ரஷ்ய தேர்தல்: புடின்  மெகா வெற்றி!

ரஷ்யாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் விளாடிமிர் புடினின் ‘யுனைடெட் ரஷ்யா’ ஆளும் கட்சி வரலாறு காணாத மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அந்நாட்டின் நாடாளுமன்ற கீழவையான ‘ஸ்டேட் டூமா’வில் உள்ள 450 தொகுதிகளில், புடினின் கட்சி மட்டுமே தனித்து 355 இடங்களைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது.

russia vladimir putin

வரலாற்று சாதனை வெற்றி

ரஷ்ய தேர்தல் ஆணையத் தலைவர் எல்லா பம்பிலோவா வெளியிட்ட அதிகாரப்பூர்வ ஆரம்ப முடிவுகளின்படி, ஆளும் யுனைடெட் ரஷ்யா கட்சி 57.83% வாக்குகளை அள்ளியுள்ளது.

இதன் மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான இடங்கள் புடின் கைக்கு வந்துள்ளன. முன்னதாக கடந்த 2016-ல் அக்கட்சி 343 இடங்களை வென்றதே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டு, 355 இடங்களுடன் தனிப் பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.

இந்த பலத்தால், பிற கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே அந்நாட்டின் அரசியல் சாசனத்தில் எந்தவொரு சட்டத் திருத்தத்தையும் புடின் அரசால் சுலபமாக நிறைவேற்ற முடியும்.

Russia election 2024 results: What does Vladimir Putin's win means for Ukraine

போருக்குப் பிந்தைய முதல் தேர்தல்

2022-ம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான போரைத் தொடங்கிய பிறகு அந்நாட்டில் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தேர்தல் இதுவாகும். இந்த தேர்தல் முடிவுகள், புடின் மற்றும் அவரது போர் நடவடிக்கைகளுக்கு ரஷ்ய மக்களிடையே முழு ஆதரவு இருப்பதை வெளிப்படுத்துவதாக மாஸ்கோ அரசு தெரிவித்துள்ளது.

தேர்தல் நடந்த மூன்று நாட்களிலும் சேர்த்து மொத்தம் 59 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. தேர்தலின் இறுதி நாளில் மாஸ்கோ நகர் மீது உக்ரைன் கடுமையான ட்ரோன் தாக்குதல்களை நடத்திய போதிலும், மக்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மற்ற கட்சிகளின் நிலவரம்

ரஷ்ய நாடாளுமன்றத்தில் புதின் கட்சிக்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்ட் கட்சி 40 இடங்களைப் பிடித்து இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. தேசியவாத எல்.டி.பி.ஆர் (LDPR) கட்சி 25 இடங்களையும், ‘நியூ பீப்பிள்’ கட்சி 20 இடங்களையும், ‘ஜஸ்ட் ரஷ்யா’ கட்சி எஞ்சிய இடங்களையும் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் அனைத்தும் உக்ரைன் போர் விவகாரத்தில் ஏற்கெனவே புதின் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருபவைதான்.

மேலும், உக்ரைன் போரில் களமிறங்கி போரிட்ட 49 ராணுவ வீரர்கள் புதின் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று ரஷ்யாவின் செச்னியா பகுதியில் நடைபெற்ற பிராந்திய தலைவர் தேர்தலில், புதினின் நெருங்கிய ஆதரவாளரான ரம்சான் காதிரோவ் 99.85% வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

போர் எதிர்ப்பு கட்சிக்கு சிறிய வெற்றி

உக்ரைன் போரை வெளிப்படையாக எதிர்க்கும் ‘யாப்லோகோ’ கட்சி, நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் அக்கட்சியால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை.

இருப்பினும், நாவ்கோரோட் பிராந்திய சட்டசபைத் தேர்தலில் இக்கட்சி 6 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று ஒரு சிறிய வெற்றியை பதிவு செய்துள்ளது. அங்கு 12,000-க்கும் மேற்பட்ட மக்கள் போர் எதிர்ப்பு கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

மேற்கத்திய நாடுகளின் விமர்சனம்

இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்பட்டதாகவும், நியாயமான தேர்தல் நடைபெறவில்லை என்றும் ரஷ்ய எதிர்க்கட்சியினரும், ஐரோப்பிய யூனியன் மற்றும் மேற்கத்திய நாடுகளும் குற்றம்சாட்டியுள்ளன.

குறிப்பாக உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டதை பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் வன்மையாக கண்டித்துள்ளன.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ள மாஸ்கோ அரசு, தேர்தல் முற்றிலும் ஜனநாயக முறைப்படியும் சட்டபூர்வமாகவும் நடந்து முடிந்ததாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Previous Story

இஸ்ரேலின் ஆணவமும், திறமை குறைவுமே தோல்விக்கு காரணம் அறிக்கை

Next Story

විපක්ෂයේ හැත්ත බුරුත්ත අතර ද#රුණු ව#ලියක්