ரஹ்மான் ஸ்டூடியோவில் இசை அமைக்க இளையராஜா சம்மதம்!

துபையில் உள்ள ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்டூடியோவில் இசை அமைத்து தனது ரசிகர்களையும் ரகுமானின் ரசிகர்களையும் மகிழ்விக்கவிருக்கிறார் இளையராஜா. இது தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் அழைப்பு விடுத்து தமது எதிர்பார்ப்பை வெளிப்படுத்த, அதை தமது ட்விட்டர் பக்கத்திலேயே வெளியிட்டு விரைவில் இசை அமைப்பை தொடங்குவோம் என்று கூறி நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் இளையராஜா.

இந்த இசை ஜாம்பவான்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கும், இருவரிடையேயான ஒத்துழைப்பை ஒளிரச் செய்ததற்கும் தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது துபையில் நடைபெற்று வரும் குளோபல் எக்ஸ்போ நிகழ்ச்சி. கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்த மாதம் வரை நடைபெறவுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்வையிட்டு வருகின்றனர். பல்வேறு நாடுகளின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வில் இந்திய இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தனது இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத்தும் தனது இசை நிகழ்ச்சியை இந்த நிகழ்ச்சியில் நடத்தினார். இதைத்தொடர்ந்து இளையராஜா தனது இசை நிகழ்ச்சியை மார்ச் 5ஆம் தேதி நடத்தினார். இதற்காக துபை சென்றுள்ள இளையராஜா தனது இசை நிகழ்ச்சிக்குப் பிறகு அங்குள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஃபிர்தோஸ் மியூசிக்கல் ஸ்டுடியோவுக்குச் சென்றார்.

இருவரும் அங்கு சிறிது நேரம் செலவழித்து ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர். அந்த படத்தை ஏஆர் ரஹ்மான் தமது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து தமது விருப்பத்தை ட்வீட் வாயிலாக வெளிப்படுத்தினார்.

“எங்களுடைய ஃபிர்தோஸ் ஸ்டூடியோவிற்கு மேஸ்ட்ரோ இளையராஜாவை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி… எதிர்காலத்தில் எங்கள் @FirdausOrch அரங்கில் அவர் அற்புதமான இசையை அமைப்பார் என்று நம்புகிறேன்,” என ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டிருந்தார்.நீண்ட நாட்களுக்குப் பிறகு இரு இசை ஜாம்பவான்களும் சந்தித்த படம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது. இருவரது ரசிகர்களும் அவர்களின் முந்தைய இசை கச்சேரி காணொளி மற்றும் படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஒரு ட்விட்டர் பயனர், “ஹிந்தி பாடல்களை கேட்டுக்கிட்டிருந்த தமிழர்களை தமிழ் பாடலை கேட்க வெச்ச #Maestro இசைஞானியும் ஹிந்தி பாட்டு கேட்டுக்கிட்டுருந்த ஹிந்தி காரங்கள தமிழ் பாடலை கேட்க வெச்ச #Oscar இசைபுயலும்.. இணையும் அற்புதமான தருணம்” என்று கூறியுள்ளார்.

Previous Story

புலிகளை அழிப்பதற்கு முன்னர் சம்பந்தனிடம் அமெரிக்கா - இந்தியா கூறிய முக்கிய செய்தி

Next Story

யார் இந்த கங்குபாய்? மாஃபியா ராணியாக மாறியது எப்படி?