யார் இந்த கங்குபாய்? மாஃபியா ராணியாக மாறியது எப்படி?

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாகியுள்ள கங்குபாய் திரைப்படத்தின் மூலம் இணையத்தில் தேடுபொருளாகியிருக்கிறார் கங்காபாய். எழுத்தாளர் சைதி ஹுசைன் எழுதிய மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை என்ற புத்தகத்தில் இடம்பெற்ற கதையை அடிப்படையாகக் கொண்டுதான் இது படமாகி இருக்கிறது என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். உண்மையில் என்ன சொல்கிறது இந்தப் புத்தகம்? உண்மையான கங்குபாயின் கதை என்ன?

அந்த 16 வயதுப் பெண்ணுக்கு இது ஒரு வினோதமான அனுபவம். நன்கு அலங்கரிக்கப்பட்டு தான் இந்த அறையில் உட்கார வைக்கப்பட்டிருப்பதன் காரணம் முழுமையாகத் தெரியவில்லை என்றபோதும் தனக்கு ஏதோ தவறாக நடக்கிறது என்று மட்டும் அவளது உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது.

ஆம். அவள் நினைத்தபடி அந்தத் தவறு நடக்கத்தொடங்கியது. அறைக்கதவு திறக்கப்பட்டது முதல், முதல் வாடிக்கையாளர் வெறுப்படைந்து, பாலியல் தொழிலாளர் விடுதி பொறுப்பாளரான பெண்ணிடம் அதிருப்தி தெரிவித்தது வரை என எல்லாமே அன்று அந்தப் பெண்ணுக்கு எதிராகத்தான் நடந்தன. தன் கணவன் தன்னைக் கூட்டிச் செல்ல வருவான் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது. ஆனால், தன்னை இங்கு விற்றதே தன் கணவன்தான் என்ற உண்மை தெரிந்ததும் அதுவும் உடைந்து போனது.

இனி மது என்ற இந்தப் பெண்ணுக்கு இரண்டு வாய்ப்புகள் உண்டு. ஒன்று இந்த இடத்தில் தொழில் செய்துகொண்டு தொடரலாம் அல்லது தப்பிச் செல்லலாம். ஆனால், இங்கிருந்து தப்பிச் செல்லும் முயற்சியில் பிடிபட்டால் இறக்கவும் நேரிடும். எனவே, மூன்றாவது வாய்ப்பை முயற்சித்தாள் மது. அதாவது, உண்ண மறுத்து தன்னை வருத்திக் கொண்டு எதிர்ப்பைப் பதிவு செய்தால் நம்மை அனுப்பிவிடுவார்கள் என்று நம்பி உண்ணாவிரதத்தைக் கடைபிடித்தாள் மது.

ஆனால், 1000 ரூபாய்க்கு வாங்கிய ஒரு பண்டத்தை, லாபம் பார்க்காமல் எப்படி விடுவார் ஒரு வியாபாரி? இந்தப் பெண்ணையும் 1000 ரூபாய்க்குத்தான் வாங்கியிருந்தார் ரஷ்மி (அந்த விடுதியின் பொறுப்பாளர்). எனவே மெல்ல அவளது மனமாற்றத்துக்காகக் காத்திருந்தார். ஆனால், மதுவின் பிடிவாதம் மாறுவதாயில்லை.நாளுக்கு நாள் நிலைமை மோசமாக, இந்தப் பெண் விவகாரத்தைக் கையாள ரஷ்மிக்கு இப்போது ஒரே ஒரு வழி மட்டும்தான் இருந்தது. அது கங்குபாயை அழைப்பது.

ரஷ்மியின் விடுதிக்கு வந்த கங்குபாய், மதுவைச் சந்தித்து எல்லாம் பேசியபிறகு, ரஷ்மிக்கு ஒரு ஆலோசனையும் எச்சரிக்கையும் விடுக்கிறார். “எல்லாத் தொழிலிலும் நட்டம் உண்டு. இந்தப் பெண்ணை உன் தொழிலில் ஏற்பட்ட நஷ்டமாகக் கருதிக்கொள். பத்திரமாக இவளை இவளது கிராமத்துக்கு அனுப்பி வை. இனியொரு முறை விருப்பத்துக்கு மாறாக யாரையும் இதில் ஈடுபடுத்தாதே” என்று தனக்கே உரிய தொனியில் எச்சரித்து விட்டு அங்கிருந்து சென்றார்.

பெண்ணை வெறும் உடலாக மட்டுமே பார்க்கும் தொழில் இது. இதில், உடல்தான் மூலதனம். அதிலும், பெண்னின் மனதை பிரதான பொருண்மையாகப் பார்க்கும் கனிவு மிக்க கணிகையாக இருந்தார் கங்குபாய். 16 வயது மதுவின் நிலைமையை உணர்ந்து கொண்டு அவர் எடுத்த இந்த முடிவுக்கான பின்னணிக் காரணத்தை தெரிந்துகொண்டால், அதுதான் யார் இந்த கங்குபாய் என்ற கேள்விக்கு பதில்.

மாஃபியா ராணி

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சைதி ஹுசைன் 2011ஆம் ஆண்டு ஒரு நூலை எழுதினார். Mafia Queens of Mumbai: Stories of women from the ganglands என்ற அந்த நூலில் மும்பையின் சக்தி வாய்ந்த பெண் மாஃபியாக்கள் குறித்து தொகுக்கப்பட்டிருந்தது. அதில், ஒன்றாகத்தான் கங்குபாயின் கதையும் இடம்பெற்றிருந்தது.

இந்தக் கதையைத் தழுவித்தான் தற்போது படம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் திரைப்படத்துடன் சேர்த்து சில கட்டுகதைகளும் இணையத்தில் உலா வருகின்றன. இந்த நிலையில், அந்தப் புத்தகம் சொல்வது என்ன என்பதை பார்க்க வேண்டியது அவசியமாகிறது. குஜராத் மாநிலத்தில் பிறந்து மும்பை மாநகரில் மாஃபியா ராணியாக இவர் மாறியது எப்படி? மாற்றியது எது?

யார் இந்த கங்குபாய்?

குஜராத் மாநிலம், கத்யாவாடி பகுதியில் பிறந்தவர் கங்கா. வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் நிறைந்த படித்த குடும்பத்தில் பிறந்த இந்தப் பெண்ணுக்கு, ஆண் குழந்தைகளைப் போலவே அந்தக் காலகட்டத்தில் கல்வியும் வழங்கப்பட்டது. இதில் கூடுதல் கவனமுடன் இருந்தார்கள் கங்காவின் பெற்றோர்கள். ஆனால், கங்காவுக்கு கல்வியுடன் சேர்த்து சினிமா மீதான ஆர்வமும் அதிகமாக இருந்தது. அத்துடன், அந்த ஆசை நிறைவேற மும்பை நகரம்தான் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையும் கூடவே வளர்ந்தது.

இந்த நிலையில், ராம்னிக் லால் என்பவரை தன் கணக்கராக நியமித்தார் கங்காவின் தந்தை. இந்த ராம்னிக் லால் முன்பு மும்பையில் இருந்தவர் என்ற தகவலும் கங்காவுக்குத் தெரியவர, இவருடன் நட்பு உருவாகிறது. சொல்லப்போனால், வலிந்து நட்பை உருவாக்கிக் கொள்கிறாள் கங்கா. இது திடீரென்று ஒரு புள்ளியில் காதலாக மாறியது. எப்படியும் பெற்றோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதால் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு மும்பைக்கு ஓடி வருகிறார்கள் கங்காவும் ராம்னிக் லாலும். மும்பை சென்றதும் சினிமாவில் சேர்த்துவிடுவதாக வாக்குக் கொடுத்திருந்தார் ராம்னிக்.

கங்கா தன் வீட்டிலிருந்து கொண்டு வந்த பணத்தின் மூலம், இருவரும் மும்பையில் சுற்றிவிட்டு, பின்னர் “நமக்கென்று ஒரு வீட்டைப் பார்த்துவிட்டு உன்னை அழைத்துக் கொள்கிறேன். அதுவரை என் உறவினரான ஷீலா அத்தையின் வீட்டில் இருந்துகொள்” என்று கூறி அவளை ஒரு இல்லத்தில் விட்டுவிட்டு சென்றார் ராம்னிக்.

ஆனால், பிறகுதான் தான் அங்கு விற்கப்பட்டுள்ளது கங்காவுக்குத் தெரியவந்தது. வெறும் 500 ரூபாய்க்காக தாம் அங்கு விற்கப்பட்டுள்ளதை ஏற்கமுடியாதபோதும், தான் நிச்சயமாக வீட்டுக்கு திரும்ப முடியாது என்பதை உணர்ந்துகொண்டார் கங்கா.

நீண்ட நாட்கள் உண்ணாமல் உறங்காமல் போராடிய பிறகு வேறு வழியின்றி இந்த தொழிலுக்கு ஒப்புகொள்ளத் தொடங்குகிறார் கங்கா. விருப்பமின்றி இந்த வாழ்க்கை நகர்கிறது. எனினும், காமாத்திபுரா பகுதியின் மிகப்பிரபலமான, அதிக பணம் பெறும் கணிகையாக மாறிவிடுகிறார் கங்கா.

வேதனையும் விடுதலையும்

மும்பையின் நிழலுலகம் வலுவாக இருந்த காலகட்டம் அது. குறிப்பாக கரிம் லாலா, வரதராஜ முதலியார், ஹாஜி மாஸ்தான் ஆகிய மாஃபியா தலைவர்களின் காலம் அது. அந்தச் சமயம் மும்பையைச் சேர்ந்த பதான் குழுக்களில் (மாஃபியா கும்பல்) ஒன்றைச் சேர்ந்த ஒருவர், கங்காவின் வாடிக்கையாளராக வந்தபோது, மிருகத்தனமாக நடந்துகொள்கிறார். அத்துடன் பணமும் கொடுக்காமல் சென்று விடுகிறார்.

ஆனால், பதான் குழுவின் ஆட்களை பகைத்துக் கொண்டு தொழில் நடத்தமுடியாது என்பதால், ஷீலாவும் இதைத் தடுக்கவில்லை. இதன் விளைவாக அடுத்த ஒரு வாரத்துக்கு உடல்நலமில்லாமல் அவதிப்படுகிறார் கங்கா. எனினும் இது இத்தோடு முடியவில்லை.

மீண்டும் ஒருமுறை அதே நபர், இன்னும் குரூரமாக நடந்துகொள்கிறார். இந்த முறை மிகமிக மோசம். எவ்வளவு மோசம் என்றால், இந்த முறை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் தாக்கத்தால் மனதளவில் பயந்து கூடுதலாக சில நாட்கள் கூட மருத்துவமனையிலேயே இருந்தார்.

ஆனால், இந்தமுறை ஒரு தீர்மானத்தை மேற்கொண்டார். இது போல இனி எந்தப்பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று. ஆனால், இந்த விவகாரத்தில் அவருக்கு உதவ யாருமில்லை. எனவே, தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களிடமிருந்து, அந்த நபரைக் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முயற்சிக்கிறார். ஒருவழியாக அந்த நபரின் பெயர் ஷௌகத் கான் என்றும், அவர் கரிம் லாலாவின் குழுவைச் சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது.

1940- 1980 வரையிலான காலகட்டத்தில் மும்பையில் பதான் குழுக்கள் கோலோச்சின. இந்த பதான் குழுக்களுக்குத் தலைமை தாங்கியவர்தான் கரிம் லாலா.

அடுத்து எதுகுறித்தும் யோசிக்கவில்லை. நேரடியாக கரிம் லாலாவைச் சந்திப்பதுதான் திட்டம். ஒரு வெள்ளிக்கிழமை தன் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிய கரிம் லாலாவை இடைமறித்து பேச முயற்சிக்கிறார் கங்கா. மெல்ல விஷயத்தைச் சொல்லத் தொடங்கியதும், நடுரோட்டில் பேச வேண்டாம். வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார் கரிம் லாலா.

வீட்டுக்குச் சென்ற கங்காவுக்கு குடிக்க நீரும் உண்ண பண்டங்களும் வழங்கப்பட்டன. ஆனால், கங்கா எதையும் தொடவில்லை. பின்னர் கரிம் லாலாவிடம் தன் பிரச்னையை முழுமையாக விளக்கியதோடு தன் உடலின் சில இடங்களில் இருந்த காயங்களையும் காட்டி நிலைமையை விளக்கினார்.

இவரது நிலையை உணர்ந்து கொண்ட கரிம் லாலா உதவி செய்ய ஒப்புக்கொண்டார். இதற்கு நன்றியாக, தான் அன்பின் அடையாளமாகக் கொண்டுவந்திருந்த ராக்கியை கரிம் லாலா கையில் கட்டி அண்ணா என்று அழைத்தார் கங்கா.

ஆனால், “ஷௌகத் கான் என்ற பெயரில் இங்கு யாருமில்லை. அடுத்தமுறை அவன் வரும்போது எனக்கு தகவல் கொடு” என்று சொல்லி அனுப்பினார். இதற்காக ஒரு ஆளையும் அந்த விடுதியில் நியமித்தார்.மூன்று வாரங்கள் கழித்து மீண்டும் அந்த நபர் வந்தபோது, உடனடியாக கரிம் லாலாவுக்கு தகவல் தரப்பட்டது. ஆட்களுடன் அங்கு வந்த கரிம் லாலா அந்த நபரை நடுரோட்டில் வைத்து கடுமையாகத் தாக்கியதுடன், “கங்கா எனது தங்கை. இனி அவளை யாராவது துன்புறுத்தினால் அவ்வளவுதான்” என்று பொதுவெளியில் எச்சரித்துச் சென்றார். இதற்குப் பிறகுதான் தன் வேதனைகளிலிருந்து விடுதலை அடைந்து, நிழலுலகத் தொடர்புகளும் உள்ளூர் காவல்துறை தொடர்பும் கிடைத்து காமாத்திப்புராவின் கவனிக்கத்தக்க புள்ளியாக மாறினார் கங்கா.

நேருவைச் சந்தித்தாரா?

அந்த 16 வயதுப்பெண் மதுவை, பாலியல் தொழில் விடுதியிலிருந்து ஊருக்கு அனுப்பி வைத்த பிறகு, இந்தச் செய்தி அப்பகுதி மக்கள் அனைவருக்கும் பரவியது. இதுபோலவே பாலியல் தொழிலாளிகள் பலரும், தங்கள் கோரிக்கைகளுடன் கங்காவை தொடர்புகொண்டனர். சில உள்ளூர்வாசிகளும் தங்கள் பிரச்னைகளைச் சொல்ல தனக்கிருந்த தொடர்புகளின் செல்வாக்கின் வாயிலாக எல்லோருக்கும் வேண்டியதைச் செய்துகொடுத்து கங்காம்மாவாக மாறினார் கங்காபாய்.

பாலியல் தொழிலாளர்களின் நிலை குறித்தும் அவர்களின் துன்பங்கள் குறித்தும் பொதுவெளியில் பேசிய தலைவர்களில் ஒருவராகவும் விளங்குகிறார் கங்காபாய். அந்த வரிசையில், மும்பை ஆசாத் மைதானத்தில் பெண்கள் முன்னேற்றம் குறித்தும், பாலியல் தொழிலாளர்களின் கல்வி குறித்தும் இவர் ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இவர் அரசியலில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இவர் வென்றது அரசியல் தேர்தலில் அல்ல. விலைமாதர்களின் அமைப்பு முறையில் தலைமைப் பொறுப்புக்கு நடத்தப்பட்ட தேர்தலில்தான் அவர் வென்றார். இது ஓர் அமைப்புத் தேர்தல் அவ்வளவே.

அவருக்கு இருந்த அரசியல் செல்வாக்கின் விளைவாக, பிரதமர் நேருவை சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்ததாக தன் நூலில் குறிப்பிடுகிறார் சைதி ஹுசைன். ஆனால், அவர்களுக்கு இடையில் நடந்த உரையாடல் குறித்து எந்தப் பதிவும் இல்லை.

காரணம், கர்ண பரம்பரைக் கதைகளாக கங்குபாய் கதைகளும் பிரபலம். ஒரு துணிச்சலான பெண்மனி என்ற புள்ளியில் ஏராளமான கதைகள் அவரைச் சுற்றி பேசப்படுகின்றன. அதில் இந்தியாவின் முதல் பிரதமர் நேருவோடு உரையாடியதாக சொல்லப்படும் கதை ஒன்று மிகப்பிரபலம்.

“ஏன் இந்தத் தொழிலைச் செய்கிறீர்கள்? விட்டுவிடுங்கள்” என்று நேரு கேட்டதற்கு, “என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா” என்று பதிலுக்குக் கேட்டாராம் கங்காபாய். அதாவது பாலியல் தொழிலாளர்கள் தங்கள் தொழிலை விட நினைத்தால் வரும் பிரச்னையை நேருவுக்கு விளக்குவதற்காக அவர் அப்படிக் கேட்டார் என்று அந்தக் கதை சொல்கிறது. ஆனால், இதை ஆதாரமற்ற கதை (Apocryphal) என்று அழுத்தமாகக் குறிப்பிடுகிறார் சைதி ஹுசைன்.

கடைசி வரையிலும் முறையாகத் திருமணம் செய்து கொள்ளாத கங்காபாய், தன் காமாத்திப்புரா பகுதியில் சுமார் 25 குழந்தைகளை தன் பராமரிப்பில் வளர்த்து வந்துள்ளார். அவர்களுக்கெல்லாம் கங்காபாய் என்றால் அம்மா. அவ்வளவுதான்.

அதேசமயம், விலைமாதர்களை வைத்துத் தொழில் செய்யும் அடாவடி மிக்க பெண்ணாக இருந்த, பலராலும் வெறுக்கப்பட்ட ஒரு பெண்ணாகவும் இருந்திருக்கிறார் கங்கா என்பதையும் பதிவு செய்யத் தவறவில்லை சைதி ஹுசைன்.

மொத்தத்தில், சினிமா ஆசையில் சிறுவயதில் ஓடிவந்து, சிவப்பு விளக்குப் பகுதியில் சிக்கி, பின்னர் மும்பையின் முக்கியப்புள்ளியாக, செல்வாக்கு மிக்க பெண்ணாக விளங்கியவர் கங்காபாய். ஆவணப்படுத்தும் அளவுக்கு முக்கியமானவராக இவரை மாற்றியது இவரது மனிதநேயம்தான்.

Previous Story

ரஹ்மான் ஸ்டூடியோவில் இசை அமைக்க இளையராஜா சம்மதம்!

Next Story

சர்வதேச பெண்கள் தின வரலாறு