இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு என்ன நேர்ந்தது?

இந்தியாவின் அகதிகள் முகாமிலிருந்து 20 சிறுவர்கள் உள்ளடங்கலாக 89 இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் அகதிகளின் உரிமைகள் தொடர்பான ஆசிய பசுபிக் வலையமைப்பு, தற்போது அவர்களுக்கு என்ன நேர்ந்தது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அகதிகளின் உரிமைகள் தொடர்பான ஆசிய பசுபிக் வலையமைப்பினால் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டுள்ள பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியாவின் அகதிகள் முகாமிலிருந்து 20 சிறுவர்கள் உள்ளடங்கலாக 89 இலங்கைத் தமிழர்கள் பயணித்த படகில் ஏற்பட்ட கோளாறை அடுத்து, கடற்பரப்பிலிருந்து மீட்கப்பட்ட அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் திகதியிலிருந்து அமெரிக்காவின் கடற்படைத்தளங்களில் ஒன்றான டியேகோ கார்ஸியாவில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக பிரிட்டன் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வதேச அகதிகள் பிரகடனத்திற்கமைய மேற்குறிப்பிட்டவாறு தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை பிரிட்டனுக்கு அழைத்துச்செல்வதன் மூலம் சிறுவர்களுக்கு அவசியமான பாதுகாப்பு கிட்டும் அதேவேளை, அவர்கள் அகதிகள் என்றவகையில் தமது உரிமைகளை அனுபவிக்கவும் முடியும் என்பதால் அதுகுறித்த உறுதிப்பாட்டை வழங்குமாறு கோரி நாம் அனுப்பிய கடிதத்திற்கு பிரிட்டன் இன்னும் பதில் வழங்கவில்லை.

இவ்விடயத்தில் பிரிட்டன் சிறந்ததொரு வரலாற்றைக் கொண்டிருக்கவில்லை. கடந்த 1998 ஆம் ஆண்டில் கடற்பரப்பிலிருந்து மீட்கப்பட்ட அகதிகள் சைப்பிரஸில் உள்ள ஆர்.ஏ.எஃப் தளத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவ்விடயத்தில் அகதிகள் பிரகடனம் பிரயோகிப்படாது என்று வாதிட்ட பிரிட்டன் அரசாங்கம், அகதிகளைத் தமது நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு மறுத்தது.

அதன்விளைவாக 6 அகதிக் குடும்பங்கள் சுமார் 20 வருடங்களுக்கும் அதிகமான காலம் சைப்பிரஸிலுள்ள பிரிட்டனின் இராணுவத்தளத்தில் வசித்தன. இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது டியேகோ கார்ஸியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிக்குடும்பங்கள் நிரப்புவதற்கென ஓர் படிவம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

அப்படிவங்கள் அகதி அந்தஸ்த்துக் கோரிக்கை மதிப்பீடுகளுக்காகப் பயன்படுத்தப்படுமா? அந்தப் படிவங்களை நிரப்புமாறு கோரப்பட்டமைக்கான காரணம் என்னவென்பது குறித்து அவர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டதா?

அவர்கள் சட்ட உதவியை நாடுவதற்கு பிரிட்டன் அரசாங்கம் அனுமதிக்குமாறு? அத்தோடு ஐ.நாவை நாடுவதற்கும் அவர்களுக்கு அனுமதி இருக்கின்றதா? என்றும் அப்பதிவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Previous Story

ஜெனிவாவில் இலங்கை சந்திக்கப்போகும் சவால்கள்

Next Story

ஒலிம்பிக் ஊக்கமருந்து பரிசோதனை எப்படி நடக்கிறது?