ஈரான் 20, அமெரிக்கா 23.. யூ-டர்ன் அடித்த சரக்கு கப்பல்கள
ஈரான் ராணுவம் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் தலைவர்கள், டிரம்ப் தரப்பில் அடுத்தடுத்து வெளியான கருத்துக்கள் திறக்கப்பட்ட ஹார்முஸ் மீண்டும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணை உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையாக இருக்கும் வேளையில், இப்பாதையில் கிட்டத்தட்ட 50 நாட்களாக அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது.
இன்று ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற 20 கப்பல்களை ஈரான் திருப்பி அனுப்பியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க கடற்படையின் முடக்கம் காரணமாக 23 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் மூலம் இரு தரப்பும் ஹார்முஸ்-ல் சரக்கு போக்குவரத்தை முடக்குவதில் தீவிரமாக உள்ளது.

இதற்கு முன்பு அமெரிக்க முடக்கம் இல்லாத காலத்தில் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் வழித்தடத்தில் சுதந்திரமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டன. ஆனால் தற்போது அமெரிக்க தடை அமலில் இருப்பதால் ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளுக்கு செல்லும் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதன் மூலம் தற்போது ஹார்முஸ் நீரிணை முழுமையான முடக்கத்தை நோக்கி நகர்வது தெரிகிறது.
மேலும் ஈரானின் IRGC படை வணிகக் கப்பல்கள் மீது மூன்று தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதேவேளையில் ஓமன் அருகே ஒரு எண்ணெய் டேங்கர் மீது தாக்குதல் நடைபெற்றதாக அமெரிக்க தரப்பில் கூறப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து வெளியாகும் இந்த தகவல்கள் ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரித்துள்ளது தெரிகிறது.
இதனால் பல கப்பல்கள் பாதுகாப்பு காரணங்களால் ஹார்முஸ்-ஐ கடக்க முடியாத நிலை உருவாகி மீண்டும் திரும்ப சென்றுள்ளது.
நேற்று ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக ஹார்முஸ் நீரிணையை அனைத்து வர்த்தக கப்பல்களும் செல்ல, எவ்விதமான தடையும் இல்லாமல் முழுமையாக பயணிக்க திறக்கப்படும் என அறிவித்தது.
இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகப்படியாக 13 சதவீதம் வரையில் குறைந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து டிரம்ப் தனது பதிவுகளிலும், அமெரிக்காவில் செய்தியாளர் சந்திப்பிலும் ஹார்முஸ் பாதையை திறந்தது சந்தோஷம், ஆனால் ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தை 100 சதவீதம் முடியும் வரையில் அமெரிக்க கடற்படையில் முடக்கம் தொடரும் என அறிவித்தார்.
இதை தொடர்ந்து புதன்கிழமைக்குள் அமைதி பேச்சுவார்த்தை முடிவை எட்டவில்லை எனில் போர் நிறுத்தம் அறிவிப்பு நீட்டிக்கப்படாது அதேபோல் மீண்டும் தாக்குதல் தொடரலாம் என பேசினார்.
இதன் எதிரொலியாக தற்போது ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான சுப்ரீம் நேஷ்னல் செக்யூரிட்டி கவுன்சில் அமெரிக்காவின் கடற்படை தடுப்பு நடவடிக்கையை (blockade) போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்த தடுப்பு நீடித்தால் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) முழுமையாக திறக்கப்படாது. ஈரான் படைகளின் கட்டுப்பாட்டுக்கு கீழ் குறுகிய பாதையில், நிபந்தனை அடிப்படையில் மட்டுமே கப்பல் செல்ல அனுமதிக்கும் நிலை தொடரும் என எச்சரித்துள்ளது.
மேலும், போர் முழுமையாக முடிந்து நிலையான அமைதி ஏற்படும் வரை, ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு ஈரான் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் மொத்த ஹார்முஸ்-ம் மீண்டும் மொத்தமாக முடங்கியது.





