நஜீப் பின் கபூர்
நன்றி: 15.03.2026 ஞாயிறு தினக்குரல்

ஜனாதிபதி அணுர இராஜதந்திர ரீதியிலும் சாதித்து வருகின்றார்!
அமெரிக்கா தனது வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்த முனைகிறது.!
ஈரான் வீழ்ந்தால் ரஸ்யா-சீனா இமேஜ் உலகில் சடுதியாக சரியும்.!
மொசாட் உளவு இன்றும் ஈரானில் வெற்றிகரமாக இயங்குகின்றது!

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர். கடந்த வாரமும் இது பற்றி நாம் பேசி இருந்தோம். இந்த வாரமும் அதுபற்றி பேசுவதற்கு நமக்கு நிறையவே தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அத்துடன் இது ஒவ்வொரு தனி மனிதனையும் பாதித்து வருகின்றது. அதனால் அதனைப் பேசித்தான் ஆக வேண்டும். அதே போன்று நாம் வழக்கமாக குற்றம் சாட்டுவது போல நிறையவே ஊடகங்கள் தமது விருப்பங்களையே செய்திகளாக சொல்லிக் கொண்டு வருகின்றன. இதனால் நிறையவே வாசகர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்.அதே போன்று நிறையவே வாசகர்கள் தமது விருப்பங்களுக்கு இசைவான செய்திகளைப் படிப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.
அதற்காக வாசகர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு சொய்திகளை சொல்வது நாகரிகமான ஒரு செயலாக நாம் கருதவில்லை. செய்திகளை நடுநிலையாக முன்வைப்பதுதான் சிறப்பானது என்று நாம் எப்போதும் நம்புகின்றோம். எனவே நமது செய்திகள் சிலருக்கு இனிப்பாகவும் சிலருக்கு கசப்பாகவும் அமையக் கூடும். ஆனாலும் இது நிலையான இனிப்பாகவும் கசப்பாகவும் இருக்க மாட்டாது. போர் பற்றி சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணியை ஈரானால் தோற்கடிக்க முடியாது. அதே போன்று ட்ரம்ப் எதிர்பார்ப்பது போல சில நாட்களில் ஈரானை வீழ்த்தவும் முடியாது. அது அப்படி இருக்க இப்போது போரும் சோறும் நாமும் என்ற தலைப்புக்குள் பிரவேசிப்போம்.
ஆனாலும் தனித்து நின்று இந்தப் போரில் ஈரான் இது வரை தாக்குப் பிடித்ததே பாராட்டக்கூடிய ஒன்றுதான். அதில் நமக்கு மாற்றுக்கருத்துக்கள் கிடையாது. ஆனால் போரில் மிகப் பெரிய இழப்பு ஈரான் பக்கம்தான் என்பது எமது கருத்து. இதற்கு பிரதான காரணம் தனது ஆன்மீகத் தலைவர் கமெய்னியை அது துவக்கத்திலே இழந்து விட்டது. அத்துடன் புதிய தலைவர் முஜிதபா அலி கமெய்னி கூட தாக்குதலில் காயமடைந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இது உண்மையாக இருந்தால் மொசாட் உளவாளிகள் இன்றும் ஈரானில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றார்கள். அதனால் தான் இப்படியாக இலக்குகளை குறிதப்பாது தாக்கி வருகின்றனர். இது எவ்வளவு தூரம் ஆபத்தானது.?’

அமெரிக்காவும்-இஸ்ரேலும் தனது தலைவரை குறி வைக்கின்றார்கள் என்பதனை ஈரான் தெரிந்துதான் வைத்திருந்தது. அப்படி இருந்தும் தனது ஈராணுவத் தலைவர் காசிம் சுலைமானியை எப்படி பறி கொடுத்ததோ அதே பாணியில் தனது ஆன்மீகத் தலைவர் அலி கமெய்னியை ஈரான் பறிகொடுத்தது. இதற்கு மாற்றீடாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலையை ஈரான் எடுத்தாலும் கூட அது ஈடாக மாட்டாது. ஒரு அலி கமெய்னிக்கு டசன் கணக்கான ட்ரம்ப்கள் கூட சமனாக மாட்டார்கள் என்பது நமது கணக்கு. அடுத்து ஈரான் சுற்றி இருக்கின்ற அரபு நாடுகளைத் தாக்கி தனது வல்லமையை காட்சிப்படுத்தி வருகின்றது. அந்த தாக்குதலில் ஒரு நியாயம் இருக்கின்றது. காரணம், அவை அனைத்தும் அமெரிக்க அரசின் கைப்பொம்மைகள். மற்றும் இஸ்ரேல் நட்பு நாடுகள்.
அத்துடன் அங்கு அமெரிக்க பொருளாதார நலன்கள் இருக்கின்றன. அந்த வகையில் தாக்குதல் நியயமானது. தனிப்பட்ட ரீதியில் இலட்சக் கணக்கான கோடி டொலர்களை ட்ரம்ப் டுபாயில் மூலதனமிட்டிருந்தார். அதனால்தான் அதிக தாக்குதலை ஈரான் அங்கு நடாத்தி வருகின்றது. தாக்கப்படுகின்ற நாடுகள் அனைத்தும் ஈரானுடனான நல்லுறவை இழக்கும். அதே நேரம் இந்த நாடுகள் தன்மீது தாக்குதல் தொடர்ந்தால் அவை அமெரிக்க-இஸ்ரேல் இராணுவக் கூட்டணியில் இணைந்து ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்ளும் அபாயமும் இருக்கின்றது. மேலும் அங்கெல்லாம் அமெரிக்க இராணுவத் தளங்கள் இருப்பதும் தெரிந்ததே. அதே நேரம் அந்த அரபு நாடுகளில் இருக்கின்ற குடிமக்கள் தமது அரசு அமெரிக்க-இஸ்ரேல் அணியில் இணைந்து ஈரானைத் தாக்குவதை ஆதரிக்க மாட்டார்கள்.
அதனால் தமது தலைமைக்கு ஆபத்து என்பதையும் அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர்கள் உணர்ந்துதான் இருக்கின்றார்கள். அந்தப் பயம் அவர்களுக்கு இருக்கின்றது. ஈரான் தமது நாட்டில் இருக்கின்ற அமெரிக்கத் தளங்களைத் தாக்கியபோது அங்குள்ள பொது மக்கள் அதனைக் கொண்டாடியும் இருந்தனர். மேலும் அமெரிக்க-இஸ்ரேல் ஆயுதங்கள் தீர்ந்து போய் இருக்கின்றது என்ற பரப்புரையையும் நாம் நிராகரிக்கின்றோம். இன்னும் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடங்கள் போர் தொடர்ந்தாலும் அவை தாக்குப் பிடிக்கும். ஈரானும் அப்படித்தான் இருக்கின்றது.! அதே நேரம் ட்ரம்ப் தனது தனிப்பட்ட பொருளாதார நலன்களுக்காகவே போரை துவங்கினார் என்ற ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு அமெரிக்காவிலே இருக்கின்றது. இது பற்றி பல மேற்கத்திய ஊடகங்களே செய்தி வெளியிட்டு வருகின்றன.

சண்டையை துவங்கியவர்களும் அதற்கு முகம் கொடுப்போரும் போரை தொடர விரும்பியோ விரும்பாமலோ நகர்த்தி வருகின்றார்கள். ஆனால் ஏனைய இலங்கை போன்ற நாடுகள்தான் இதில் கடுமையாக பாதிப்புக்களுக்கு இலக்காகி வருகின்றன. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் கூட இன்னும் தமது முழுப் பலத்தையும் போரில் காட்சிப்படுத்தவில்லை. அமெரிக்கா-இஸ்ரேல் ஆகிய நாடுகளில் அணு குண்டுகள் இருக்கின்றன. அவை இதுவரை பாவனைக்கு வரவில்லை. அதே நேரம் ஈரானிடமும் அணு குண்டுகள் இருக்கலாம் என்ற ஒரு கருத்தும் அல்லது அதற்கு சமனான ஏதாவது ஆயுதங்கள் இருக்கலாம் என்ற ஒரு சந்தேகமும் இருக்கின்றது. இது யாதார்த்தமான ஒரு எதிர்பார்ப்புத்தான். அந்தவகையில் போர் தொடர்ந்தால் இனி இல்லை என்று வரும் போது அவை பாவனைக்கு வரும் ஆபத்து-அபாயம் இருந்து வருகின்றது என்பதும் உண்மை.
இந்த போரில் அமெரிக்க நுழைந்ததற்கு பிரதான காரணம் என்று பல கருத்துக்களை மாற்றி மாற்றி சொன்னாலும்…! நான் தான் உலகில் மிகப் பெரிய ரவுடி-சண்டியன் என்பதனை ரஸ்யாவுக்கும் சீனாவுக்கும் காட்சிப்படுத்துவது. அதே நேரம் தனக்கு எதிராக இன்று உலகத்தில் வம்பு பண்ணிக் கொண்டிருக்கின்ற ஒரே நாடு ஈரான்.! அதனை மட்டுப்படுத்தி ஏனைய நாடுகளுக்கு தனது ரவுடித் தனத்தை அமெரிக்கா உறுதிப்படுத்த முனைகின்றது. அத்துடன் இஸ்ரேலின் இருப்பையும் பாதுகாக்க அமெரிக்க எதிர்பார்க்கின்றது. இதற்கு உலகம் பூராவிலுமுள்ள யூத சமூகத்தினர் என்ன விலையை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராகவே இருக்கின்றனர். இந்தப் போரில் முக்கிய பாத்திரமாக இருக்கும் ட்ரம்பின் மருமகன் ஜெரால்ட் குஸ்னர் (மகளின் கணவன்) ஒரு யூத சமூகத்தை சார்ந்தவர். அவர்தான் அமெரிகாவை போருக்குள் இழுத்து விட்டார் என்று ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் அமெரிக்க மக்களில் அறுபத்தி ஒரு (61) சதவீதம் போருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

ட்ரம்ப் அடுத்த மாதம் சீனா போக இருக்கின்றார். எனவே சீன-அமெரிக்க உறவுகள் சுமுகமாகத்தான் இருக்கின்றது. அதே போன்று இதற்கு முன்னர் சீரியா அதிபர் பசார் அல் அசாட் ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது கூட ரஸ்யா அதற்கு எதிராக ஏதும் பண்ணவில்லை. அவருக்கு தனது நாட்டில் அடைக்களம் வழங்கி இருக்கின்றது அவ்வளவுதான். அவரது தந்தை ஆபீஸ் அல் அசாட் காலத்தில் இருந்தே ரஸ்யாவுடன் அவர்களுக்கு மிக நெருக்கமான உறவு இருந்து வந்தது. இது அண்ணன் தம்பி போல உறவு. அவரையே காப்பாற்றாத ரஸ்யா ஈரானை எப்படி காப்பற்ற முடியும் என்று கேட்க வேண்டி இருக்கின்றது. என்றாலும் ரஸ்யாவும் சீனாவும் ஈரானுக்கு சில ஆயுத தொழிநுட்ப உதவிகளை செய்து வருவதும் உண்மைதான். அதனால்தான் ரஸ்யாவும் சீனாவும் எங்களுடன்தான் இருக்கின்றன என்று ஈரானிய ஆட்சியாhளர்கள் கூறிக் கொள்கின்றார்கள். ஆனால் நேரடியாக களத்தில் இவர்கள் இறங்க மாட்டார்கள் என்பதை நாம் அடித்துச் சொல்லுகின்றோம்.
ஈரானுக்கு ஒரு பின்னடைவு வந்தால் ரஸ்யாவும் சீனாவும் உலக அரங்கில் மூக்குடைபடும். இந்தப் போரில் ஈரானுக்கு உள்ள பல வாய்ப்புக்களில் ஒன்று அதன் நிலப்பரப்பும் இயற்கை அமைப்புகளும். பல அணுகுண்டுகள் போட்டால் கூட ஈரான் முற்றாக அழிந்து போக மாட்டாது. அதே நேரம் இஸ்ரேல் மீது அப்படி ஒரு தாக்குதல் நடந்தால் அது இருந்த இடமே காணாமல் போகும் அல்லது சம்பலாகி விடும். அது பரப்பில் சிறிய ஒரு நாடு.
சண்டை-போர் என்று வரும் போது அழிவு என்பது இயல்பானதுதான். ஆனால் அந்த அழிவு எந்தளவு என்பதும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு எடுக்கின்ற காலமும் அதற்கான செலவும் நாடுகளின் எதிர்காலத்தையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கும். இதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. இப்போது சமாதானம் பற்றிய கருத்துக்கள் பல தரப்பால் குறிப்பாக ரஸ்யா மற்றும் சீன தரப்பில் முன்வைக்கப்படுகின்றது. அதுவும் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க என்று சொல்லப்படுகின்றது.

அதே நேரம் புதிய ஈரானிய ஆன்மீகத் தலைவர் சமாதானம் என்ற பேச்சுக்கே வாய்ப்பு கிடையாது என்று சொல்லி வருகின்றார். அவருடைய இந்த கருத்து எந்தளவுக்கு யதார்த்தமானது என்பது எமக்குத் தெரியாது? எனவே இந்தப் போர் மனிதனின் அடிப்படை தேவைகளுக்கே உழைவைக்கும். அடிப்படைத் தேவைகள் என்று வரும் போது முதலிடம் சோற்றுக்குத்தான். நமக்கு சோறு இன்னும் பல நாடுகளுக்கு அது ரொட்டியாகவோ சோளமாகவோ வேறும் தானியங்களாகவோ இருக்கலாம்.
அது எதுவாக இருந்தாலும் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு வரும். போர் மேலும் இரண்டு வராங்கள் நீடித்தாலே உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு துவங்கி விடும். ஏற்று இறக்குமதி போக்குவரத்து என்பவற்றில் பாரிய நெருக்கடி வரப்போகின்றது. இது ஆசிய நாடுகளை விட அரேபிய நாடுகளுக்கே அதிக பாதிப்பை கொண்டு வரும். காரணம் அந்த நாடுகள் அனைத்தும் தமது அன்றாடத் தேவைகளுக்கு இறக்குமதியை நம்பி இருக்கின்றது. இந்தியாவில் ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றது. பாகிஸ்தான் ஏற்கெனவே பாடசாலைகளை மூடிவிட்டது. அரச தனியார் நிறுவனங்கள் தனது சேவையை மட்டுப்படுத்தி வருகின்றன. போர் தொடர்ந்தால் பல நாடுகளில் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. குறிப்பாக அமெரிக்காவில் இராணுவ ஆட்சி பற்றிய ஒரு கருத்தும் தற்போது பேசுபொருளாகி வருவதை அவதானிக்க முடிகின்றது.
தற்போது நமது நாட்டில் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இது அரசியல் மட்டத்தில் பேசு பொருளாகி வருகின்றது. இலங்கையில் மட்டுமல்ல உலகம் பூராவிலும் இதே நிலைதான். அமெரிக்காவில் கூட இருபத்தி ஐந்து சதவீத அதிகரிப்பு நடந்திருக்கின்றது. ஆனால் இங்குள்ள எதிரணியினர் விலை ஏற்றம் தொடர்பாக பேசுகின்ற கருத்துக்கள் கோமாளித்தனமனவையாக அமைந்திருக்கின்றன. என்றாலும் ரணில் காலத்தில் இருந்ததை விட இன்னும் நாட்டில் பெற்றோலியப் பொருட்களின் விலை குறைவாகத்தான் இருக்கின்றது. இந்திய பாகிஸ்தான் பங்களாதேஷ; என்ற அனைத்து நாடுகளிலும் பெற்றோலிய பொருட்கள் விலை அதிகரிகப்பட்டிருக்கின்றது.
ஹோர்மூஸ் நிரீணை ஊடாக பெற்றோலிய ஏற்று இறக்குமதிக்கு அனுமதித்தாலும் கூட போர் சூழ்நிலையில் கப்பல்கள் அங்கு போகாது. அதே நேரம் இன்று நீரிணையில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே டசன் கணக்கான கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கின்றன. பெற்றோலிய பற்றாக்குறையால் உலகமே ஸ்தம்பிக்கின்ற நிலையில் இலங்கையில் மட்டுமல்ல உலகம் பூராவிலும் பொருளாதார நெருக்கடி. அதனால் நாடுகளில் அனைத்து துறைகளிலும் ஸ்தம்பித்துப் போகும். தொழில் வாய்ப்புக்களை பல கோடிப்பேர் இழப்பார்கள். இது நமது நாட்டையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும்.
சீன-அமெரிக்க கூட தங்களிடம் இன்னும் இருநூறு நாட்களுக்குதான் பெற்றோலியம் கையிருப்பில் இருப்பதாகக் கூறி வருகின்றன. அவுஸ்திரேலிய கூட தன்னிடம் இன்னும் ஒரு மாதத்துக்குத் தேவையாக பெற்றோலியம் கையிருப்பில் இருப்பதாகக் கூறுகின்றது. சமாதானம் வந்தாலும் தற்போது மத்திய கிழக்கில் பெற்றோலிய உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் போல இன்று பற்றி எறிந்து கொண்டிருப்பதால் அதனைச் சரி செய்யவே பல மாதங்கள் கூட எடுக்கலாம்?
நாம் சிங்கப்பூர் மற்றும் இந்திய நிறுவனங்களில் இருந்துதான் பெற்றோலியம் வாங்கி வருகின்றோம் என்று சொல்லிக் கொண்டாலும் அந்த நிறுவனங்கள் எங்கிருந்து பெற்றோலியத்தை கொள்வனவு செய்கின்றன என்பதனை நாம் மறந்து விடக்கூடாது. பொதுமக்களைப் போல நாடுகளும் பெற்றோலியத்தை சேகரித்து வருகின்றன. இதனால் கிடைக்கின்ற சொற்பமான பெற்றோலியப் பொருட்களை வைத்து என்னதான் பண்ண முடியும் என்பதனை கற்பனை செய்து பார்த்தால் இந்த நெருக்கடியின் பாரதூரத்தை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.
எல்லோருக்கும் போல இது நமக்கும் பொதுவானது. இதில் நாம் புதிய பல அனுபவங்களை பார்க்கவும் அனுபவிக்வும் கூடிய ஒரு நிலை வரும். அவை அப்படி இருக்க நமது ஜனாதிபதி ஈரானிய கடற்படை கப்பல் மற்றும் அதில் இருந்த வீரர்கள் விவகாரத்தில் நடந்து கொண்ட விதம் உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச அரங்குகளிலும் சிலாகித்துப் பேசப்பட்டு வருகின்றது. இந்தப் போரானது நமக்கு பல ஆயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் நடந்து கொண்டிருந்தாலும் ஒவ்வொரு தனி மனிதனதும் இருப்பும் உயிர் வாழ்வதிலும் உள்ள சிக்கல்களை இது நமக்கு காட்சிப்படுத்தும். எனவேதான் தலைப்பை போரும் சோறும் நாமும் என்று இங்கு போட்டிருக்கின்றோம். போர் உடனடியாக முடிவுக்கு வந்தாலும் சுமுக நிலை வர பலமாதங்கள் வரை எடுக்கலாம்.




