மக்கள் நாடி பிடித்து பார்க்க முற்படுகின்றது அரசாங்கம்: காய் நகர்த்துகின்றார் பசில்!

நஜீப் பின் கபூர்

இந்த உலகத்தில் நடக்கின்ற அனேகமான நிகழ்வுகளை மக்கள் புரிந்து கொள்வதில்லை. நமது தனிப்பட்ட கருத்தும் நாட்டில்-உலகில் நடக்கின்ற ஒவ்வொரு சம்பவங்களையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமும்-தேவைகளும்கூட அவர்களுக்குக் கிடடையாது. அப்படிச் சொல்லிவிட்டு நாம் இந்த விவகாரத்தை மொட்டையாக கடந்து செல்வதும் பெரிய அநீயாயம் என்றும் நமக்குள் ஒரு கருத்து இருக்கின்றது.

நாட்டில் நடக்கின்ற அனேகமான சம்பவங்கள் நிகழ்வுகளுக்கு இன்று மூளை முடுக்குகளில் இருக்கின்ற மனிதன் மட்டுமல்ல மனித உறவே வேண்டாம் என்று வேடுவர்களாக வாழ்கின்ற மக்களுக்கும் உயிரினங்களுக்கும் கூட அதன் தாக்கங்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ இலக்காக வேண்டி வருகின்றது.

நமது பீடிகையில் என்ன சொல்ல வருகின்றோம் என்று ஒரு குழப்பத்தை இன்னும் நகர்த்திக் கொண்டு செல்வதை விட நேரடியாக காரணத்துக்கு வருவோம். உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமிக்கப்பு ஒன்று நடக்கின்றது  என்று வைத்துக் கொள்வோம். அதில் நமக்கு என்ன இருக்கின்றது என்று மானிடம் அதனைத் தட்டிக் கழிக்க முடியுமா.?

போர் துவங்கினால் அது உலகம் பூராவும் பரவி உலகின் பொருளாதாரத்தில் பாரிய தாக்குதலுக்கு இதனுடன் சம்பந்தமே இல்லாத தனி மனிதர்களும் உயிரனங்ககும் கூட இலக்காக வேண்டி வருவது   அனைவரும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்ற விவகாரம். நாம் இன்று உக்ரைன் விவகாரம் பற்றி இங்கு பேச முனையவில்லை. அது ஒரு உதாரணம் மட்டுமே.

நமது நாட்டில் தனி நபர்கள் எடுக்கின்ற சில தீர்மானங்கள் இன்று நம்மை மட்டுமல்லாது நமது இளம் சந்ததியினர்  வாழ்விலும் தாக்கங்களை உண்டு பண்ணிவிடுகின்றன. இந்த தாக்கங்களை யார் நமக்குச் செய்தார்களோ அந்த முகவர்களே அதனை பகிரங்கமாக ஊடகங்கள் முன் தற்போது ஏற்றும் வருகின்றார்கள்.

1955 களின் பின்னர் ஆட்சியாளர்கள் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து பெற்றுக் கொண்ட கடன்கள்தான் இன்று இந்த மோசமான நிலைக்குக் காரணம். இதற்கும் கொரோனாவுக்கும் எந்தத் தொடர்புகளும் கிடையாது என்று சில தினங்களுக்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் உதய கம்மன்பில கூறி இருந்தார். அதனை ஊடகங்களும் முக்கிய செய்தியாக சொல்லிக் கொண்டிருந்தன. அவர்கள் சொல்லித்தான் இந்த செய்தி நமக்குத் தெரிய வேண்டும் என்பதும் இல்லை.

இதே அமைச்சர் ராஜபக்ஸாக்கள் கடன்களை வாங்கிக் குவித்த போது அப்படிச் செய்ய வேண்டாம் என்று அந்த நாட்களில் எப்போதாவது சொல்லி இருந்தாரா என்றுதான் நாம் கேட்க்க வேண்டும். இவை எல்லாம் செய்திகளே கிடையாது என்பதுதான் எமது கருத்து. நமது சமகால  நெருக்கடிகள் இந்தியாவின் உதவியால் சில மாதங்கள் தள்ளிப் போய் இருக்கின்றது.

இதனை நாம் முன்பும் சொல்லி இருந்தோம். பிச்சைக்காரன் ஒவ்வொரு நேர சாப்பாட்டுக்கும் அடுத்தவன் வீட்டு வாசலில் போய் நிற்பதைப் போலதான் நமது அரசாங்கம் நாட்களை ஓட்டிக் கொண்டு செல்கின்றது. அவுஸ்திரேலியாவிலிருந்து பருப்புக் கடன் கேட்டு தூது விட்டிருக்கின்றார் அமைச்சர் பந்துல. அவர்களும் 200 மில்லியன் டலர்கள் தருவதாக ஒத்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள்.

புத்தாண்டுகள் வருகின்ற போது பெற்றோர் தங்களது குழந்தைகளின் புது வருடத்  தேவைகளுக்காக மாற்றானிடம் கடன் கேட்டுக் கெஞ்சுவதை நாம் சமூகத்தில் பார்த்திருக்கின்றோம். அது போலத்தான்  அரசாங்கமும் 2022 தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான பொருட்களுக்காக நாம் முன்பு சொன்னது போல மாற்றான் வாசல்படியில் போய் நிற்க்கின்றது.

இப்போது அரசாங்கம் கடன்களை நேரடியாகக் கேட்காமல் கொஞ்சம் பருப்பு, மா, பால்மா, எரிபொருள், அரிசி, தானியம்… என்று ஓடித்திரிகின்றது. இப்படியாக உலகில் எந்த ஒரு நாடும் கேவலப்பட்டதை நாம் அண்மைக் காலம் வரை கேள்விப்பட்டது கிடையாது. இப்படியான குறிப்புக்களை நாம் அரசியல் குரோதத்தை மனதில் வைத்து எழுதவோ-பதியவோ இல்லை. யதார்த்தத்தைதான் நாம் இங்கு சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு பக்கத்தில் தினைவித்தைவனுக்கு தினையையும் வினையை விதைத்தவனுக்கு கடவுள் அதனை அறுவடையாக கொடுப்பது போலத்தான் இதுவும் நடந்து வருகின்றது என்றும் சுட்டிக் காட்ட வேண்டி இருக்கின்றது.

மக்களை எந்தளவுக்கு ஏமாற்றி அரசு பதவிக்கு வந்தது.? வன்முறை, அபான்டங்கள், அடாவடித்தனத்தால் அதிகாரத்துக்கு வந்தவர்களை எதிர் கட்சிகள் சொல்லவது போல  கடவுள் தண்டிக்கின்றாரோ என்னவோ? என்றும் யோசிக்க வேண்டி இருக்கின்றதது.

நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு சென்றதில் தற்போது எதிரணியில் இருக்கின்றவர்களின் பங்களிப்பும் நிறையவே இருக்கின்றது. எனவே நாம் பதவியில் இருக்கின்ற அரசை மட்டும் விமர்சனம் செய்ய முடியாது.

கடந்த ஒன்பதாம் திகதி நமது நிதி அiமைச்சர் அனுராதபுரம் சல்காது மைதானத்தில்  ஒரு பரீட்சர்த்த முயற்ச்சியை செய்து பார்த்தார். அது ஒரு தேர்தலுக்கான ஏற்பாடுபோல் இருந்தாலும் அதன் பின் நீண்டதொரு அரசியல் நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது என்பதுதான் எமது கணிப்பு. அந்த விவகாரத்தை சற்று ஆழமாகப் பார்ப்போம்.

இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளை தற்போது முன்னெடுக்கின்ற முக்கிய புள்ளி நமது நிதி அமைச்சர் பீ.ஆர். அவரின் கைகளுக்கு அதிகாரம் போய் விட்டது. ஜனாதிபதி  ஜீ.ஆரும். பிரதமர்  எம்.ஆரும் இன்று அரசியல் அவதானிகளாக இருக்கின்றார்கள் என்பதனைத்தான் அந்த வட்டாரங்களில் இருந்த நமக்கு வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் அரங்கில் தம்பி பீ.ஆர். செய்கின்ற சாகசங்களில்தான் காட்சிகளில் ஏதும் மாற்றங்களுக்கு-நம்பிக்கைகளுக்கு இடமிருக்கின்றதா என்று மூத்தவர்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்ற ஒரு நிலை அங்கு இருக்கின்றது.

நல்லதோ கெட்டதோ ஏதாக இருந்தாலும் அதனை பீ.ஆர்தான் பண்ண வேண்டி இருக்கின்றது. நாம் என்ன ஆதராரத்தின் அடிப்படையில் இந்தத் தவவல்களை செல்லுகின்றோம் என்று இப்போது பார்ப்போம். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்த பிரதமர் தற்போது உடல் ரீதியில் அசௌகரியகங்ககுக்கு இலக்காகி இருக்கின்றார்.

ஜனாதிபதிக்கும் அரசியல் நகர்வுகளில் அனுபவங்கள் போதாது என்பது நமது நாட்டில் உள்ள சிறு பிள்ளைகூட தெரிந்து வைத்திருக்கின்றது.  மூத்த சசோதரர் சமல் கூட தீர்மனாம் எடுக்கின்ற விடயத்தில் தம்பி பீ.ஆரைத்தான் குருவாக மதித்துக் கொண்டிருக்கின்றார்.

அந்தக் குடும்பத்தில் உள்ள இளசுகளுக்கு வலுவான பதவிகள் அரசியலில் இருந்தாலும் அவர்களது ஆளுமையில் அறிவியலில் பலயீனங்கள் நிறைய இருப்பதால் அவர்கள் கோட்பாதர் சித்தப்பாவையே காய் நகர்த்தல்களுக்கு நம்பி இருக்கின்றார்கள்.

சமகால அரசியல் அரங்கில் பீ.ஆர்.தான் ஆளும் தரப்பின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற நிலையில் இருந்து கொண்டுதான் இந்த அரசாங்கத்தின் எதிர்காலம் பற்றி பேச வேண்டும். அதில் மனிதன் எந்தளவு சாதிப்பார் என்பது வேறு விவகாரமாக இருந்தாலும் அவர் அடுத்து என்ன செய்ய முனைக்கின்றார் என்று பார்ப்போம்.

பீ.ஆருக்குத் தேவையான அரசியல் பின்புலம் தற்போது சமைந்து விட்டது அல்லது உருவாக்கப்பட்டு விட்டது. ராஜபக்ஸ குடும்பத்துக்குல் இப்போது அவருக்குப் போட்டி வேறு யாரும் கிடையாது. ஆளும் தரப்பிலுள்ள அவரது எதிரிகள் தற்போது யதார்த்தத்தை புரிந்து கொண்டு விட்hர்கள்.

இதன் பின்னர் விமல், வாசு, கம்மன் பில போன்றவர்கள் தமது எதிர்ப்பை மட்டுப்படுத்திக் கொள்வார்கள் அது தற்போதைக்கும் நடந்து கொண்டிருக்கின்றது. எனவே கார்போர்ட் வீரர்கள் தற்போது சரணாகதி அல்லது மௌனம்.

அரசின் எதிர்காலம்; தனது ஜனாதிபதி கனவு தொடர்பான கருத்துக் கணிப்புக்களில் அளவீடுகளை பீ.ஆர். தற்போது மேற்கொள்ள முனைகின்றார். ஜனாதிபதி ஜீ.ஆர். பதவிக்கு வருவதற்கு முன்னர் கடும் இனவாதியாக தன்னைக் காட்டிக் கொண்டு சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் பேசி வாக்கு வேட்டையில் இறங்கி இருந்த போது பீ.ஆர். அந்த விவகாரத்தில் மென் போக்குடன் நடந்து கொண்டு வந்தார்.

பிரதமர் எம்.ஆர். இரு பக்கத்தையும் சமாளித்துக் கொண்டிருந்தார். இது அவர்களது திட்டமிட்ட ஏற்பாடாக இருக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

தனது அரசியல் எதிர் காலத்துக்கான களத்தை பீ.ஆர். சரி செய்து கொள்ள வேண்டி இருக்கின்றது. எனவே தான் அரசின் சீனாவை நூறுவீதம் நம்பி பயணிப்பது என்று நிலையில் சின்ன மாற்றம் தற்போது தெரிகின்றது. இந்திய அமெரிக்க பக்கம் காட்டப்படுகின்ற பச்சைக் கொடிகள் எல்லாம் இதன் பின்னணியில் வருபவையே.

ஜீ.எல்.பீரிஸ் இந்திய விஜயம் ஜெனீவா மற்றும் மனித உரிமை விவகாரங்களில் மொன்போக்கு. பேரினக் கடும் போக்காளர்களின் விருப்புக்கு மாற்றமான முயற்ச்சிகளும் பீ.ஆர். நிகழ்ச்சி நிரல்களில் பகுதிகளாகவே நாம் பார்ககின்றோம்.

தற்போது சிங்கள ஊடகங்கள் தேர்தல் ஒன்று பற்றி தலைப்புச் செய்திகளை எழுதி வருகின்றன. அவைகள் கூட திட்டமிட்ட விளம்பரங்கள்தான். இதனை நாடி பிடிக்கின்ற வேலை என்றும் எடுத்துக் கொள்ளவும் முடியும். தேர்தல் என்றால் நமது நாட்டில் நான்கு வகைத் தேர்தல்கள் இருக்கின்றன. 1.ஜனாதிபதித் தேர்தல் 2.பொதுத் தேர்தல் 3.மாகாணசபைத் தேர்தல். 4.உள்ளாட்சித் தேர்தல்.

மாகாணசபைத் தேர்தல் பற்றி பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் அதில் இந்தியாவையும் சர்வதேசத்தையும் அரசு ஏமாற்றிக் கொண்டு வருகின்றது. ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் மாகாண சபைத் தேர்தலுக்கு சம்மதத்தை தெரிவித்தால் கடும் போக்கு சிங்கள மக்களுக்கு இது வரை அவர்கள் சொல்லி வந்த கதைகளுக்கு அது மாற்றமாக அமைந்து விடும். எனவே எதிர்க் கட்சி பதவியில் இருக்கின்ற போது செய்த வேலையால் மாகாணசபைத் தேர்தலை நமக்கு இன்று நடத்த முடியாமல் இருக்கின்றது என்று அரசு நொண்டிக் சாட்டை சொல்லிக் கொண்டிருக்கின்றது.

நமது கருத்துப்படி பொதுத் தேர்தலுக்கும் வாய்பு இல்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கே அல்லது தனது காலத்தை நீடித்துக் கொள்ளும் கருத்துக் கணிப்புக்கும் வாய்ப்புக்கள் கிடையாது.  உள்ளாட்சித் தேர்தலுக்குப் போய் நாடி பிடிப்பதுதான் ஆளும் தரப்புக்குள்ள மிகப் பெரிய வாய்ப்பு. அதனைத்தான் பீ.ஆர். செய்து பார்க்க முனைக்கிறார். போகின்ற போக்கில் வாய்பு இல்லை என்று கண்டால் அதந்தத் திட்டத்தை இடை நடுவில் இவர்கள் கைவிடவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.

உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டிய காலம் ஏற்கெனவே கடந்து போய் இருக்கின்றது. அதனை அரசு நீடித்திருக்கின்றது. எப்போது வேண்டுமானாலும் தேர்தலை அரசு அறிவிக்கவும் முடியும். இதனால்தான் வெற்றி பெற்ற உள்ளாட்சி வேட்பாளர்களுக்கு 40 இலட்சம் ரூபாவுக்கு அபிவிருத்தியில் தனது வட்டாரத்தில் வேலைகள் என்று அறிவிப்புச் செய்து காரியங்கள் துவங்கி இருக்கின்றன.

ஏற்னெவே தமது கட்சி சார்பில் போட்டியிடுவதற்க்கும் ஆளும் தரப்புக்கு வேட்பாளர்கள் கைவசம் இருக்கின்றார்கள். இத் தேர்தலில் எதிரணியில் பல கட்சிகள் பிரிந்து களத்தக்கு வரும் போது ஆளும் மொட்டு தரப்பு வேட்பாளர்களுக்கு இது வாய்ப்பு என்று பீ.ஆர். கருதுகின்றார். அதில் உண்மையும் இருக்கின்றது.

தேர்தல் காலத்தில் அவர்களுக்கு அரசு அனுசரனையும் கிடைக்க இருப்பதால் கடந்த தேர்தலுடன் நோக்குகின்ற போது ஆளும் தரப்பினருக்கு வாக்குகள் குறைந்தாலும் உள்ளாட்சி மன்றங்களை வெற்றி கொள்ளலாம் என்று அவர்கள் கருதுகின்றார்கள்.

மேலும் வேட்பாளர்களுக்கு பாரிய அளவில் செலவுகள் கடந்த காலங்களில் போல் இல்லாமல் அது வட்டாரத்துகள் அமைவதால் வேட்பாளர்களே பெரும்பாலும் தேர்தல் செலவுகளைப் பார்த்துக் கொள்வார்கள். என்றும் அளும் தரப்பினர் கணக்குப் பார்த்திருக்க முடியும்.

வடக்கு கிழக்கு மலையகம் போன்ற பிரதேசங்களில் இத் தேர்தலில் இன ரீதியில் உணர்களுக்கே அதிக வாய்ப்புக்கள் இருப்பதால் எதிரணியின் பலம் தான் அங்கு பெரும்பாலும் சிதைவடையும்-பிளவு படும். தனிக் கட்சி என்ற ரீதியில் அது அரசுக்கு நல்ல வாய்ப்பைக் கொடுக்கலாம்.

என்னதான் அரசின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்திருந்தாலும் அரச பலத்துடன் தேர்தலுக்கு நிற்க்கின்ற கட்சிக்கு இது அதிக வாய்ப்பைக் கொடுக்கும் என்ற வாதத்தில் நமக்கும் உடன்பாடு இருக்கின்றது.  இதனால் தெற்கில் பெரும்பாலான வட்டாரங்களில் ஆளும் தரப்புக்கு அதிக வாய்ப்பு கிடைக்கலாம்.

இத் தேர்தலில் பின்னர் அடுத்து வருகின்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ஆளும் தரப்பிலுள்ள குறைகளைச் சரி செய்து விடலாம் என்று பீ.ஆர். கணக்குப் பார்திருக்கக் கூடும்.

இவை எல்லாவற்றையும் கணக்குப் பார்த்துத்தான் அனுராதபுர சல்காது மைதானத்தில் அவர்கள் இந்தக் கூட்டத்தை நடத்தி இருக்க வேண்டும். சல்காது மைதானத்தில் அரசு பெரியதோர் கூட்டத்தை நடாத்தினாலும் அது கடந்த காலங்களில் மொட்டுக் கட்சிக் நடத்திய கூட்டங்களைப் போல் இந்த முறை கலை கட்டவில்லை என்றுதான் நமக்குத் தெரிகின்றது.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 13.02.2022

Previous Story

பாம்பின் கால் பாம்பு அறியாதா?

Next Story

''ராமாயணம், மகாபாரதம்  இதிகாச குப்பைகள்”- திருமாவளவன்