வெடிக்கும் போர்? ஈரானை சுத்துப்போட்ட அமெரிக்க

பதிலடிக்கு தயாரான கமேனி

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை தொடர்ந்து மிரட்டி வருகிறார். தற்போது ஈரானை சுற்றிய இடங்களில் உள்ள விமானப்படை தளத்தில் போர் விமானங்களை குவித்துள்ளார். அதோடு விமானம் தாங்கும் போர்க்கப்பல், தாக்குதல் நடத்தும் போர்க்கப்பல்களை ஈரான் அருகே அனுப்பி வைத்துள்ளது.

இதனால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஈரான் மீதான எந்த தாக்குதலையும் போராக கருதி பதிலடி கொடுக்க ஈரான் தயாராகி வருகிறது. மிகமோசமான சூழல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள எங்களின் ராணுவம் உஷார் நிலையில் உள்ளது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக பகை உள்ளது.

ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதாக கூறி இஸ்ரேலுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு அமெரிக்கா அந்த நாட்டின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுப்போட்டு தாக்கியது. அதன்பிறகு இப்போது இருநாடுகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

ஈரான் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதனால் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் இந்த போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இருக்கலாம் என ஈரான் குற்றம்சாட்டுகிறது.

அதோடு ஈரானில் தற்போது வரை பல்லாயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மேலும் இந்த போராட்டத்தை வைத்து ஈரான், அமெரிக்கா இடையேயான மோதல் உச்சமடைந்துள்ளது.

இந்நிலையில் தான் டிரம்ப் தற்போது தனது நாட்டின் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா தாக்கலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. இதனால் ஈரானில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அதேவேளையில் ஈரானும், அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் தயாராகி வருகிறது.

இதுபற்றி ஈரானை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛ஈரான் மீதான எந்த வகையான தாக்குதலும் எங்கள் மீதான முழுமையான போர் என்று கருதுவோம். டொனால்ட் டிரம்ப்பின் ராணுவ அச்சுறுத்தலை எதிர்கொள்ள எங்களிடம் உள்ள அனைத்தையும் பயன்படுத்த ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சி உறுதியாக உள்ளது.

எங்களை தாக்கினால் நிச்சயம் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப்படும்” என்றார். அமெரிக்கா தற்போது தனது போர்கப்பல்களை ஈரான் நோக்கி அனுப்பி வருகிறது. விமானம் தாங்கி போர்கப்பலாக இருக்கும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மற்றும் டோமஹாக் ஏவுகணைகளுடன் கொடூரமான தாக்குதல் நடத்தும் 3 போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கி அமெரிக்கா அனுப்பி உள்ளது.

இதில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் எஃப்-35சி மற்றும் எஃப்/ஏ-18 போர் விமானங்களை கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி அமெரிக்கா சார்பில் ஜோர்டான் நாட்டின் பிரிட்டனுக்கு சொந்தமான விமானப்படை தளத்தில் F-15E Strike Eagle jets என அழைக்கப்படும் 12 போர் விமானங்களை அமெரிக்கா நிலைநிறுத்தி உள்ளது. இந்த விமானங்களை கொண்டு தான் கடந்த ஆண்டு ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியது.

தற்போது அந்த விமானங்கள் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வானிலேயே எரிபொருள் நிரப்பக்கூடிய KC-135 aerial refuellers விமானம், மற்றும் C-130 கார்கோ விமானங்கள் உள்ளிட்டவையும் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

கனவைக் குழப்பி விடாதீர்கள்!

Next Story

போலிக் காவி அதிரடி ஆட்டம்!