நாட்டை உலுக்கிய பாத யாத்திரையும் போதை யாத்திரையும்

நஜீப் பின் கபூர்

நன்றி: 03.05.2026 ஞாயிறு தினக்குரல் 

புனித பௌத்தத்துக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காவிகள்!

நாளை நீங்களும் போதை வியாபாரிகள் வலையில் சிக்கலாம்!

கல்விச் சுற்றுலா உலகிற்கு கற்றுத் தருகின்ற புதிய பாடங்கள்!

மனிதனது சிந்தனைகளால் வரும் கண்டுபிடிப்புக்கள்தான் உலகில் நிகழ்கின்ற மாற்றங்களுக்கு அல்லது முன்னேற்றங்களுக்குக் காரணமாக அமைகின்றன. இந்த கண்டு பிடிப்புக்களில் ஆரோக்கியமான பக்கமும் ஆபத்தான பக்கங்களும் இருக்கின்றன. அறிவியல்-விஞ்ஞானம் கல்வி வைத்தியம் விவசாயம் இராணுவம்-போர் தொழிநுட்பம் என்ற இன்னோரன்ன துறைகளிலும் தனது வல்லாதிக்கத்தை செலுத்தி வருகின்றது. இதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. கடந்த ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த நிலை. வருகின்ற நூறு வருடங்களுக்கு பின்னர் உலகில் நடக்க இருக்கின்ற மாற்றங்கள் நமது கற்பனைக்கும்  எட்டாதவையாக இருக்கும். அங்கும் ஆக்கமும் அழிவும் கலந்ததாகத்தான் இது இருக்கும். தற்காலத்தையும் கடந்த காலத்தையும் வைத்து நாம் போடுகின்ற ஒரு கணக்கு.

இந்த விளக்கத்துக்கும் யாத்திரைகளுக்கும் என்ன உறவு? நியாயம்தான். மனிதனது சிந்தனைகள் கண்டு பிடிப்புக்கள் மாற்றங்களுக்கான அடிப்படை என்பது போல சிந்தனைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் தீய செயல்பாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் டசன் கணக்கானவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைப்பது போல வைத்து எப்படி போதை வியாபாரத்தை பண்ணலாம். பணம் சம்பாதிக்கலாம் என்பதும் மனிதனது கண்டு பிடிப்பாகத்தான் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. இது போன்று நாம் அறியாத கேள்விப்படாத பல துறைகளில் மனிதன் தனது சிந்தனையை பாவித்துக் கொண்டிருக்கலாம். சில தினங்களுக்கு முன்னர் முழு நாட்டையும் உலுக்கிய காவிகளில் போதை கடத்தல்தான் இன்று பேசுபெருளாகி வருகின்றது.

இது பற்றி நாம் சொல்கின்ற சில தகவல்கள் நீங்கள் கோள்விப்பட்டதாகவும் இன்னும் பல புதியவையாகவும் இருக்கலாம் என்று நாம் நம்புகின்றோம். அதற்கு முன்னர் வியட்னாம் பஞ்ஞாசார தேரரின் பாதயாத்ரை பற்றிப்பார்ப்போம். தேரர் ஒரு பொறியியலாளர்-படித்தவர். சமாதானப் பிரியர். இவர் பௌத்த துறவியாகும் முன்னர் தனது துறையில் செல்வாக்கான  பல உயர் பதவிகளில் கடமையாற்றி அத்தனையையும் துறந்தே தேரராக தன்னை மாற்றிக் கொண்டவர்.

Ven. Pannakara Thero Meets the President Following the Conclusion of the “Ehipassiko” Peace Walk

இவர் தற்போது அமெரிக்க – டெட்சாசில் குடியேறி வாழ்ந்து வருகின்றார். அநுராதபுரத்தில் துவங்கிய இந்த சமாதான பாதயாத்திரை தம்புள்ள மாத்தளை கண்டி ஊடாக கொழும்பை அடைந்தது. இருநூறு கிலோ மீற்றர்கள்  வரையிலான தூரம் கால் நடையாக கொழும்பை வந்தடைந்த இந்த சமாதான பாத யாத்திரை நாட்டில் இருக்கின்ற பௌத்த மக்களினதும் பௌத்தர்கள் அல்லாதவர்களினதும் கவனத்தை ஈர்த்தது.

இது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற ஒரு வைபவத்தில் முற்றுப் பெற்றது. அந்த நிகழ்வில் இன்னும் பல முக்கியஸ்தர்களும் இராஜதந்திரிகளும் பங்கு பற்றி இருந்தனர். அங்கு பேசிய பஞ்ஞாகர தேரர் மனிதன் தமக்குள் எப்படி சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வது என்பது பற்றியும் அங்கு தெளிவு படுத்தினார். பாத யாத்திரையின் இறுதிக்கட்டம் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தான் தேரர்களின் போதை யாத்ரா கதை நாட்டை மட்டுமல்லாது உலகத்தாரினதும் அவதானத்தை இலங்கை மீது திருப்பி விட்டது. இது பௌத்தத்துக்கு மட்டுமல்ல ஏனைய சமயங்களுக்கும் மிகப் பெரிய ஒரு எச்சரிக்கையையும் சொல்லி இருக்கின்றது. இதற்காக பௌத்த சமயத்தையும் சாசனத்தையும் குற்றம் காண்பது முட்டாள்தனமானது சிறுபிள்ளைத் தனமானது.

பசுத்தோல் போர்த்திய புலி – புலித்தோல் போர்த்திய பசுக்கள் பற்றிய கதைகளையும் நாம் அறிவோம். இஸ்லாமிய பெண்கள்  அணியும் பர்தா ஆடைக்குள் புகுந்து நடாத்தப்பட்ட கொலை கொள்ளை அட்டகாசங்கள் பற்றி நாம் அன்றாடம் பார்த்து வருகின்றோம். அதே போன்று கடவுளின் பேரில் இங்கு நடாத்தப்பட்ட ஈஸ்டர் மனிதப் படுகொலைகளையும் நாம் கண்டோம். எனவே பௌத்தில் மட்டுமல்ல ஏனைய சமூகங்களில் சமயங்களில் இது போன்ற வேசதாரிகள் இருக்கின்றார்கள். இவர்களை பாவித்துக் போதை வியாபாரம் செய்கின்ற கும்பல்கள் பற்றி இப்போது நாம் முதல் முறையாகப் பார்க்கின்றோம். நமது நாட்டில் விமானத்தில் இந்தளவு போதைப் பொருட்கள் வந்தது இதுதான் முதல் முறை. இது போன்று சமயப் போதகர்களை பாவித்து இந்தளவு போதை கடத்தல் நடாத்தப்பட்டதும் உலக வரலாற்றில் முதல் முறை.

நாம் துவக்கத்தில் குறிப்பிட்டது போல மனிதர்களின் சிந்தனை வளர்ச்சி அல்லது அறிவியல் முன்னேற்றங்கள் எப்படி எல்லாம் பிழையாக உபயோகிக்க முடியும் என்பதற்கு இது நல்ல உதாரணம். எனவே வெளிநாடுகளில் இருந்து மட்டுமல்ல உள்நாட்டிலும் கூட இதே போதை வியாபாரிகள் அன்றாட பிரயாணங்களின் போது அதன் ஊழியர்கள் ஏன் மாணவர்கள் பாதுகாப்பு படையினர் ஆசிரியர் பொது மக்கள் என்ற இன்னோரன்ன பாத்திரங்கள் மூலம் இந்த போதை வியாபாரத்தை பண்ணலாம் பண்ணியும் இருக்கின்றார்கள்.

எனவே யாரையும் நம்ப முடியாது. நீங்கள் உங்கள் குழந்தைகள் உறவுகள் கூட அறிந்தோ அறியாமலோ இதில் ஈடுபடுத்தப்படலாம். என்று நாம் எச்சரிக்கை செய்கின்றோம். அதே நேரம் பொலிசார் கூட அப்பாவிகளை போதை வியாபாரிகள் என்று சொல்லி பணம் பறிக்கின்ற-பறித்து நீதி மன்றம்வரை சென்று தண்டனை பெற்ற சம்பவங்களையும் நாம் பார்த்திருக்கின்றோம். இது என்ன கொடூரம்.? மதங்களையும் விகாரைகள் கோயில்கள் பள்ளிகள் தேவாலயங்களையும் கூட பாவித்து அதில் உயர் பதவிளை அடைந்து அதன் மூலம் இந்த வியாபாரத்தை முன்னெடுக்;கின்றவர்கள்; பற்றியும் அவ்வப்போது நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

இப்போது இந்தப் போதை யாத்திரா பற்றிய  கதையின் பின்னணியை பார்ப்போம். கடந்த 22ம் திகதி  கல்விச்சுற்றுலா என்று போனவர்கள் போதை யாத்ராவுக்குத்தான் போய் இருக்கின்றார்கள் என்பது 26ம் திகதி இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கையும் களவுமாக சிக்கிய போதுதான் தெரிய வந்தது. இப்போது இது எப்படி ஒருங்கமைக்கப்பட்டது என்பதைப் பார்ப்போம். வட்ஸ்அப் தொடர்புகள் மூலம் தேரர்களுக்கு கல்விச் சுற்றுலா என்று சொல்லி ஆட்களைச் சேர்த்திருக்கின்றார்கள். அதன் படி தாய்லாந்து பெங்கொக் – சுலான் நன் கொன் பல்கலைக்கழக செயல்பாடுகளை இவர்களுக்கு காண்பிப்பதாகவும் இதற்கான பயணம் தங்குமிடம் உணவு என்ற அனைத்தும் இலவசம் என்று இவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கின்றது. அதன்படி நாட்டில் நலாபுறங்களில் இருந்தும் இதற்கு தேரர்கள் ஆர்வத்துடன் அமிதானந்த தேரரின் வட்ஸ்அப் குழுவில் இணைந்திருக்கின்றார்கள்.

இவர்கள் சொன்னபடி அனைத்தும் இலவசம் என்பதும் உண்மை. பல்கலைக்கழகங்களில் படித்துக் கொண்டிருந்தவர்கள் ஆசிரியராக தொழில் பார்த்த தேரர்கள் என்று 19 முதல் 40 வயது வரையிலானவர்கள் இந்தப் பணயத்தில் இணைந்திருக்கின்றார்கள். அப்படி பெங்கொக் போனவர்கள் அங்கு தங்கி இருந்த மூன்று நாட்களிலும் சுதந்திரமாக அங்கு காவி உடை தூக்கி எறிந்து விட்டு ஜாலியாக சிவில் உடையில் சுற்றித் திரிந்தது மட்டுமல்லாது பெக்கொக் களியாட்டங்களிலும் பங்கு பற்றி அந்த உல்லாச காட்சிகளையும் தங்களது போனில் பதிவு செய்து வைத்திருக்கின்றார்கள். இதற்குப் புறம்பாக இந்த தேரர்களின் அந்தரங்க செயலபாடுகளையும் ஏற்பாட்டாளர்கள் வீடியோவில் பதிவு செய்திருக்கின்றார்கள் என்றும் சொல்லப்படுகின்றது.

பெங்கொக்கில் இவர்களுக்கான ஏற்பாடுகளை அங்கு வசிக்கின்ற தம்மதேரர் என்பவர்  கவனித்திருக்கின்றார். இந்த இருபத்தி இரண்டு பேருக்கும் ஒரே விதமான பொதிகள்- பிளாஸ்டிக் பேக்குகள் கொடுக்கப்பட்டு விமானத்தில் இறங்கி வெளியே சென்றதும் அமிதானந்த தேரரிடம் கையளிக்க வேண்டும். இதனை எக்காரணம் கொண்டும் எவரும் திறந்து பார்க்கக் கூடாது என்றும் இவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருந்தது. அதே நேரம் இதில் இருந்து மூன்று தேரர்கள் ஏற்கெனவே இப்படி பயணம் போய் வந்தவர்கள். இவர்கள் போதை வியாபாரிகளின் முகவர்கள். அவர்கள் இவர்களுடன் இருந்து கொண்டே வேலை பார்த்து வந்திருக்கின்றார்கள்.

பொதிகளில் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் பிஸ்கட், சொக்லட் என்றும் பொருட்கள் இருந்திருக்கின்றன. இதனால்தான் பிடிபட்டதும் சிலர் தாம் போதை கடத்துகின்றோம் என்பதை அறிந்து வைத்திருந்தோம் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு தமது பொதியில் என்ன இருக்கின்றது என்பதே தெரிந்திருக்கவில்லை. இதனைத்தான் நாம் ஒரு மனிதன் எப்படி எல்லாம் உலகையும் சட்டத்தையும் தனது சிந்தனைகள் மூலம் ஏமாற்றலாம் என்பதை விளக்கி இருந்தோம். அதுதான் இந்த ஆட்டத்திலும் நடந்திருக்கின்றது.

இப்படி கொழும்பில் வந்திறங்கியவர்கள் எடுத்து வருகின்ற பிளாஸ்டிக் பேக்களை பெற்றுக் கொள்ள கடவத்தை ரன்முதுகல விகாரை அமிதானந்த தேரர் விமான நிலையத்தில் வாகனத்துடன் காத்திருந்திருக்கின்றார். தேரர்கள்-போதைக் கும்பல்  மாட்டிக் கொண்டதை அறிந்தவுடன் அமிதானந்த தேரர் அங்கிருந்து ஸ்கெப்பாகி இருக்கின்றார். பின்னர் மறைந்திருந்தவரை பொலிசார் கைது செய்திருக்கின்றார்கள். இது பற்றிய செய்திகளைத்தான் இன்று ஊடகங்கள் தொடர்ச்சியாகப் பேசிவருகின்றன. இதற்கு முன்னரும் 12 பேரை இப்படி தாய்லாந்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.

இப்போது இது பற்றி நமக்குக் கிடைத்திருக்கின்ற மேலும் சில தகவல்களை பார்ப்போம். இதற்கு முன்னரும் இப்படி ஒரு குழு பெங்கொக் போய் வந்திருக்கின்றது. இதே பாணியிலான பொதிகள் விமான நிலையத்தில் வெற்றிகரமாக வெளியே எடுத்துவரப்பட்டு அதுருகிரிய சந்ரகுமார என்பவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பதளை குறிப்பிட்ட தேரரே ஏற்றுக் கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதனையும் அமிதானந்த தேரர்தான் ஏற்பாடு செய்திருக்கின்றார். மே மாதத்திலும் 40 பேர் அடங்கிய மற்றுமொரு குழு மீண்டும் தாய்லாந்து-பெங்கொக் போக எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்திருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. காவிகளுக்கு நாட்டில் விஐபி சலுகை மற்றும் மரியாதை இருப்பதால் அதனைப் பாவித்துதான் இந்த போதை வியாபாரிகள் தமது திட்டத்தை வடிவமைத்திருக்கின்றார்கள்.

இதற்கு அப்பால் ஞானசார, கஸ்ஸப, உலப்பன தேரர்கள் இது அரசு தரப்பால் பௌத்த தேரர்களுக்கு எதிரான திட்டமிட்ட ஒரு ஏற்பாடாக இருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக ஊடகங்களில் பகிரங்கமாகவே பேசி வருகின்றார்கள். இவர்கள் ஜேவிபி. காரர்கள் தேரர்களை கொச்சைப்படுத்த காவி உடை தரித்தவர்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்களை-சந்தேகங்களை இவர்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தற்போது இதன் சூத்திரதாரியாக கருதப்படும் தெற்கு ஹம்பந்தோட்டையை சேர்ந்தவர்தான் இந்த அமிதானந்த தேரர். இவர்தான் தற்போது கடவத்தை விகாரையில் இருக்கின்றார். தெற்கு போதை வர்த்தகத்தில் மையமாக இருப்பதும் தெரிந்ததே.

நாம் மேற்சொன்ன கஸ்ஸப தேரர் நமக்குத்தான் இந்த (அசீஸ், ஹேஸ்) போதைகள் தடை ஆனால் தாய்லாந்தில் இதற்குத் தடை கிடையாது என்ற தோரணையில் பேசி கடத்தலை மென்மைப்படுத்தி வருகின்றார். சமுதிதவுடன் நடந்த நேர்காணலில் ஞானசார தேரரும் உலப்பனை தேரரும் தாய்லாந்துப்  பெண் ஒருவர்தான் இந்தப் போதைப் பொருட்களை அங்கிருந்து அனுப்பி இருக்கின்றார். அவருக்கு அங்கு ஒரு போதை உற்பத்தி தொழிற்சாலை கூட இருக்கின்றது. இவருடைய இங்கிலாந்து கணவன் நிக்கி பிலேச்சர் இலங்கை சிறையில் இருந்தவர். தற்போது வெளியே வந்து நீர்கொழும்பு-கொழும்பு-காலி பிரதேசங்களில் தங்கி அவர் இந்த வியாபாரத்தை செய்து வருகின்றார். உளவுப் பிரிவுக்கு பணத்துக்கு தகவல் வழங்கும் நாமல் குமராதான் இதனையும் ஊடகங்களுக்கு சொல்லி இருக்கின்றார்.

எனவே அரசு இவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று தேரர்கள் கேட்டிருக்கின்றார்கள். இது பௌத்தத்துக்கு எதிரான திட்டமிட்ட வேலை  இன்றைய அரசு இப்போது தேரர்களை பலிவாங்குவதால் அவர்கள் மீது எமக்கு சந்தேகம் என்று சமுதிதவுடனான கலந்துரையாடலிலும் இவர்கள் பேசி இருந்தனர் என்பதும் இங்கு அவதானிக்கப்பட வேண்டியது. இவை எல்லாம் அப்படி இருக்க இந்தப் போதைக் கடத்தலின் பின்னணியில் தேரர்கள் அல்லாத சிலர் கூட இருக்கலாம். ஆனால் வியாபாரத்தில் பல தேரர்கள் தொடர்புகள் இருப்பதும் மிகத் தெளிவு.

சமய விழுமியங்கள் ஒழுக்கம் கட்டுப்பாடு என்பவற்றை கற்றுக் கொள்ள தமது பிள்ளைகளை வழிபாட்டு நிலையங்களுக்கும் குருமாரிடமும் அனுப்பி வைக்கின்ற பெற்றோர் இன்று மிகுந்த மன அழுத்தங்களுக்கு இலக்காகி வருகின்றார்கள். போதை வியாபாரத்துக்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதால் போதை வியாபாரிகள் புதிய மார்க்கங்களை கண்டறிவதைத்தான் இந்த யுக்தி காட்டுகின்றது. என்றும் சிந்திக்க முடியும்..

Previous Story

ஞானமும் சஹ்ரானும் கூட்டணி!

Next Story

අප්පච්චි පිහියකුත් අරගෙන එළියට බහිද්දිම මං ඇහුවා-බිරිඳ සහ දියණිය සාක්ෂි දෙයි,