நஜீப் பின் கபூர்
20.09.2026 ஞாயிறு தினக்குரல்
*****
மஹிந்த ராஜபக்ஸ எப்படி அரசியலுக்கு வந்தார்!
அவரது குடும்பத்தினர் எப்படி சொத்து சேர்த்தது!
*****

பலிவாங்கல் மனிதனுடைய இரத்தத்தில் கலந்திருக்கின்ற ஒரு இயல்பான உணர்வு. இது பிராணிகளிடத்திலும் காணப்படுகின்றன. தனி நபர்களுக்கு ஏற்ப இது கூடிக் குறைந்து காணப்படலாம். இதற்காக நாம் சில மனித குனங்களை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். அடம்பிடித்தல் என்பதற்கும் பலிவாங்கலுக்கும் ஒரு நெருக்கம் இருக்க வேண்டும். மலழைகள் தனது பெற்றோர்களிடத்தில் அடம்பிடிப்பதை நாம் பார்க்கின்றோம்.
கூடப் பிறந்த உறவுகள் கணவன் மனைவி என்ற உறவுகள் பந்தங்களுக்கு இடையிலும் இந்த அடம்பிடிக்கின்ற நிகழ்வுகள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. அது சற்றுக் கனதியாகின்ற போது பலிவாங்களும் அதனுடனே தொடர்கின்றன. மனித குண இயல்புகளை ஆராய்ந்து கருத்துச் சொல்ல நாம் ஒன்றும் மனித உடற் கூற்று நிபுணர்களோ ஆய்வாலர்களோ கிடையாது. ஆனால் மனித செயல்பாடுகளை அவதானிக்கின்ற போது நாம் அன்றாடம் பார்க்கின்ற காட்சிகளை வைத்துத்தான் இந்தக் குறிப்புக்களை இங்கு பதிகின்றோம்.
நமது இந்த வாதத்தை இன்னும் விரிவு படுத்திப்பார்ப்போமாக இருந்தால் இந்த அடம்பிடிக்கின்ற அல்லது பலிவாங்குகின்ற நிகழ்வுகள் சமூகங்கள் மதங்கள் கோத்திரங்கள் அரச தரப்பு எதிரணியினர் என்று பரந்து படுகின்றபோது அது விஸ்பரூபமெடுக்கின்றது. இதனைத்தான் இனங்களுக்கிடையில் நடக்கின்ற மோதல்களில் இன்றும் நாம் பார்த்து வருகின்றோம்.
ஆனால் பொதுவாக மத நம்பிக்கை அடிப்படையில் நோக்கினாலும் இது அசாதாரணமானது- நியாயமற்றது. ஏன் நாம் இப்படிச் சொல்கின்றோம் என்றால் பெரும்பாலான மதங்கள் மனிதனது பிறப்புத் தொடர்பாக அனேகமாக ஒத்த கருத்துடன் இணங்கி நிற்கின்றன. அதன்படி மனிதனும் உயிரினங்களும் கடவுளின் படைப்பு என்றுதான் அமைகின்றன. அப்படியாக இருந்தால் எப்படிக் கோத்திரங்கள் மதங்கள் பிளவுபட முடியும்.? மனிதப் பிறப்புப் பற்றிய விஞ்ஞானக் கருத்துக்களை அதன் உச்சியில் இருக்கின்ற நாடுகள் கூட நடைமுறையில் ஏற்பதில்லை அங்குகூட மத நம்பிக்கைகள்தான் மேலோங்கி நிற்கின்றன.
முகவுரை நீண்டுவிடக் கூடாது என்பதால் இந்த ஆய்வில் இருந்து இப்போது வெளியே வருவோம். வரலாறு பூராவிலும் மனிதர்களிடையே பலிவாங்கல் தொடர்கின்றன. அது குலம் கோத்திரம் தேசங்களுக்கிடையிலான மோதல்கள் என்றும் அனைத்து இடங்களிலும் தொடர்கின்றன. அது பற்றியும் நாம் பேச வேண்டியதில்லை. மனிதன் அதுபற்றிய செய்திகளை அன்றாடம் பார்த்துக் கொண்டு வருகின்றான்.
ஆனாலும் தன்னை ஆரியன் என்று எண்ணிக் கொண்ட ஹிட்லர் யூத சமூகத்தை மனிதர்களாகவே கருதவில்லை. இன்று அமெரிக்க ரஸ்யா சீன ஈரான் இஸ்ரேல் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையில் நடந்து கொண்டிருக்கின்ற பொருளாதார ஆயுதப் பலப்பரீட்சைகள் அல்லது போட்டிகள் கூட ஒரு ஆதிக்கப் பலிவாங்களாகத்தான் நமக்கு சிந்திக்கத் தோன்றுகின்றது. இப்போது நேரடியாக இலங்கை அரசியல் பலிவாங்கல் என்ற தலைப்புக்குள் வருவோம். அங்கு அரசியல் செயல்பாடுகளும் முரண்பாடுகளையும் நாம் அவதானிக்க முடியும்.
இந்த பலிவாங்கல் செய்திகளை ஆராய்கின்ற போது சம்பந்தம் சம்பந்தம் இல்லாத விடயங்களுடனும் நாம் சில முடிச்சுக்களை கூடப் போட வேண்டி வரும். அதில் எந்தளவுக்கு யாதார்த்தங்கள் இருக்கின்றன என்பது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கும். சுதந்திரப் போராட்டங்களில் சிறுபான்மை தலைமைகளும் கனிசமான பங்களிப்பைச் செய்தன. சில சந்தர்ப்பங்களில் தமிழ் தலைவர்கள் சிங்களத் தலைவர்களைவிட சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கின்றன.
ஆனால் சுதந்திரத்தின் பின்னர் அதே சிறுபான்மை சமூகங்களைப் பேரின தலைமைகள் எப்படியெல்லாம் பலிவாங்கியது? காலிமுகத்திடலில் அடித்து உதைத்து துரத்தியதும் தீயிட்டுக் கொழுத்திய நிகழ்வுகளையும் நாம் அறிவோம். அதே போன்று தனக்கு மேற்கத்தியத்துடன் இருந்த நெருக்கம் காரணமாக இஸ்ரேல் பிரச்சினையில் ஜேஆர். எப்படி எல்லாம் முஸ்லிம்களை அன்று அச்சுறுத்தினார் என்பதையும் நாம் அறிவோம். தேர்தல்களிலும் ஜேஆரின் ஐதேக.வைத் தான் பெரும்பாலான முஸ்லிம்கள் ஆதரித்து வந்தனர்.
நேரடித் தேர்தலில் நாடாளுமன்றத்தில் பேரின சமூகம் தனது எதிர்க் கட்சித் தலைமையை தமிழ் தரப்பினரிடம் பறிகொடுத்ததால் அரசியல் யாப்பையே மாற்றி தமிழர்களின் அரசியல் ஆதிக்கத்தை ஜேஆர் ஒடுக்கியதையும் நாம் பார்த்தோம். இதுவும் ஒருவகையில் இன-சமூக ரீதியிலான பலிவாங்கல்தான். அதனால்தான் விகிதாசாரத் தேர்தல் முறை. தனக்கு எதிரான செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக இருந்த சிரிமா அம்மையாரின் குடியுரிமையைப் பறித்து ஜேஆர். சிரிமாவைப் பலிவாங்கினாhர்.
2015 தேர்தலில் தான் தோல்வியுற்றிருந்தால் தன்னை இந்த நேரத்தில் ஆறடி மண்ணுக்குள் மஹிந்த புதைத்திருப்பார் என்று மைத்திரி கூறி இருந்ததையும், அவர் குருணாகல -தொடங்கஸ்லந்த தென்னந்தோப்பில் தேர்தல் முடிவுகள் வரும் வரை தலைமறைவாகி இருந்ததையும் தோல்வியுற்றால் மேற்கத்திய தூதுவராலயமொன்றில் தஞ்சமடைய பேச்சுவார்த்தைகள் நடாத்தி இருந்த தகவல்களையும் நாம் அந்த நாட்களிலே விரிவாக சொல்லி இருந்தோம்.
1983 தமிழர்களை தனது ஆதரவாலர்கள் தாக்கியும் கொலை செய்தும் சொத்துக்களை சூறையாடியதையும் தீயிட்டுக் கொழுத்திய போது அந்தப் பலியை இடதுசாரிகளின் தலையில் கட்டிவிட்ட ஜேஆர். விஜேவீர வாசு போன்றவர்களின் அரசியல் செயல்பாடுகளை தடை செய்து அநீயாயமாக பலிவாங்கினார். அரசியல் தேவைகளுக்காக அண்மைக் காலங்களில் அரசுக்குள்ளே ஒட்டுக் குழுக்களை உருவாக்கி அதில் தமது எதிரிகளை தீர்த்துக் கட்டினார்கள். கொலை செய்திருக்கின்றார்கள். சிறைகளில் தள்ளினார்கள். அந்தக் கும்பல்களுக்கு பொருளாதார வசதிகளை செய்து கொடுத்து நாட்டில் அக்கிரமங்களை நடத்தியதும் தெரிந்ததே.
இதனால்தான் சஹ்ரான் தரப்புக்கும் ஞானசார அணியினருக்கும் இவர்கள் அரச பணத்தில் சம்பளம் கூட வழங்கி வந்திருக்கின்றார்கள். நமது நினைவிற்கு வருகின்ற சில தகவல்கள்தான் இவை. இது தவிர நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னும் இலட்சக் கணக்கான பலிவாங்கல் கொள்ளைச் சம்பவங்கள் மோசடிகள் நாட்டில் நடந்திருப்பதும் அனைவரும் அறிவோம்.
தேர்தலில் தோல்விற்ற போது சரத்பொன்சேக்காவை இழுத்துச் சென்று சிறையில் தள்ளியது போன்ற அரசியல் பலிவாங்கல்களை நாம் பார்த்தோம் ரணில் தனது அரசியல் எதிரிகளை படலந்த வதைமுகாமில் படுகொலை செய்ததும் சித்திரவதை செய்ததும் முழு உலகமும் அறியும். எனவே அரசியல் பலிவாங்கல்களை நமது நாடும் மக்களும் சிறுபான்மை சமூகங்களும் நன்றாக அனுபவித்திருக்கின்றன. எனவே அரசியல் பலிவாங்கல் என்னவென்று நாம் குடிமக்களுக்கு மேலதிக விரிவுரைகள் செய்ய வேண்டியதில்லை.
இப்போது எதிரணியினர் அனுர அரசு தங்களைப் பலிவாங்குகின்றது என்று ஊரைக் கூட்டிக் கூட்டம் போட்டு வருகின்றனர். அந்தக் கூட்டங்ளுக்கு மக்கள் உணர்வுபூர்வமாக பங்கு கொள்கின்றார்களா இழுத்து வரப்படுகின்றார்களா என்று தெரியாது. அத்துடன் அவர்கள் எப்படி இந்தக் கூட்டங்களுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர் என்பதனை இப்போது சமூக ஊடகங்கள் தோலுறித்துக் காட்டி வருகின்றன.
அவை இன்று அரசியல் நகைச்சுவையாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த காட்சிகள் சினிமா படம் போல ஓடிக் கொண்டிருக்கின்ற போது இவர்கள் குறிப்பிடுகின்ற விவகாரங்கள் அரசியல் பலிவாங்கல் என்று மக்கள் கருதுகின்றார்களா என்று குடிமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதில் சில தகவல்களை மீண்டும் நினைவு படுத்துகின்றோம். லசந்த, எகனலிகொட, தாஜூதீன், ஈஸ்டர் போன்ற படுகொலைகளை விசாரிப்பதும் சந்தேக நபர்களைக் கைது செய்வதும் அரசியல் பலிவாங்களா?
சிரந்தி (222222222வீ) விமல் வீரவசன்-மனைவி போலி ஆள்அடையாள அட்டைகள்-கடவுச்சீட்டுக்கள் கொழும்பு-சுதுவெல்ல வங்கிக் கணக்குகள். பசில் ராஜபக்ஸ மல்வானை வீடு கோட்ட கதிர்காம மாளிகை சாமல் ராஜபக்ஸ போலி தகவல்கள் கொடுத்துப் பெற்றுக் கொள்ளப்பட்ட நஷ;டஈடு. தேசிய ஆச்சியின் இரத்தினப் பொதிகள்! தனக்கு இப்போது ஏதும் நினைவில் இல்லை என்று சொல்லும் கதைகள் எல்லாம் நீதிமன்றத்துக்கு வரும் போது அதனை அரசியல் பலிவாங்கல் என்று இவர்கள் எப்படி மக்களிடத்தில் நியாயப்படுத்த முடியும்? குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி இருப்போர் இதனை அரசியல் பலிவாங்ல்; என்று சொல்வதை குடி மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று இவர்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்.?
நாட்டிலுள்ள பல வைத்தியசாலைக்கு சீனா இலவசமாக ஸ்கேனர் இயந்திரங்களை அன்பளிப்புச் செய்ய அதே இயந்திரங்களை பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்று அதற்கு காசு வசூல் பண்ணி அதனைத் தனது கஜானாவில் சிரந்தி போட்டுக் கொண்டார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பிலும் இப்போது விசாரணைகள் துவங்கி இருக்கன்றன.
இவற்றுக்கு அரசு சட்ட நடவடிக்கை எடுக்கும்போது இதனை அரசியல் பலிவாங்கலாக மக்கள் எப்படி ஏற்பார்கள்.? ஆனால் இவற்றை எல்லாம் அரசியல் பலிவாங்கள் என்றுதான் மோசடிக்காரர்கள் பொது மக்களிடத்தில் காட்ட முனைகின்றார்கள். இந்த நாட்டு மக்கள் மனநிலை பாதிக்கப்பட்ட கூட்டத்தினர் என்ற மதிப்பீட்டிலா அல்லது மந்தைகள் என்ற நினைப்பிலா இவர்கள் அப்படி எதிர்பார்க்கின்றார்கள்.?
ராஜபக்ஸாக்கள் எப்படியான அரசியல் வியாபாரிகளாக துவக்கத்திலிருந்தே செயல்பட்டு வந்திருக்கின்றார்கள் என்பதனை சற்றப்பாருங்கள்.! 1950களில் தொன் மத்தியூ ராஜபக்ஸ பண்டாரநாயக்கவின் சு.கட்சியில் அரசியலை துவங்கும் போது அவரது சகோதரர் தொன் எல்வின் ராஜபக்ஸ மறுபக்கம் ஐதேக.வில் அரசியல் செய்து வந்திருக்கின்றார்.
இப்போது மஹிந்த ராஜபக்ஸ அரசியலுக்கு வந்த பின்னணியை சற்றுப்பாருங்கள். தொன் எல்வின் ராஜபக்ஸதான் மஹிந்த ராஜபக்ஸவின் தந்தை. ஆனால் அவர்கள் தொன் எல்வின் என்று தங்களை அழைத்துக் கொள்வதில் நாட்டம் காட்டாமல் இருக்கின்றார்கள்.
அதன் பின்னணியை பேரின சமூகம் அறிந்து கொண்டால் தங்களை இழிவுபடுத்தி விடுவார்கள் என்பதால், டீ.ஏ. ராஜபக்ஸா என்று உச்சரித்து சிங்கள சமூகத்தின் முன் ஹீரோக்களாக தம்மைக் காட்டிக் கொள்கின்றார்கள். முதல் முறையாக மஹிந்த ராஜபக்ஸ 1970ல்; தேர்தலுக்கு வரும் போது அவர் கொழும்பு ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக அச்சகத்தில் புத்தகம் கட்டும் தொழிலாளியாக (புக் பைன்டர்) வேலை பார்த்து வந்திருக்கின்றார். அப்போது ஒரு மாத சம்பளம் 150 ரூபா அளவில்.! அப்படியாக இருந்தால் அவர்களின் பொருளாதார நிலை புரியும்.
இந்த நிலையில் நாம் முன்பு சொன்ன சு.கட்சியுடன் இருந்த உறவு காரணமாக சிரிமா பண்டாரநாயக்க அவருக்கு ஹம்பாந்தோட்டை-முல்கிரிகல தொகுதியில் வாய்ப்புக் கொடுக்க அதில் அவர் வெற்றி பெற்றார். அப்போது மஹிந்தவுக்கு வயது இருபத்தி நான்கு. தேர்தல் பரப்புரைகளுக்கு அவரிடம் ஒரு வாகனம் கூட இருக்கவில்லை.
தேர்தல் செலவுக்காக தான் இடர் நிவாரன கடன் ஒன்றையும் பெற்றுக் கொண்டதாக மஹிந்த அந்த நாட்களில் பத்திரிகைக்குச் சொல்லி இருந்தார். (56 வருடங்களுக்கு முன்) மேலும் காசு வாகனம் கூட தெரிந்தவர்கள் கொடுத்து உதவியதால்தான் அவர் அன்று நாடாளுமன்றம் போக முடிந்தது. கொழும்பு அச்சக உரிமையாளர் கொடகே துண்டுப் பிரசுரங்களை இலவசமாக அச்சடித்துக் கொடுத்திருந்தார்.
இதிலிருந்து நாட்டு மக்கள் மஹிந்த ராஜாபக்ஸாவின் குடும்ப பொருளாதார நிலையை உணர்ந்து கொள்ள முடியும்.! எனவே எந்த ஒரு தொழிலையும் செய்யாதவர்கள் அரசியலைத் தமது வருமானமாக மாற்றி அமைத்திருக்கின்றார்கள். அதேபோன்று அவரது மூன்று புதல்வர்களும் வாழ்நாளில் எந்த தொழிலும் செய்ததில்லை.
கடற்படையில் தொழில் பார்க்கப் போனவர் பண்ணிய அட்டகாசங்கள் இன்று நீதிமன்றத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் அவர்கள் எப்படி சொத்துச் சேர்த்தார்கள்-கோடிஸ்வரரானார்கள் ஜமிந்தார்களானார்கள் என்பதை இன்றைய சமூகம் நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள். இதனால்தான் இன்று ராஜபக்ஸாக்களை குடிமக்கள் அரசியல் களத்தில் விரட்டியடித்திருக்கின்றார்கள் என்று நாம் எடுத்துக் கொள்ள முடியும்.
ராஜபக்ஸாக்கள் தனிப்பட்ட குடும்ப அரசியலில் கூட எப்படியான தன்னலக்காரர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதற்கு இந்த சம்பவம் சான்று. நிரூபமா ராஜபக்ஸாவும் இவர்களது உறவாக இருந்தாலும் அவருக்கும் மஹிந்த குழிபறித்த கதைதான் இது. நிரூபமா ராஜபக்ஸா மீதும் சிரிமா பண்டாரநாயக்காவுக்கு நல்ல நெருக்கம் இருந்தது.
அதனால் அவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. நிரூபமாவுக்கு மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். அவர் ஒரு தமிழனை முடித்திருக்கின்றார் என்று இனவாதத்தைக் கிளப்பி தனது அண்ணன் சாமலுக்கு அந்த வாய்ப்பை மஹிந்த பெற்றுக் கொடுத்தார். இதனை பிற்காலத்தில் சந்திரிக்க கூறி இருந்தார்.
இதுதான் சாமல் ராஜபக்ஸ அரசியலுக்கு வந்த கதை. பின்னர் ராஜபக்ஸாக்களின்-குடும்பம் பிள்ளைகள் பசில் கோட்டா மனைவி மனைவியின் குடும்பத்தவர் என அனைவரும் அரசியலுக்கு வந்ததும் முறைகேடாக சொத்து சேகரித்ததும்தான் இந்த நாடு இந்தளவுக்கு வங்குரோத்து நிலைக்கு போக முக்கிய காரணமாக இருந்திருக்கின்றது.
எனவே அதன் மூலம் தனி மனிதர்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள்.சமூகம் வஞ்சிக்கப்பட்டிருக்கின்றது. ஒட்டுமொத்த தேசமும் சீரழிக்கப்பட்டிருக்கின்றது. இந்த அநீயாயங்களுக்கு எதிராக மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி இன்று அரசு மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் நீதி விசாரணைகள் அரசியல் பலிவாங்களா? அரசின் கடமைகளா? என்பதை குடிமக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.




