ஈரான் தேசத்தின் அசைக்க முடியாத சக்தியாக கருதப்பட்ட 86 வயது உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அதிகாரம் ஒரு விநாடியில் முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த வாரம் இஸ்ரேல் – அமெரிக்கா தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.
அதுவும் விண்ணின் எல்லையிலிருந்து பாய்ந்து வந்த ‘ப்ளூ ஸ்பாரோ’ (Blue Sparrow) ஏவுகணையால் இந்த அதிரடிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சனிக்கிழமை காலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய இந்தத் தாக்குதல் ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்துள்ளது.
விண்வெளியைத் தொட்டுத் திரும்பிய ‘ப்ளூ ஸ்பாரோ’ கமேனியைக் குறிவைக்க இஸ்ரேல் பயன்படுத்திய ஆயுதம் சாதாரணமானதல்ல. ‘ப்ளூ ஸ்பாரோ’ என்பது விண்வெளியின் விளிம்பு வரை சென்று, அங்கிருந்து பூமியை நோக்கி மிக அதிவேகத்தில் பாயும் திறன் கொண்டது.
இது ஒரு ‘குவாசி-பாலிஸ்டிக்’ (Quasi-ballistic) ஏவுகணை வகையைச் சார்ந்தது. சுமார் 6.5 மீட்டர் நீளமும், 1.9 டன் எடையும் கொண்ட இந்த ஏவுகணை, F-15 ஈகிள் போர் விமானங்களிலிருந்து ஏவப்படுகிறது. ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே இது வளிமண்டலத்தின் உச்சிக்குச் சென்று, பின் இலக்கை நோக்கி செங்குத்தாக விழும்.
இதன் வேகம் மற்றும் செங்குத்தான பாதையினால், ஈரானின் நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளால் இதைக் கண்டறிந்து தடுப்பது இயலாத ஒன்றாகப் போனது. சுமார் 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாகத் தாக்கும் வல்லமை இதற்கு உண்டு.
ஆபரேஷன் எபிக் ஃபியூரி (Operation Epic Fury) ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ என்ற பெயரில் இஸ்ரேல் இந்த ரகசியத் திட்டத்தைச் செயல்படுத்தியது. சனிக்கிழமை காலை 7:30 மணிக்கு இஸ்ரேலியப் போர் விமானங்கள் புறப்பட்டன.
காலை 9:40 மணியளவில், தெஹ்ரானில் உள்ள கமேனியின் பலத்த பாதுகாப்பு கொண்ட ‘பாஸ்டர் தெரு’ (Pasteur Street) வளாகத்தின் மீது சுமார் 30 துல்லியமான ஏவுகணைகள் ஏவப்பட்டன.
கமேனி பொதுவாகத் தரைக்கு அடியில் உள்ள பாதுகாப்பான பதுங்கு குழிகளில்தான் தங்குவார். ஆனால், அன்று காலை முக்கிய ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக அவர் தரைக்கு மேலே வந்த அந்த அரிய தருணத்திற்காக இஸ்ரேலிய உளவு அமைப்பான ‘மொசாட்’ காத்திருந்தது.
பல ஆண்டு கால உளவுத் திட்டம் இந்தத் தாக்குதல் ஏதோ ஒரு நாளில் திட்டமிடப்பட்டது அல்ல. மொசாட் மற்றும் இஸ்ரேலின் சைபர் பிரிவான ‘யூனிட் 8200’ ஆகியவை இணைந்து பல ஆண்டுகளாகச் செய்த வேவுப் பணியின் விளைவு இது.
தெஹ்ரான் நகரின் போக்குவரத்து கேமராக்கள் பல ஆண்டுகளாக ஹேக் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டன. கமேனியின் பாதுகாப்பு அதிகாரிகளின் நடமாட்டம் மற்றும் தகவல் தொடர்புகள் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அந்தப் பகுதியில் உள்ள மொபைல் நெட்வொர்க்குகள் முடக்கப்பட்டு, யாருக்கும் எச்சரிக்கை செல்லாதவாறு தடுக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் கமேனியுடன் சேர்ந்து, ஈரானின் புரட்சிகர காவல்படையின் (IRGC) உயர்மட்ட தளபதிகளும் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் அரசு ஊடகமும் மறுநாள் காலையில் கமேனியின் மரணத்தை உறுதி செய்தது. தெஹ்ரான் நகரின் இதயப்பகுதியில் புகை மண்டலங்கள் சூழ்ந்திருக்கும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஈரானின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும்? மத்திய கிழக்கில் இது மிகப்பெரிய போருக்கு வழிவகுக்குமா என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.




