ஜெனீவாவில் சந்தர்ப்பத்தை நழுவவிட்ட இலங்கை!

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான கருத்து பரிமாற்று கலந்துரையாடல் நாளை திங்கட்கிழமை முடிவடையவுள்ளது இதனையடுத்து இலங்கை தொடர்பாக புதிய தீர்மானம் ஒன்றை எதிர்வரும் செப்டம்பரில் பேரவையில் முன்வைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை நாளை திங்களன்று பேரவையின் அமர்வு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே நடத்தப்படவுள்ளது.உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றிய அவசர விவாதத்திற்கு பேரவை ஏற்பாடு செய்துள்ளமை காரணமாக இந்த நேரக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கை தொடர்பில் தமது கருத்தை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செய்ல் பெச்சலெட் , இலங்கை கடந்த வருடம் பொறுப்புக் கூறலில் மேலும் தடங்கல்களையும் பின்னடைவுகளையும் கண்டுள்ளது என்று தெரிவித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உண்மையும் நீதியும் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. என்று குற்றம் சுமத்தினார். இதேவேளை இலங்கை தொடர்பான ஆணையாளரின் அறிக்கையின் ஊடாக இலங்கை ஏனைய நாடுகளை காட்டிலும் புறக்கணிக்கப்படுவதாக இலங்கையின் அமைச்சர் ஜி.எல் பீரிஸ் குறிப்பிட்டிருந்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஆணையாளர் மிச்செல் பெச்சலெட் சமர்ப்பித்த அறிக்கையில் பாரதூரமான முரண்பாடுகள் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார் மூன்று தொடர்ச்சியான தேர்தல்களில் இலங்கை நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தலையிடுவதைப் போன்று இந்த அறிக்கை அமைந்துள்ளதாகவும் அமைச்சர் பேரவையில் நிகழ்த்திய உரையில் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கை நாடுகளின் அங்கத்தவர்கள், அவதானிகள் நாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு விளக்கமளிக்க இந்த சந்தர்ப்பத்தை இலங்கை சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம் என இலங்கையுடன் நட்புறவு கொண்ட நாடுகளின் இராஜதந்திரிகளை கோடிட்டு இலங்கையின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் பற்றிய விளக்கத்திற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் காத்திருக்கின்றன, இதன் காரணமாக ஜிஎஸ்பி பிளஸின் எதிர்காலம் குறித்து எதிர்பார்ப்பை கொண்டிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த வாரம் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி, இலங்கையில் உள்ள “தமிழ் சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளை” நிவர்த்தி செய்யுமாறு இலங்கைக்கு அழைப்பு விடுத்தார்.தூதுவரான இந்திராமணி பாண்டே, “ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவது இலங்கையின் சொந்த நலனுக்காகவே என்று இந்தியா நம்புவதாக குறிப்பிட்டார்.

Previous Story

ஒரு குட்டிச் சந்தேகம்!

Next Story

இலங்கை: 10 ஆண்டுகளாகியும் ஒரு கப்பல் கூட வராத துறைமுகம் பராமரிப்பு செலவு மாதம் 56 லட்சம்