோ என்ற அச்சம் நிலவி வந்தது. இதன் காரணமாக ரஷ்யா சார்பாக அணு ஆயுத ஏவுகணைகள் பயிற்சிகள் செய்யப்பட்டன. ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் தயார் நிலையிலும் வைக்கப்பட்டன. இதற்கு பதிலடியாக கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்க அதிபர் பிடனும் அமெரிக்காவின் அணு ஆயுத மையங்களை ஹை அலர்ட்டில் இருக்கும்படி உத்தரவிட்டு இருந்தார்.

அச்சம்

இதனால் இந்த போர் அணு ஆயுத போராக வெடிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட பதற்றமான சூழ்நிலை நிலவும் சமயத்தில்தான் ரஷ்ய அதிபர் புடினின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று சிஎன்என் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். செய்தியாளர் கிறிஸ்டன் அணு ஆயுத பயன்பாடு தொடர்பான கேள்விகளை அடுத்தடுத்து கேட்டார். இதற்கு டிமிட்ரி பதில் அளிக்காமல் இருந்தார். அப்போது புடின் இந்த போரில் அணு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டார் என்று உங்களால் உறுதி அளிக்க முடியுமா என்று அழுத்தமாக மீண்டும் கேட்டார்.

என்ன சொன்னார்?

இதையடுத்து அணு ஆயுதம் பற்றிய சந்தேகங்களுக்கு பதில் அளித்த டிமிட்ரி, எங்களுக்கு என்று பாதுகாப்பு கொள்கைகள் உள்ளன. எங்கள் உள்நாட்டு பாதுகாப்பு என்பது முக்கியம். அதற்கான சில கொள்கைகள், திட்டங்கள் எங்களிடம் உள்ளன. அதில் எப்போது எல்லாம் அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம், என்ன காரணத்தை வைத்து அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்ற லிஸ்ட் இருக்கிறது.

அணு ஆயுதம்

அதை நீங்களே படிக்கலாம். எங்கள் நாட்டிற்கு என்று ஒரு ஆபத்து ஏற்படும் பட்சத்தில், எங்களின் இருப்பிற்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம். எங்களின் கொள்கைப்படி அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம், என்று அவர் குறிப்பிட்டார். மேலும், உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. அங்கு இருக்கும் மக்களை தாக்கும் எண்ணமும் எங்களுக்கு இல்லை.

ஆபரேஷன் நோக்கம்

எங்கள் ஆபரேஷனின் ஒரு நோக்கம், உக்ரைனின் ராணுவ ஆசையை முறியடிக்க வேண்டும். ராணுவ ரீதியாக அந்த நாடு போட்டு இருக்கும் திட்டங்களை முறியடிக்க வேண்டும் என்பதே. அதனால்தான் உக்ரைனில் இருக்கும் ராணுவ தளவாடங்களை குறி வைத்து தாக்கி வருகிறோம். நாங்கள் பொது மக்கள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்துவது இல்லை., என்று குறிப்பிட்டு உள்ளார்.

எச்சரிக்கை

இந்த நிலையில் டிமிட்ரியின் இந்த பேச்சுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், அணு ஆயுதத்தை வைத்து இருக்கும் ஒரு நாடு இப்படி பேச கூடாது. அது மிகவும் ஆபத்து. ரஷ்யாவின் நடவடிக்கைகள் ஆபத்தை குறிக்கின்றன. ரஷ்யா பொறுப்புடன் பேச வேண்டும். ரஷ்யாவை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், என்று குறிப்பிட்டு உள்ளது.

Previous Story

ஜி 20 லிருந்து ரஷ்யாவை வெளியேற்ற சொன்ன அமெரிக்கா! எதிர்த்து சீனா!!

Next Story

"யாரையும் விட மாட்டேன்!"