நாட்டில் ஞானா அக்கா ஆட்சி ?

ஜனாதிபதியின் வீட்டுக்கு ஹிருணிகா சென்றிருக்கக் கூடாது. அநுராதபுரத்திலுள்ள ‘ஞானா’ அக்காவின் வீட்டுக்கு சென்றிருக்க வேண்டும். ஏனெனில் இப்போது ஜனாதிபதி அந்த அக்காவின் பேச்சைக் கேட்டுத்தான் ஆட்சி நடத்துகிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணிகுமாரி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்  கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டில் எரிவாயு வெடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாது பெற்றோர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இன்று பால்மா, எரிவாயு பெற்றுக்கொள்ளவும் வரிசையில் காத்திருக்க வேண்டியதுடன், பணிக்குச் செல்ல போக்குவரத்து இன்றியும் மின்சாரம் இன்றியும் தவிக்கும் துர்ப்பாக்கிய நிலைமைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளை கூறவே ஹிருணிகா பிரேமசந்திர மிரிஹானவிலுள்ள ஜனாதிபதியின் வீட்டுக்குச் சென்றார். ஆனால், அவரை கொலை செய்வதற்கு ஆட்களை அனுப்பியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்துக்கும் முட்டை வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆனால், 15ஆம் திகதி அனைத்து பெண்களையும் அழைத்து வந்து கொழும்பை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவோம். முடிந்தால் அதனை தடுத்து நிறுத்துங்கள் என ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்றேன்.

இதேவேளை, ஹிருணிகா நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள். அன்று நீங்கள் மிரிஹானவுக்குச் செல்லாது அநுராதபுரத்திலுள்ள ‘ஞானா’ அக்காவின் வீட்டுக்கே சென்றிருக்க வேண்டும். மற்றவர்கள் கூறுவதை ஜனாதிபதி கேட்கமாட்டார். மாறாக, அந்த அக்கா கூறுவதையே கேட்கின்றார்.

ஆகவே, அடுத்த முறை உங்களிடம் வரும் போது, பால்மா இன்றி குழந்தைகள் தவிக்கின்றன, பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், உணவின்றி மக்கள் தவிக்கின்றனர் மற்றும் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது என்பதை ஜனாதிபதியிடம் கூறுமாறு ‘ஞானா’ அக்காவிடம் நான் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

ஞானா அக்கா என்பவர் அநுராதபுரத்தில் உள்ள பிரபல ஜோசியர் என்பதுடன், அரசின் பல முக்கியஸ்தர்கள் அவரின் வார்த்தைகளை கேட்டு நடப்பதுடன் குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஞானா அக்காவின் ஆலோசனைகளை தீவிரமாக பின்பற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. -TW

Previous Story

உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமீன்!

Next Story

வேதனையில் ஜனாதிபதி ஜீ.ஆர்.