மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், லெபனானைச் சேர்ந்த ஆயுத அமைப்பான ஹிஸ்புல்லா, இஸ்ரேலின் ஹைஃபா கடற்படை தளத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. இந்த தகவலை Al Jazeera என்ற சர்வதேச செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதனுடன் ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பு மற்றும் ஹமாஸ் ஆகிய அமைப்புகளும் சேர்ந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஈரான் சார்பில் ஏவப்படும் ஏவுகணைகள் படிப்படியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதிகளில் விழத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இதனால் இஸ்ரேலுக்கு நாலாபுறமும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

லெபனான் மீது தாக்குதல்
இஸ்ரேலியப் படைகள் மற்றும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே லெபனான் எல்லையில் கடும் போர் நிலவி வருகிறது. கடந்த 2 ஆம் தேதி ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை தொடங்கியது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் லெபனான் மீது வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த இஸ்ரேல் லெபானான் மீதும் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியது.
குறிப்பாக, லெபனான் மீதான தாக்குதலுக்கு சட்ட விரோதமாக வெள்ளை பாஸ்பரசை இஸ்ரேல் பயன்படுத்தியதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சாட்டி இருந்தது.
அதாவது கடந்த மார்ச் 3 ஆம் தேதி லெபனானில் தெற்கு பகுதியில் உள்ள யோஹ்மோர் நகரம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
ஹைஃபா கடற்படை தளம் மீது தாக்குதல்
அப்போது தான் வெள்ளை பாஸ்பரஸை பயன்படுத்தியாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இவ்வாறு அடிக்கடி மோதல் வலுத்து வந்த நிலையில் இன்று ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலில் உள்ள முக்கிய கடற்படை தளமான, ஹைஃபா கடற்படை தளத்தை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஹைஃபா கடற்படை தளம் என்பது இஸ்ரேலின் முக்கியமான கடற்படை தளங்களில் ஒன்றாகும். இது ஹைஃபா நகரில் அமைந்துள்ளது.
நாட்டின் கடற்படை நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்று ஹைஃபா கடற்படை தளம், மத்திய தரைக்கடல் பகுதிக்கான பாதுகாப்பு, ராணுவ கண்காணிப்பு மற்றும் கடல் வழி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான மையமாக செயல்பட்டு வருகிறது.
இஸ்ரேலுக்கு தலைவலி
ஏற்கனவே ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பு மற்றும் ஹமாஸ் ஆகிய அமைப்புகளும் சேர்ந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இது இஸ்ரேலுக்கு மேலும் தலைவலியை கொடுத்துள்ளது.
மறுபுறம் ஈரான் சார்பில் ஏவப்படும் ஏவுகணைகள் படிப்படியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதிகளில் விழத் தொடங்கியுள்ளதாலும் இஸ்ரேல் கலக்கமடைந்துள்ளது. அதே சமயம் பதிலடி கண்டிப்பாக கொடுக்கும் என்பதால் மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.



