முடிவை நோக்கி போர்! விட்டுக்கொடுக்க ரெடி! ரஷ்யாவிற்கு சாதகம்!?

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் உச்சத்தில் இருக்கும் நிலையில் இரண்டு நாடுகளுக்கு இடையில் அமைதி உடன்படிக்கை ஏற்படுவதற்கான லேசான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. முக்கியமாக ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்று உக்ரைன் சில முக்கியமான விஷயங்களை விட்டுக்கொடுக்கும் பட்சத்தில் அதன் மூலம் போர் முடிவிற்கு வருமோ என்ற கேள்வி எழுந்துள்ளது!

உக்ரைன் – ரஷ்யா போர் எப்படி முடியும் என்பதை பார்க்கும் முன் இந்த போருக்கான அடிப்படையான சில காரணங்களை பார்க்க வேண்டும். காரணம் 1 – உக்ரைன் நாடு நேட்டோ படையில் சேர முயன்றதை ரஷ்யா விரும்பவில்லை. இதனால் ரஷ்யா தனது பாதுகாப்பை கருதி உக்ரைன் மீது போர் தொடுத்தது.

காரணம் 2 – உக்ரைனில் இருக்கும் புரட்சியாளர்கள் கொண்ட டொன்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரண்டு பிராந்தியங்களை தனி அதிகாரம் கொண்ட சுதந்திர பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று ரஷ்யா கூறியது. காரணம் 3 – கிரிமியாவை ரஷ்யாவின் பகுதியாக அங்கீரிக்க வேண்டும் என்று ரஷ்யா கூறியது.

தனி பகுதி

இதுதான் போருக்கான காரணம். டொன்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரண்டு பகுதிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த இரண்டு பகுதிகளுக்கு சுதந்திரம் கொடுப்பேன். இந்த இரண்டு பகுதிகளை தனி குடியரசாக அறிவிக்கிறேன் என்று கூறித்தான் புடின் இந்த போரையே தொடங்கினார். இந்த இரண்டு பகுதிகள் ரஷ்ய எல்லையில் உக்ரைன் உள்ளே இருக்கும் பகுதிகள், இங்கு ரஷ்யர்கள் அதிகம் உள்ளனர். உக்ரைனுக்கு எதிரான புரட்சி படை இங்குதான் செயல்பட்டு வருகிறது.

என்ன இடம்

இப்போது ரஷ்ய போரில் ரஷ்ய படைகளுடன் இணைந்து உக்ரைனில் போர் செய்வதும் இதே படைகள்தான். இங்கு இருக்கும் பெரும்பாலான மக்கள் எப்போதும் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பார்கள். தேர்தலில் கூட ரஷ்ய ஆதரவு வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள். கடந்த முறை செலன்ஸ்கி வெற்றிபெற்றபின் இங்கு புரட்சி படைகள் வேகம் எடுத்தனர். டொன்ஸ்க் என்பதன் பழைய பெயர் ஸ்டாலினோ.. அந்த அளவிற்கு ரஷ்யாவுடன் இவை நெருக்கமானவை.

இலங்கை வடக்கு

கருங்கடலுக்கு அருகே இருப்பதாலும், இங்கு அதிக அளவில் நிலக்கரி இருப்பதாலும் ரஷ்யா இதை முக்கியமான பகுதியாக கருதுகிறது. இதை முன்னிட்டே இரண்டு பகுதிகளை தனி குடியரசு நாடாக ரஷ்யா அறிவித்துள்ளது. அதோடு இந்த இரண்டு பகுதிகளுக்கும் 2018ல் இருந்து இரண்டு தனி அதிபர்களும் இருக்கிறார்கள். அங்கு தனியாக தேர்தல் நடத்தப்பட்டு, அதிபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இதை உக்ரைன் அங்கீகரிக்கவில்லை. மாறாக ரஷ்யா இந்த இரண்டு அதிபர்களையும் அங்கீகரித்து உள்ளது.

ரஷ்யா கோரிக்கை என்ன

இதுதான் இரண்டு பகுதிகளின் கதை. இது போக கிரிமியாவை 2014லேயே ரஷ்யா ஆக்கிரமித்து தனது நாட்டில் ஒரு பகுதியாக அறிவித்துவிட்டது. ஆனால் இதை உக்ரைன் ஏற்கவில்லை. இப்போது போரை நிறுத்த வேண்டும் என்றால் ரஷ்யா அதிபர் புடின் 3 கண்டிஷன் போட்டுள்ளார்.

கண்டிஷன் 1 – டொன்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரிக்க வேண்டும்.

கண்டிஷன் 2 – கிரிமியாவை ரஷ்யாவின் பகுதியாக அங்கீகரிக்க வேண்டும்.

கண்டிஷன் 3- நேட்டோவில் இணையும் முடிவை கைவிட்டு, உக்ரைன் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வந்து, உக்ரைன் நடுநிலையாக இருக்க வேண்டும்.

நேரடியாக பதில் அளிக்க மறுப்பு

ரஷ்யாவின் இந்த கோரிக்கை குறித்து இரண்டு நாட்களாக நடைபெற்ற வெவ்வேறு செய்தியாளர் சந்திப்பில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதில் சில விஷயங்களுக்கு நேரடியாக பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார் என்றாலும் மறைமுகமாக அவர் ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்க தயார் என்ற நிலையில் உள்ளது போல தெரிகிறது. உதாரணமாக, நேட்டோ பற்றிய கேள்விக்கு, உக்ரைன் இனி நேட்டோவில் இணையாது. நாங்கள் மண்டி இட்டு வாழ முடியாது.

நேட்டோ

நேட்டோ ரஷ்யாவை எதிர்க்க விரும்பவில்லை. நேட்டோ பெரிய விஷயங்களில் தலையிட விரும்பவில்லை. அதனால் நாங்களும் நேட்டோவில் இணையும் திட்டத்தை கைவிடுகிறோம். அவர்களும் எங்களை ஏற்கவில்லை என்று உக்ரைன் அதிபர் கூறினார். சர்ச்சைக்குரிய இரண்டு பகுதிகள் பற்றி பதில் அளித்த அவர், இந்த இரண்டு பகுதிகளை பற்றி சமரசம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். இங்கு இருக்கும் மக்களின் பாதுகாப்பே எனக்கு முக்கியம். பேச்சுவார்த்தை செய்து, compromise செய்ய தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

சேர்ந்து பராமரிப்பு

அதேபோல் கிரிமியா குறித்த கேள்விக்கு, அது தொடர்பாகவும் பேசலாம். இரண்டு நாடுகளும் சேர்ந்து நிர்வகிக்கும் வகையில் பாதுகாப்பு ரீதியாக ஒப்பந்தங்களை செய்யலாம் என்று குறிப்பிட்டார். அதாவது உக்ரைன் அதிபர் தனது கடுமையான நேட்டோ, டொன்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்துள்ளார். நேட்டோவில் இணைய மாட்டேன் என்று கூறிவிட்டார்.. போருக்கான முதல் காரணம் சரி செய்யப்பட்டுவிட்டது.

ரஷ்யாவிற்கும் சிக்கல்

டொன்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை தனி நாடாக அங்கீகரிப்பது பற்றி compromise செய்ய தயார் என்றும் கூறிவிட்டார். இதனால் இரண்டாவது காரணமும் ஓவர். எனவே இந்த இரண்டு விஷயங்கள் போரை முடிவை நோக்கி கொண்டு செல்கின்றனவோ என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரண்டு பகுதிகளை துறந்துவிட்டு, ரஷ்யா பிடித்த இடங்களை மீண்டும் பெற்றுக்கொண்டு, நேட்டோவுடன் நட்பை முறித்துக்கொண்டு, உக்ரைன் போரை அதிபர் செலன்ஸ்கி முடிவிற்கு கொண்டு வருகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஷ்யாவிற்கு வேறு வழி

ரஷ்யாவிற்கு இதில் வேறு வழி இல்லை. ரஷ்யாவும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மேற்கு உலக நாடுகளின் அழுத்தத்தை கடுமையாக எதிர்கொண்டு வருகிறது. முக்கியமாக கடுமையான பொருளாதார தடைகளை ரஷ்யா எதிர்கொண்டு வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக அந்த நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் உக்ரைனின் இந்த ஆஃபரை ஏற்றுக்கொண்டு ரஷ்யா போரை முடிவிற்கு கொண்டு வரும் நிலைப்பாட்டை எடுக்கும் வாய்ப்புகளும் உள்ளன… என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

Previous Story

மேற்குலக நாடுகளே முக்கிய காரணம்-உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

Next Story

5-மாநில தேர்தல் முடிவுகள் 10ஆம் தேதி