அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த ஈரான்!
கூட்டாளி நாடுகளுக்கும் பகிரங்க வார்னிங்!
ஈரானில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களை காரணமாக காட்டி, அமெரிக்கா தலையிட முயன்றால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்க ராணுவம் முகாமிட்டுள்ள அண்டை நாடுகளில் உள்ள ராணுவ தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் வெளிப்படையாக அறிவித்திருப்பது, மேற்கு ஆசியாவில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஈரானில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஈரான் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த சூழலில், ஈரானில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தது, ஈரான் அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் போராட்டங்கள் இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா போராட்டங்களை காரணம் காட்டி ஈரான் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால், அதற்கு நேரடியாக பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்க ராணுவம் தங்கியுள்ள வளைகுடா நாடுகளில் உள்ள தளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஈரானுக்கு அருகில் உள்ள நாடுகளில் போர் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஈரான் மீது தாக்குதல் மேலும், அமெரிக்காவின் கூட்டணி நாடுகள், தங்களின் நிலப்பரப்பை பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும், அப்படி அனுமதி வழங்கினால் அதற்கும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் கூறியுள்ளது.
இதற்காக, அமெரிக்காவின் நட்பு நாடுகளிடம் ஈரான் தூதரக வழியாக எச்சரிக்கை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், ஈரான் வெளிநாட்டு அமைச்சர் அப்பாஸ் ஆராக்சி மற்றும் அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் இடையே நடைபெற்றுவந்த நேரடி பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளதே, இரு நாடுகளுக்கிடையே நிலவும் பதற்றத்தின் தீவிரத்தை காட்டுகிறது. அதே நேரத்தில், மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, கத்தார் நாட்டில் உள்ள அல் உடெய்ட் விமானப்படை தளத்தில் இருந்து சில அமெரிக்க ராணுவ வீரர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ராணுவ தளங்கள் அல் உடெய்ட் தளம், மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ தளமாக கருதப்படுகிறது.
இங்கு சுமார் 10,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். இந்த தளத்தில் இருந்து சிலர் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ள தகவல், போர் அபாயம் அதிகரித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
ஈரான் தாக்குதல் நடத்தக்கூடிய சூழல் உருவாகலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தூதரக வட்டாரங்கள் கூறுகின்றன. ஈரான் எச்சரிக்கை ஈரான் தரப்பில், “உள்நாட்டு போராட்டங்களை காரணம் காட்டி வெளிநாட்டு தலையீடு அனுமதிக்க முடியாது. அது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.
அதே சமயம், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ஈரானில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றன. இந்த பரஸ்பர குற்றச்சாட்டுகள் மற்றும் எச்சரிக்கைகளால், மேற்கு ஆசியா முழுவதும் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
ஒரு சிறிய சம்பவம் கூட பெரிய ராணுவ மோதலாக மாறும் அபாயம் இருப்பதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.





