தளர்வான ஜனாதிபதி உரையும் இந்தியாவின் சங்கிலி முடிச்சும்!

நஜீப் பின் கபூர்

தலைப்பைப் பார்த்ததும் நாம் இந்த வாரம் இரு விடயங்களைப் பேசப் போகின்றோம் என்பது நமது வாசகர்களுக்குப் புரிந்திருக்கும். ஆம், புதன் கிழமை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய பன்னிரெண்டு நிமிட உரை பற்றி நாம் எமது கருத்துக்களை இங்கு பதிவு செய்ய இருக்கின்றோம். அடுத்து இந்தியாவுக்குப் போய் வந்திருக்கின்ற நமது நிதி அமைச்சர் பீ.ஆர். அங்கு என்ன பேசிவிட்டு வந்திருக்கின்றார். அதற்கு இந்தியத் தரப்பில் பதில்கள் எப்படி அமைந்திருந்தன என்பது பற்றியும் இங்கு பார்க்கலாம்.

ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் இதற்கு முன்பு நமது ஞாபகப்படி நான்கு முறை நாட்டு மக்களுக்கு தொலைக் காட்சியில் உரையாற்றி இருக்கின்றார் நமது ஜனாதிபதி. எம்மைப் போன்று நீங்களும் அவரது அந்த உரைகளை பார்த்திருக்கலாம் கேட்டிருக்கலாம். அந்த அனைத்து உரைகளிலும் அவர் தன்நம்பிக்கையுடனும் பேரின வாசனையுடனுமே அங்கு பேசி இருந்தார் என்பது எமது கணக்கு. ஆனால் அவரது புதன் உரை தளர்வுப் போக்குடனும் மொன்மையாகவும் அமைந்திருந்ததை நாம் பார்த்தோம். மேலும் தன்னையும் மீறி காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை சரி செய்ய நான் முயற்சிக்கின்றேன். நீங்கள் கேட்டுக் கொண்டதால்தான் நான் அரசியலுக்கே வந்தேன் என்றவர், தொடர்ந்தும் தன்னில்  நம்பிக்கை வைக்க வேண்டும் என்று மக்களிடத்தில் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இப்போது ஜனாதிபதி கடந்த காலங்களில் நமக்கு முன் ஆற்றிய உரைகள் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். பேரின வாக்காளர்களுக்கு நன்றி உணர்வை வெளிப்படுத்துகின்ற வகையில்தான் அவற்றைத் தயாரித்தவர்கள் அவருக்கு அன்று எழுதிக் கொடுத்திருந்தார்கள். மற்றுமொரு முறை தனது உரையில் பருப்பு ஆறுபது ரூபாய்களுக்கும் செமன் டின் தொன்நூறு ரூபாவுக்கும் தருவதாகவும் செல்லி இருந்தார். இன்று பருப்பு எத்தனை ரூபாய் செமன் டின்களைக் கண்டு கொள்வதற்குக் கூட எஙகும் கிடையாது. அவற்றின் தற்போதய விலைகளைக் கூட நாம் இங்கு பதிய அச்சப்படுகின்றோம். கட்டுரையை எழுதி அது அச்சேரும் சில மணி நேரத்துக்குள்  விலையில் மாற்றங்கள் நிகழ்வதால் அதன் பதிவை நாம் இங்கு தவிர்த்திருக்கின்றோம்.

தேர்தல் மேடைகளில் விவசாயிகளுக்கு இலவச உரம் என்றும் அவர் பேசி இருந்தார். அந்த உரக் கதைக்கு இன்று என்ன நடந்திருக்கின்றது என்பதும் அனைவரும் அறிந்த கதை. உரத்தையே கண்ணால் காணமுடியாதிருக்கின்றது. கள்ளச் சந்தையில் அபூர்வமாகக் கிடைத்தாலும் ஒரு மூடை உரம் 15000 ரூபாவுக்கும் மேல்தான் அது இருக்கின்றது. அவற்றை எல்லாம் நாம் இங்கு விரிவாக பேச வரவில்லை.

மற்றுமொரு உரையில் தனக்கு கடுமையாகவும் நடந்து கொள்ளவும் முடியும் என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்திருந்ததும் நமக்கு ஞாபகம்  இருக்கின்றது. அவை அனைத்தும் கடும் தெனியிலான பேச்சுக்களாகவே கடந்த காலங்களில் அமைந்திருந்தன. அவற்றுடன் ஒப்புநோக்கின்ற போது ஜனாதிபதியின் இந்த உரை தளர்வாகவும் மொன்மையாகவும் இருந்தது என்றுதான் நமக்குத் தெரிகின்றது. இந்த உரையில் காணப்பட்ட மாற்றங்களை முதலில் பார்ப்போம்.

கடந்த காலங்களில் நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றுகின்றபோது இந்த நாட்டில் ஏறக்குறைய செவிப்புலன் குறைபாடுள்ள 5 இலட்சம் மக்களுக்கு அதனைப் புரிந்து கொள்ளும் வசதிகள் செய்திருக்கப்பட வில்லை. இந்த முறை அவர்களுக்காக செய்கைமூல விளக்கங்கள் கொடுக்கப்பட்டதிலிருந்து அவர்களையும் ஜனாதிபதிக்கு அல்லது அந்த ஏற்பாடுகளைச் செய்கின்றவர்களுக்கு நினைவு வந்திருப்பது ஒரு முன்னேற்றமாக எடுத்துக் கொள்ள முடியும்.

அடுத்தது கடந்த காலங்களில் ஜனாதிபதி பெரும்பாலும் பேரின சமூகத்தினரை மையப்படுத்தியே பேசி வந்திருக்கின்றார். இந்த முறை சிறுபான்மை சமூகங்களுக்கு அதற்கான  தமிழ் மொழிமூலக் குறிப்புக்களும் சம நேரத்தில் முன்வைக்கப்பட்டது நல்ல ஆரோக்கியமான முன்னேற்றமாக நாம் குறிப்பிட முடியும்.  மேலும் அவர் மொன்போக்குடன் இந்த முறை உரையாற்றுவதில் கவனமாக இருந்தார் அல்லது அதற்கான அறிவுறுத்தல்கள் அவருக்கு சொல்லப்பட்டிருக்க வேண்டும். உடல் மொழியிலும் அவர் நிதானமாக தன்னைப் பேனிக் கொண்டார்.

தான் என்னதான் நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றாலும் தன்னையும் மீறி காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றது என்பதனை அவர் பகிரங்கமாக அங்கு ஒத்துக் கொண்டிருந்ததும் பாராட்டத்தக்கதாக இருந்தது. மேலும் இந்த நெருக்கடியான நேரத்தில் அவர் இதிலிருந்து மீள்வதற்கு பொது மக்களிடத்தில் உதவிக்கரம் நீட்டி இருந்தார். கடந்த காலத்தில் பொதுமக்களுக்கு அவர் பேசிய ஒழுங்குகள் தொடர்பாக நாமும் கடும் விமர்சனங்களை அப்போது செல்லியிருந்தோம். ஆனால் இன்று அவரிடம் காணப்படுக்கின்ற நல்ல மாற்றங்களையும் நாம் பாராட்டுகின்றோம்.

என்னதான் இருந்தாலும் நாட்டில் இன்றுள்ள நெருக்கடிகளுக்கு அவர் தன்னால் உடனடியாக எந்தத் தீர்வையும் தரமுடியாது பொதுமக்கள் சில காலத்துக்கு இவற்றைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது புதன் பேச்சின் சுருக்கமாக இருந்தது. ஆனால் இதனை விட மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகின்ற சில முயற்ச்சிகள் பற்றியும் அவர் பேசி இருக்கலாம். அது பற்றி மக்களுக்கு நல்ல நம்பிக்கைகளை கொடுத்து அதற்கான வழிகாட்டியாகவும் அவர் செயலாற்றி இருக்கலாம். முதலில் தன்னிடத்தில்-தனது குடும்பத்திலிருந்து  அந்த மாற்றத்தைக் காட்டியிருக்கலாம்.

அப்படி ஜனாதிபதி என்னதான் செய்திருக்க முடியும் என்று இப்போது நீங்கள் யோசிக்கலாம். அதற்கும் நாம் பல உதாரணங்களை இங்கு சுட்டிக்காட்டுகின்றேம்.

01.பொண்டோர கணக்குத் தொடர்பாக விசாரணையைத் துரிதப்படுத்தி அதன் உண்மைத் தன்மை இருந்தால் அந்தப் பல்லாயிரம் கோடிப் பணத்தை இந்த நெருக்கடியான நேரத்தில் பொது நிதியில் சேர்ப்பேன் என்று அவர் உத்தரவாதம் கொடுத்திருக்க     முடியும்.

02.இந்த நாட்டில் ஊழல் மோசடிகளினால் அரசியல்வாதிகள் அதிகாரிகள் வியாபாரரிகள் போன்றவர்கள் பொது மக்கள் பணத்தில் கொள்ளையடித்தது பல இடங்களில் உறுதியாகி இருந்தது. (சீனி வியாபாரம் நச்சுத் தேங்காய் எண்ணை வர்த்தகம்) அந்த பில்லியன் கணக்கான பணத்தை தேடிப்பிடித்து அதனையும் அரச கஜானாவுக்குள் கொண்டு வருவேன் என்று அவர் சொல்லி மக்களின் நல்லெண்ணத்தை பெற்றிருக்கலாம்.

03.மைதிரி-ரணில் காலத்தில் நடந்த மத்திய வங்கிக் கொள்ளை தொடர்பில் குற்றவாளிகளைத் துரித கெதியில் தண்டித்து அந்தப் பணத்தையும் பொது நிதியில் சேர்க்க நடவடிக்கை எடுப்போன் என்று அதற்கான நடவடிக்கைகளை மக்களிடத்தில் சொல்லி இருக்கலாம்.

04.தனது அறியமை அல்லது பிழையான வழிகாட்டல்களினால் நாட்டுக்கு நடந்த பேரிழப்புக்களை அவர் திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு இந்தப் பேச்சை முன்னெடுத்திருக்கலாம். இதற்ற நல்ல உதாணம் விவசாயிகளது உரம் தொடர்பான பிரச்சினை. அப்படியான உளத்தூய்மையுடன் அவரது பேச்சு அமைந்திருக்கவில்லை. வழக்கமாக சராசரி மனிதர்கள் கடைத் தெருவில் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் பற்றி பேசுகின்ற புள்ளி விபரங்களைத்தான் அவரும் நாட்டு மக்களுக்கான உரையில் சொல்லி இருந்தார்.

05.அரசியல் வாதிகள் அதிகாரிகள் வர்த்தர்கள் பொது நிதியில் எந்த வகையிலும் ஊழல் பண்ணி பணம் சேர்க்கத்தான் இதன் பின்னர் இடமளிக்க மாட்டோன் என்று அவர் பிரகடணம் பண்ணி அதற்கான திட்டங்களை நடை முறைப்படுத்தும் ஒழுங்குகளை மக்களுக்கு சொல்லி இருக்கலாம்.

06.பேரினவாத கடும் போக்குத்தான் சர்வதேசத்துடன் நல்லுறவுகளைக் கெடுத்து விட்டது என்பதனை தற்போது உணர்ந்திருக்கின்ற அவர் அதிலிருந்து தான் விடுபடுவதற்கான ஏற்பாடுகள் பற்றி நேரடியாக முடியாவிட்டாலும் மறை முகமாக அதற்கான சில சமிக்ஞைகளை அந்த உரையில் சேர்த்திருக்கலாம்.

07.நாட்டுக்கு இந்த நெருக்கடி நிலை வருவதற்கு எதிரணி பதவியில் இருந்த காலத்தை மட்டும் குற்றம் சாட்டாது தனது சகோதரர் காலத்திலும் குறைபாடுகள் தவறுகள் நடந்திருக்கின்றது என்பதனை அவர் உளத்தூய்மையுடன் அங்கு பேசி இருக்கலாம்.

08.நீதிதுறையில் இதுவரை நடந்த குறைபாடுகள் இதன் பின்னர் நடக்காது என்று உத்தரவாதத்தையும் மக்களுக்குக் கொடுத்திருக்கலாம்.

இப்படியான வார்த்தைகள் அவர் உரையில் அடங்கி இருந்தால் மக்களுக்கு அவர் மீது அதிரடியான ஒரு நம்பிக்கை பிறக்க அதிகபட்ச வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கும். இதன் மூலம் கோடி கோடியாக பணம் வர இருக்கும் மார்க்கங்களை அவர் கண்டு கொள்ளாமல் வெறுமனே என்னை நம்புங்கள். நான் நீங்கள் சொல்லித்தான் அரசியலுக்கு வந்தேன் என்று பேசி நிகழ்கால நெருக்கடிகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தான் தப்பித்து அடுத்தவன்தான் குற்றவாளி என்று சொல்லி தற்போது சூழ்நிலையில் மக்களது நல்லெண்ணத்தை ஒரு போதும் ஜனாதிபதி ஜீ.ஆரால் வென்றெடுக்க முடியாது என்பதை நாம் அடித்துச் சொல்கின்றோம்.

இப்படியான ஒரு நிலை நாட்டில் வரப்போகின்றது என்பதனை நாம் ஜனாதிபதிக்கு ஒர் பகிரங்கக் கடிதம் என்று தலைப்பில் நீண்ட காலத்துக்கு முன்பே எழுதிய ஒரு கட்டுரையில் நமது வார இதழில் சொல்லி மக்களைத் தெளிவுபடுத்தி இருந்தோம். எனவே மக்கள் அழைத்த போது வந்த நீங்கள் மக்கள் சொல்லும் போது வெளியேறவும் தயாராக இருக்க வேண்டும். இதுதான் இன்றைய நிலை. அத்துடன் ஜனாதிபதி உரையில் நாம் சொன்ன வார்த்தைகளை சேர்த்துக் கொள்வதில் அவருக்குள்ள நெருக்கடிகளை நாம் அறிவோம். கள்வர்கள் வீட்டிற்குள்ளே குடியிருக்கும் போது வெளியே கேட்டு மதில் காவல்காரன் என வைத்திருப்பதில் என்னதான் ஆகப் போகின்றது என்பதனையும் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஜனாதிபதியின் உரை தொடர்பான எமது பார்வைகள் அப்படி இருக்க, இப்போது இந்தியா நமக்குப் போட்டிருக்கும் சங்கிலி முடிச்சு என்ன என்று பார்ப்போம். நமது நிதி அமைச்சர் கடந்த முறை இந்தியா போனபோது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க பெரும் முயற்ச்சி எடுத்தாலும் அன்று அது சாத்தியப் படவில்லை. பிரதமர் வீடு தேடி வந்தவரை வரவேற்கத் தயாரக இல்லை என்றுதான் நாம் இதனைப் பார்க்க வேண்டும். எனவேதான் பிரதமர் நிகழச்சி நிரலில் வேறு அலுவல்கள் என்று நியாயம் சொல்லப்பட்டது. ஆனால் உண்மை அதுவல்ல. இலங்கையால் கொடுக்கப்பட வேண்டிய உறுதி மொழிகள் தயாராக இல்லாத காரணத்தால் தான் அன்று பிரதமர் பசிலுக்குப் பிடி கொடுக்காமல் நழுவி விட்டார்.

ஏற்கெனவே கொடுக்கப்பட்ட எத்தனையோ வாக்குறுதிளை இலங்கை நிறைவேற்றவில்லை. இன்று கதை வேறு. இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியால் இந்தியாவே தஞ்சம் என்று அதன் காலடியில் போய் நிற்க்கின்றது இலங்கை. அதே போன்று இந்தியா எதிர்பார்க்கின்ற அனேகமான விடயங்கள் ஓகே என்ற நிலைக்கு இப்போது வந்து விட்டது. திருகோணமலை எண்ணைக் குதங்கள் இந்தியா வசம் வந்து விட்டது. வடக்கு கிழக்கில் அதானி குழுமத்தினருக்கு மூலதனங்களை மேற்கொள்வதற்கான வசதிகளுக்கும் இலங்கை ஒத்துக் கொண்டதாகத் தெரிகின்றது. வடக்குக் கிழக்கில் இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியங்களுடனான வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் வந்திருக்க வேண்டும்.

அத்துடன் வடக்குக் கிழக்கு மாகாணசபை தேர்தல்களை அரசு விரைவில் நடாத்துவதற்கு இணங்கி இருக்கும். இது இலங்கை தமிழ் தரப்பினரது முக்கிய கோரிக்கை. குறைந்த பட்ச எதிர்பார்ப்பு இது. இந்தப் பின்னணியில்தான் இந்த முறை மோடி நமது நிதி அமைச்சரை பீ.ஆரைச் சந்திக்க ஒத்துக் கொண்டிருக்கின்றார் என்று தெரிகின்றது. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை இது வரை மறைத்து வைத்திருப்பது போல இந்தியாவுடனான உடன்பாடுகளிலும் பல விடயங்கள் மூடு மந்திரமாகத்தான் இருக்கும் என்று நாம் கருதுகின்றோம்.

பலாலி துறைமுகத்தை சர்வதேசத்துக்குத் திறந்து விடுவது, இந்திய இலங்கைக்கான கப்பல் சேவைகள். இந்திய-இலங்கை உல்லாசப் பிரயாணத்துறை அபிவிருத்தி அதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள். இந்திய இலங்கை மீனவர் பிரச்சினைகள் தொடர்பான தீர்வுத் திட்டங்கள். இலங்கை கைது செய்திருக்கின்ற மீனவர்கள், படகுகள் போன்றவற்றை விடுவிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகளில் ஒரு தீர்மானம் வந்திருக்க முடியும் என்று நாம் நினைக்கின்றோம்.

இலங்கை இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்க்கின்றது. தற்போது இந்திய நாணயப்படி 7600 கோடி ரூபாய் கிடைக்க இருக்கின்றது. இது நமது நாணயப் பெருமதிப்படி 26000 கோடி ரூபாய் என்ற அளவுக்கு வருகின்றது. இது தவிர எரி பொருள் மற்றும் அன்றாட உணவுப் பொருட்கள் என்பவற்றையும் இலங்கைக்கு இந்திய கடனாக வழங்கச் சம்மதித்திருக்கின்றது. என்னதான் இருந்தாலும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு இது எந்தளவுக்கும் போதுமானதாக இல்லை.

இதற்கு முன்னரும் எரிபொருள் மற்றும் மருந்து வகைகளுக்கென இந்திய இலங்கைக்கு 1.4 பில்லியன் டொலர் கடன் உதவிகளைச் செய்திருந்தது. இப்படி இந்தியா உதவிகளைச் செய்து வந்தாலும் இலங்கை முற்றும் முழுதாக இந்தியாவின் தயவில் இருக்க முடியாது. ஏற்கெனவே சீனாவுடன் பெற்ற கடன்கள் அதன் உறவுகளை இலங்கையால் ஒரு போதும் முறித்துக் கொள்ள முடியாது என்பதுதான் யதார்த்த நிலை. எமக்குப் புரிகின்ற இராஜதந்திரப்படி எதிர்காலத்தில் வடக்குக் கிழக்கு மாகாணங்கள்-பிரதேசங்கள் இந்தியாவின் பிடியிலும் தெற்கு சீனாவின் பிடியிலும்தான் இதன் பின்னர் காரியங்கள் நடக்கப் போகின்றன எனக்கருத வேண்டியுள்ளது.

நன்றி: ஞாயிறு தினக்குரல் 20.03.2022

Previous Story

இம்முறை ஜனாதிபதி பாஸ்!

Next Story

நாட்டை நாசம் செய்த ராஜபக்ஷ சகோதரர்கள்! சர்வதேச ஊடகம் பகிரங்க குற்றச்சாட்டு!!