முட்டாள் தேசத்தின் அடையாளம்- விக்டர் ஐவன்

இலங்கை ஒரு அராஜக நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், நிலவும் நெருக்கடியானது சிங்கள – பௌத்த தேசியவாதத்தின் முடிவையும் குறிக்கிறது என்று இலங்கையின் முன்னணி ஊடகவியலாளர் விக்டர் ஐவன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பட்டப்பகலில் ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் படுகொலைகள் மற்றும் கடத்தல்கள்  இடம்பெறுகின்றன.இந்தநிலையில் கருத்துச் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்கள் தோல்வியடைந்த ஜனநாயகத்தின் அறிகுறிகளாகும் என்றும் ஐவன் குறிப்பிட்டுள்ளார்.

இன்று அராஜகத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு அரசாங்கத்தின் அனைத்து அறிகுறிகளையும் காண முடிவதாக விக்டர் ஐவன் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கான நேர்காணலில் தெரிவித்துள்ளார்.சுதந்திரம் பெற்றதில் இருந்து இலங்கை ஒழுக்கமின்மையின் வரலாற்றைக் கொண்டுள்ளது. சுதந்திரம் அடைந்ததில் இருந்து அரசியல் சட்டத்தை மீறிய நாடாக இலங்கை கருதப்படுகிறது.

அரசியல் சட்டத்தை இந்தளவுக்கு மீறி நாட்டை வேறு எங்கேயும் காணமுடியாது. அதேபோன்று இலங்கையர்களின் சிந்தனை முறைகளிலும் அணுகுமுறைகளிலும் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் மனித உரிமைகள் இடம் பெற்றிருந்தாலும், அரச இயந்திரம் மனித உரிமைகளை தொடர்ந்து மீறுகிறது.

இலங்கையில் மனித உரிமைகளை மீறுபவர்களுக்கு போதிய தண்டனைகள் வழங்கப்படவில்லை. லசந்த விக்கிரமதுங்க பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டபோது, ​​அது ஏனைய ஊடகவியலாளர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை.

ஏனெனில் செய்தியாளர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை, அவர்களுக்கு மத்தியில் காணப்படும் பொறாமையே இதற்கான காரணம் என்றும் ஐவன் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை பேரழிவை நோக்கி செல்கிறது என்பதை சமீபத்திய சம்பவங்கள் காட்டுகின்றன. இதுவரை எந்த ஊடகவியலாளரும் நிலவும் நெருக்கடி குறித்து விரிவான ஆய்வு செய்யவில்லை.

அத்துடன் நாட்டின் ஜனாதிபதி செய்தியாளர் சந்திப்புகளையோ அல்லது கூட்டங்களையோ நடத்தும் போது ஊடகவியலாளர்கள், ஜனாதிபதியிடம் கேள்வி கேட்பதை காணமுடியவில்லை.இவை அனைத்தும் பின்தங்கிய சமூகம் ஒன்றில் அடையாளங்கள் என்று ஐவன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது ஜனாதிபதியிடம் யாரும் கேள்வி கேட்கவில்லை.

அவரது இரட்டைக் குடியுரிமை தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் அவருக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவரது இரட்டைக் குடியுரிமை தொடர்பான விவகாரம் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது.சஜித் பிரேமதாசவோ அல்லது அனுரகுமார திஸாநாயக்கவோ தமது பிரசாரங்களின் போது இவ்விடயம் தொடர்பில் வினவவில்லை.

இந்த விவகாரம் தேர்தல் மனுவின் போதும் எழவில்லை. இப்படியான சந்தர்ப்பத்தில் ஷெஹான் மாலகவின் கைது அல்லது சமுத்திதவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவரும் ஆச்சரியப்படமுடியாது என்றும் ஐவன் தொிவித்தார்.

இலங்கையில் சட்டம் ஒழுங்கு என்று எதுவும் இல்லை. மற்ற நாடுகளில் அரசியல் தலைவர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். ஆனால் இலங்கையில் அரசியல்வாதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள். இது ஒரு முட்டாள் தேசத்தின் அடையாளமாக அமைந்துள்ளது.

முக்கிய ஊடகங்கள் சில கொள்கைகளின்படி செயல்படாதபோது, ​​சமூக ஊடகங்கள் அதை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கலாம்? என்றும் விக்டர் ஐவன் தமது நேர்காணலில் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கில் 10 வருடங்களாக மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்த போது இலங்கையின் ஏனைய மக்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. ஆனால் இன்று அதே கதியையே அனைத்து மக்களும் எதிர்நோக்குகின்றனர். இந்தநிலையில் தம்மை பொறுத்தவரையில் தற்போதைய பிரச்சினைகளை, இலங்கையின் சிங்கள-பௌத்த தேசியத்தின் முடிவாகவே கருதுவதாக செய்தியாளர் விக்டர் ஐவன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முழுவதும் மூவினத்தவர்களுக்கும் சமனானது என்ற போதும் அரசியல்வாதிகள் தமது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக சிங்கள பௌத்த தேசியவாதமாக நடந்துகொள்வது என்பது நாட்டின் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் என்று சமூக செயல்பாட்டாளர்கள் பல தடவை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

அகமதாபாத்  குண்டுவெடிப்பு :  38 பேருக்கு தூக்கு தண்டனை

Next Story

தாலிபனின் கட்டுப்பாட்டு! கம்பீர தலைமுறை!! பிள்ளைகளுக்கு கல்வி தரும் பெண்!