ஜி 20 லிருந்து ரஷ்யாவை வெளியேற்ற சொன்ன அமெரிக்கா! எதிர்த்து சீனா!!


ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் மிக முக்கியமான நாடான ரஷ்யாவை அதிலிருந்து வெளியேற்ற முடியாது என அதன் நட்பு நாடான சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நோட்டோ கூட்டமைப்பில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி படையெடுத்தது.

ஒரு மாதத்துக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் கோடி மதிப்பிலான பேரிழப்பை உக்ரைன் சந்தித்துள்ளது.

ரஷ்யாவை ஓதுக்கும் உலக நாடுகள்

ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து இருக்கின்றன. பல பன்னாட்டு நிறுவனங்களும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்து அந்நாட்டுடனான வர்த்தகத்தை நிறுத்தி வைத்து இருக்கின்றன.

ஜி 20-ல் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற நினைக்கும் அமெரிக்கா

அதே நேரம் வல்லரசு நாடான சீனா ரஷ்யாவுக்கு பல வகைகளில் ஆதரவு அளித்து வருகிறது. இதனிடையே ஜி 20 உலக நாடுகள் கூட்டமைப்பில் ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து செவ்வாய்க்கிழமை பேசிய அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான், “உக்ரைன் மீது படையெடுத்து இருக்கும் ரஷ்யாவை சர்வதேச அரங்கில் அனைத்து மட்டங்களில் இருந்தும் ஒதுக்குவதற்கு தேவையான அழுத்தத்தை அமெரிக்கா கொடுக்கும்.” என்றார்.

ரஷ்யாவுடன் உறவை தொடர முடியாது

ஜி 20 குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “இனிவரும் காலங்கள் ரஷ்யாவுடன் சமூக உறவை சர்வதேச அமைப்புகள் தொடர முடியாது. சர்வதேச சமூகத்தில் ரஷ்யாவால் சகஜமாக இருக்க வாய்ப்பு இல்லை.” என்றார். அமெரிக்காவின் இந்த கருத்துக்கு சீனா கடும் எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறது.

ரஷ்யாவை ஆதரிக்கும் சீனா

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவிக்கையில், “ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் மிக முக்கியமான நாடு ரஷ்யா. இந்த குழுவில் எந்த நாட்டுக்கும் மற்ற நாட்டை வெளியேற்றும் அதிகாரம் இல்லை.” என்றார்.

கடந்த மாதம் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரில் கலந்துகொண்டார். அப்போது இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசிக்கொண்ட பின்னர், தங்கள் நாடுகளுக்கு இடையேயான உறவை வரம்புகள் இன்றி தொடர முடிவு செய்தனர். அதன் பெயரிலேயே ரஷ்யாவுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Previous Story

ஆப்கனில் மேல் நிலை பள்ளிகளுக்கு மாணவிகள் படையெடுப்பு!

Next Story

அணு ஆயுத அட்டாக்தான்! நேரடி வார்னிங் தந்த ரஷ்யா! நடுங்கி நிற்கும் அமெரிக்கா