கெஜ்ரிவால் கிண்டல்!

 

ஐந்தாண்டுகளில் செய்யும் ஊழலை 111 நாட்களில் செய்துமுடித்தார் பஞ்சாப் காங்., முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிண்டலடித்துள்ளார். மத்திய அமலாக்கத்துறை முன்னதாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மைத்துனர் பூபிந்தர் சிங் ஹனியை கைது செய்தது. இதுகுறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி வெற்றிகரமாக 111 நாட்களை கடந்து விட்டார். இந்த நாட்களிலேயே அவரது தலைமையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. இதனாலேயே தற்போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக அரசியல்வாதிகள் மிகப் பெரிய ஊழல்களில் ஈடுபட நான்கிலிருந்து ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கொள்வார் என்று கிண்டலாக விமர்சித்துள்ளார்.

கோவாவில் தற்போது ஆம் ஆத்மி கட்சி பாஜகவுக்கு போட்டியாக விளங்கும் நிலையில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், கோவாவில் காங்கிரசுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கும் பதில் அளித்தார்.

அடுத்த 24 மணிநேரத்தில் கோவா காங்கிரஸிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பாஜகவுக்கு வராமல் இருந்தால் அதைப் பற்றி யோசிக்கலாம் என்று இதற்கும் பகடி செய்து பதிலளித்தார்.

கோவாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் பழங்குடி இன மக்களுக்கு 3 ஆயிரம் அரசு பணியிடங்கள் ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். காடுகள் உரிமை சட்டத்தின்படி பழங்குடியின மக்களுக்கு சட்டமன்றத்தில் 12.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று கூறினார்.

 

அவர்களுக்கு இலவச கல்வி, மருத்துவம், பழங்குடியின பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, வேலைவாய்ப்பு கிடைக்கும்வரை 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். வரும் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மார்ச் 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Story

ஒவைசிக்கு Z பிரிவு பாதுகாப்பு

Next Story

நீதி அமைச்சர் மன்னிப்புக் கோர வேண்டும்!