வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா, அடுத்த மாதம் சொந்த நாட்டிற்கு திரும்ப முடிவு செய்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனா, வங்கதேசம் திரும்ப தயாராகும் நிலையில் அவர் வந்ததும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்று வங்கதேச அமைச்சர் எச்சரித்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து நாட்டை விட்டு வெளியேறிய பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவரை நாடு கடத்த வேண்டும் என்று வங்கதேசம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

நாடு திரும்புகிறார் ஷேக் ஹசீனா?
எனினும், இந்த விவகாரத்தில் இந்தியா, வங்கதேசத்திற்கு இன்னும் பதிலளிக்கவில்லை. இந்த நிலையில் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி ஷேக் ஹசீனா நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப் போரின் முடிவைக் குறிக்கும் வகையில் வங்கதேசத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் ஷேக் ஹசீனா நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நாடு திரும்பினால் சட்டத்தின்படி நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்று வங்கதேச அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்த சூழலில், ஷேக் ஹசீனா நாடு திரும்ப முடிவு செய்து இருப்பது சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது.
வங்கதேசத்திற்குள் நுழைந்தது கைது செய்யப்படுவார்
நாடு திரும்புவதற்கு ஏதுவாக பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை மீண்டும் வழங்குமாறு வங்கதேச அரசிடம் ஷேக் ஹசீனா கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி வங்கதேசத்தின் தேசிய விமான நிறுவனமான பிமான் வங்கதேச ஏர்லைன்ஸ் விமானம் மூலம் தன்னை சொந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
ஷேக் ஹசீனா நாடு திரும்புவதற்கு ஆதரவாக அவரது கட்சியினர் கடந்த வாரம் பிரமாண்ட பேரணிகள் நடத்தினர். இதில், சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டது.
ஷேக் ஹசீனா மரண தண்டனையை எதிர்நோக்கி இருப்பதால் நாடு திரும்பினால் உடனடியாக கைது செய்யப்படுவார் என்று அந்த நாட்டு அமைச்சர் கூறினார்.
இது தொடர்பாக வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஷமா அபேட் இஸ்லாம் கூறுகையில், வங்கதேசத்திற்கு நுழைய முயன்றதுமே ஷேக் ஹசீனா கைது செய்யப்படுவார். ஜெயிலுக்கு கொண்டு செல்லப்படுவார். சட்டம் தனது கடமையை செய்யும்.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை
நாடு கடத்துவது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தத்தை இந்தியா மதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
குற்றவாளியாக ஷேக் ஹசீனா நாடு திரும்புவதால், அவர் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்” என்றார். வங்கதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது 1,400 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு எதிரான போரட்டத்தில் கடுமையான அடக்குமுறையை கையாண்ட குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்தது.
எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஷேக் ஹசீனா நிராகரித்து வருகிறார். ஷேக் ஹசீனா நாடு திரும்ப முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு இருப்பதால் உச்ச கட்ட பரபரப்பு அந்நாட்டில் நிலவுகிறது.




