திடீர் திருப்பம்! கலங்கும் ஜெலன்ஸ்கி!

உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும். நிலையில், திடீர் திருப்பமாக நேட்டோ அமைப்பில் இணைவது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டில் கடந்த பிப் 24ஆம் தேதி தொடங்கிய போர் இன்னும் 20ஆவது நாளா இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பல பகுதிகளில் ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, உக்ரைன் தலைநகர் கீவ், முக்கிய நகரங்களான கார்கிவ், மரியுபோல் நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் தலைநகர் கீவ்வில் ஊரடங்கும் கூட அமல்படுத்தப்பட்டுள்ளது.

அமைதி பேச்சுவார்த்தை

இந்தப் போரை கண்டித்து உலக நாடுகள் பல்வேறு ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. மறுபுறம் உக்ரைன் ரஷ்யா நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் கடந்த மார்ச் 10ஆம் தேதி துருக்கி நாட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், இதில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தொடர்ந்தே வருகிறது.

திடீர் திருப்பம்

இந்நிலையில், திடீர் திருப்பமாக நேட்டோ குறித்தும் நேட்டோவில் இணைவது குறித்தும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் உறுப்பினராகாது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ராணுவப் படைத் தளபதிகள் மத்தியில் பேசிய ஜெலன்ஸ்கி இதைக் குறிப்பிட்டதாக ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேட்டோ

நேட்டோவில் உறுப்பினராவது தொடர்பாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “உக்ரைன் நேட்டோவில் உறுப்பினராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். பல ஆண்டுகளாக நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய எப்போதும் கதவுகள் திறந்தே இருப்பதாகக் கூறி வந்தனர். ஆனால், இப்போது அந்த நேட்டோ அமைப்பில் இணைய முடியாது என்பதைப் புரிந்து கொள்கிறோம். இது உண்மை தான். இதை நாங்கள் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

நிபந்தனைகள்

உக்ரைன் போரில் இது முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் போரைத் தொடங்கும் முன்பு உக்ரைனுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் சில நிபந்தனைகளை அதிபர் புதின் விதித்திருந்தார். குறிப்பாக நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக் கூடாது, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தனது வீரர்களை நேட்டோ அமைப்பு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் உள்ளிட்டவை இதில் முக்கியமானவை.

அதிபர் புதின்

ரஷ்ய அதிபர் புதின் இதைப் போர் என்றே குறிப்பிடக் கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே இந்த ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நல்ல முடிவு எடுக்கப்பட்ட உடன் இந்த ராணுவ நடவடிக்கை உடனடியாக முடித்துக் கொள்ளப்படும் என அவர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இந்தச் சூழலில் புதின் நிபந்தனைகளில் முக்கியமானதை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ளதாகவே ஜெலன்ஸ்கியில் இந்தப் பேச்சில் தெரிகிறது.

கோரிக்கை நிராகரிப்பு

சில நாட்களுக்கு முன்பு, ரஷ்யாவின் குண்டு மழையில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்கும் வகையில், அந்நாட்டின் வான்வழியைப் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக (No fly zone) அறிவிக்க வேண்டும் என நேட்டோ அமைப்பிடம் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், இந்தக் கோரிக்கையை நிராகரித்த நேட்டோ அமைப்பு, அந்த முடிவு போரை ஐரோப்பாவிலும் பரவச் செய்யும் எனத் தெரிவித்திருந்தது. அப்போதே நேட்டோ அமைப்பு மீது ஜெலன்ஸ்கி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Story

ரஷ்யா பதிலடி: பைடன், ட்ரூடோ மீது பொருளாதார தடைகள்

Next Story

ஹிஜாப் கர்நாடக தீர்ப்பு - இலங்கை பேராசிரியர்