ஈஸ்டர் தாக்குதல் சாட்சியங்களை ஒழிக்கும் அரசாங்கம்:பேராயர்

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காது எனவும் புதிய அரசாங்கத்தின் கீழாவது நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்க நேரிட்டுள்ளதாகவும் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசாங்கம் சட்டத்தை கேலிக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளின் பாகங்களை அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பன மறைத்து வைத்துள்ளன எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற கத்தோலிக்க தொடர்சாதன பிரிவின் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான நூல் வெளியிட்டு நிகழ்வில் இணையத்தளம் வழியாக இணைந்துக்கொண்டு உரையாற்றும் போதே பேராயர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் நெருங்க போகுகிறது. நியாயம் நிறைவேற்றப்பட்டது என்பதை எம்மால் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதி ஆணைக்குழுவில் வழங்கப்பட்ட சாட்சியங்களை அரசாங்கமும், சட்டமா அதிபரும் ஒழித்து வைத்துள்ளனர்.

விசாரணை அறிக்கையில் பாகங்களை எமக்கு வழங்குமாறு கேட்டு நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளோம். தெளிவுப்படுத்துமாறு கோரியுள்ளோம். அந்த கோரிக்கைகள் எதுவும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இதற்கு மாறாக சாட்சியங்களை தற்போதைய அரசாங்கமும், கடந்த அரசாங்கமும் மறைத்து வைத்துள்ளன. சட்டமா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகிய தரப்பின் தவறான செயற்பாடுகள் காரணமாக நியாயம் கிடைக்காத நிலைமை உருவாகியுள்ளது.

இவை தொடர்பில் தாம் மிகவும் கவலைப்படுகிறோம். இதனடிப்படையில் தற்போதைய அரசாங்கம் எமக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்பதை தெளிவாக கூறுகிறோம்.

சம்பவம் நடக்க போவதை அறிந்து அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காத அரச தலைவர்கள், உயர் அதிகாரிகளை பாதுகாத்து அவர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கி, சட்ட செயற்பாடுகளை கேலிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த விடயத்தில் நேரடியாக நான் தற்போதைய அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துகிறேன். தற்போதைய அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்பது தெளிவாக தெரிகிறது. இதன் காரணமாக நாங்கள் துக்கமடைந்துள்ளோம் எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

Previous Story

அமைச்சர் வீட்டு மின் கட்டணம் 1 கோடி 20 லட்சம் ரூபா - மின்சார சபை

Next Story

பாகிஸ்தானுக்கு பில்கேட்ஸ் விஜயம்