“இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் உலகிலிருந்து ஒழிக்க வேண்டும்.”

துறவி நரசிம்மானந்த்!

-வினீத் காரே-

“இன்று இஸ்லாமியர்கள் என்றழைக்கப்படுபவர்கள் முற்காலத்தில் ராட்சசர்கள் என்றழைக்கப்பட்டனர்.”

“இஸ்லாம் மதம் முறைப்படுத்தப்பட்ட குற்றச் செயல் புரிபவர்களின் கூட்டம். அதன் ஆதாரம் பெண்களை வர்த்தகப் பொருட்களாக்கி, அவர்களைச் சிதைப்பது. மாற்று மதப் பெண்களைச் சூறையாடுவது தான் அந்த மதத்தின் முக்கியமான ஆதாரம்”

இந்த வெறுப்புப் பிரசாரம், காஸியாபாத் மாவட்டம் டாஸ்னாவில் உள்ள தேவி கோவிலின் பீடாதிபதியும் ஜூனா அகாடாவின் மண்டலப் பொறுப்பாளருமான துறவி யதி நரசிம்மானந்தா அவர்களின் உரையாகும். இந்தக் கோவிலின் வாயிலில் இஸ்லாமியர்களுக்கு அனுமதியில்லை என்று பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது.

CAA-விற்கு எதிராக ட்வீட் செய்ததற்காகவோ, புகாரளித்ததற்காகவோ அல்லது போஸ்டர்களை ஒட்டியதற்காகவோ பலரைக் கைது செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரப் பிரதேசத்தில், இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்களை வெளியிட்ட யதி நரசிம்மானந்த சரஸ்வதி ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

யதி நரசிம்மானந்த் சரஸ்வதி இந்துத்துவா தலைவர்களின் நீண்ட வரிசையில் அதிகம் பேசப்படும் முக்கியமான பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.முஸ்லிம்களுக்கு எதிரான அவரது ஆத்திரமூட்டும் அறிக்கைகள் கடந்த பல ஆண்டுகளாக மக்களிடையே பரவி வருகின்றன.

ஜூனா அகாடாவின் மண்டலப் பொறுப்பாளராகப் பதவியேற்ற நரசிம்மானந்த், டாஸ்னா தேவி கோயிலையும் அதன் நிலத்தையும் தனது தனிப்பட்ட சொத்தாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள டாஸ்னாவில் உள்ள சில உள்ளூர்வாசிகள் யதி நரசிம்மானந்தாவின் பேச்சுக்களை யாரும் பொருட்படுத்துவதில்லை என்று கூறுகிறார்கள், ஆனால் காஸியாபாத்தின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், இந்த பேச்சுகள் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரிவினையை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

குறிப்பாக உத்தரபிரதேச தேர்தல் நெருங்கி வரும் வேளையில், வகுப்புவாத துருவமுனைப்பு பல வட்டாரங்களில் தெளிவாகத் தெரிய காஸியாபாத் நகரத்தில் நடக்கும் நிகழ்வுகள், அவற்றின் தாக்கம் மாநிலம் முழுவதும் எதிரொலிக்கிறது.

நான் உத்திரபிரதேசத்திற்கு பயணம் செய்தபோது, நரசிம்மானந்த சரஸ்வதியின் ‘நச்சுக் கருத்துகள்’ குறித்துப் பல இஸ்லாமியர்கள் கவலை தெரிவித்தனர். ஆனால் அவர்கள் யோகி ஆட்சியால் கட்டுப்படுத்தப்படாதது ஏன்?

தாஸ்னா தேவி கோவில்

சமீபத்தில், ஹரித்வாரில் நடந்த மதங்களின் நாடாளுமன்றத்தில், யதி நரசிம்மானந்த், “இஸ்லாமியர்களைக் கொல்ல, வாள் தேவையில்லை. ஏனென்றால் அவர்கள் உங்கள் ஆயுதங்களால் மடியக்கூடியவர்கள் அல்லர். தொழில்நுட்பத்தில் நீங்கள் அவர்களைவிட முன்னேற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்து ‘சமயப் பாராளுமன்றத்தில்’ இஸ்லாமிய இனப்படுகொலை பற்றி வெளிப்படையாகப் பேசப்பட்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, இந்தக் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட வெறுப்புப் பேச்சு வழக்கில் உத்தரகாண்ட் காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

எஃப்.ஐ.ஆரில் யதி நரசிம்மானந்தின் பெயர் பின்னர் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த எஃப்.ஐ.ஆரில் முதலில் அவரது பெயர் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதை போலீசார் தெளிவுபடுத்தவில்லை.

இவருக்கு எதிரான வழக்குகள்

யதி நரசிம்மானந்த் மீதான எஃப்.ஐ.ஆர் மற்றும் வழக்குகளுக்குப் பஞ்சமில்லை. அவரது வழக்கறிஞரும் டாஸ்னா தேவி கோவிலின் மஹந்த்துமான மா சேத்னானந்த சரஸ்வத், இவருக்கு எதிராக சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன என்றும் சில குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் சில வழக்குகளில் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும் சில வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

உத்தரகாண்டில், யதி நரசிம்மானந்தாவுக்கு எதிராக 153-A மற்றும் 295-A ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளன. 153-A என்பது மதம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் சமூகங்களுக்கு இடையே பகையைப் பரப்புவது மற்றும் பிரிவு 295-A என்பது மத உணர்வுகளைப் புண்படுத்துவது அல்லது புண்படுத்த முயற்சிப்பது.

காஸியாபாத் காவல்துறையின் கீழ் உள்ள 10 வழக்குகளில், யதி நரசிம்மானந்த் மீது ஐபிசி 306, 307, 395 போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பிரிவு 306 என்பது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் பிரிவு 307 என்பது கொலை முயற்சி என்று. 395 என்றால் கொள்ளை என்று பொருள்.

மூத்த வழக்கறிஞர் ராஜேஷ் தியாகியிடம், நாங்கள் காஸியாபாத் காவல்துறையில் இருந்து பெற்ற தகவலைப் பகிர்ந்து கொண்டோம். மேலும் யதி நரசிம்மானந்த் சரஸ்வதியின் பேச்சுகள் மற்றும் பிற வழக்குகளில் காவல்துறையால் விதிக்கப்பட்ட பிரிவுகள் குறித்து அவரது கருத்தைக் கேட்டோம்.

மதங்களின் பாராளுமன்றம்

ஹரித்வாரில் நடந்த வெறுப்புப் பேச்சு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதிய 76 வழக்கறிஞர்களில் ராஜேஷ் தியாகியும் ஒருவர்.மீரட்டில் வசிக்கும் ராஜேஷ் தியாகி, அவரது வீடியோக்களையும் அவர் பயன்படுத்தும் மொழியையும் தொடர்ந்து பார்த்து வருவதால், “காவல்துறை அவருக்குக் கருணை காட்டி வருகிறது என்று தான் சொல்லவேண்டும்” என்று கூறினார்.

“அவர் மீது துவேஷம், கொலை முயற்சி போன்ற பிரிவுகள் போடப்பட்டுள்ளன. குற்றங்களை மீண்டும் செய்யும் அவருக்கு இந்த வழக்குகளில் எப்படி ஜாமீன் கிடைக்கிறது என்று புரியவில்லை. அவரது ஜாமீனை ரத்து செய்யவேண்டும்.” என்றும் அவர் கூறுகிறார்.

“அவர்கள் அதிகார வர்க்கத்தால் நேரடியாகப் பாதுகாக்கப்படுகிறார்கள். காவல்துறை இவர்களை எதுவும் சொல்வதில்லை, நிர்வாகம் எதுவும் சொல்வதில்லை. வழக்குப் பதிவு செய்து விட்டுவிட்டார்கள். அதனால் இவர்கள் கவலையில்லாமல் இருக்கிறார்கள்.”அப்படி விதைக்கப்படும் விஷத்தால், மிகப் பெரிய அளவில் படுகொலைகள் நடக்கலாம் என்பதுதான் ஆபத்து என்கிறார் ராஜேஷ் தியாகி.

மேலும், “இந்த விவகாரம் நேரடியாக UAPA-வின் கீழ் வரக்கூடியது. ஆனால் காவல்துறை UAPA-வைப் பயன்படுத்தவில்லை. ஹரித்வார் வழக்கில் UAPA விதிக்கப்படவில்லை, இது ஒரு நேரடி UAPA வழக்கு. ஆவணங்கள், டிஜிட்டல், வீடியோ என்று ஆதாரங்கள் உள்ளன.”

காஸியாபாத் எஸ்எஸ்பி பவன் குமார், பிபிசி-யுடனான உரையாடலில், யதி நரசிம்மானந்த் சரஸ்வதிக்கு எதிரான நடவடிக்கையில் எந்த அரசியல் அழுத்தமும் இல்லை என்று மறுத்தார்.உத்தரகாண்டில் உள்ள கட்வால் டிஐஜி கரண் சிங் நாகன்யால், பிபிசி-யுடனான உரையாடலில், காவல்துறை மீது அரசியல் அழுத்தம் எதுவும் இல்லை என்றும் தாங்கள் யதி நரசிம்மானந்த் மீது ‘மென்மையான’ போக்கைக் கடைபிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஹரித்வாரில் நடந்த வெறுப்புப் பேச்சு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதிய 76 வழக்கறிஞர்களில் ராஜேஷ் தியாகியும் ஒருவர்இந்த வழக்கில் அமைக்கப்பட்ட எஸ்ஐடியின் அறிக்கை எப்போது வரும் என்று கூறாத கரண் சிங் நாகன்யால், “கூடிய விரைவில் ஆதாரங்களைச் சேகரித்து இறுதிக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வோம்,” என்றார்.

தேவி கோவில் முற்றத்தில் அமைந்துள்ள ஒரு மண்டபத்தில் பிபிசியுடன் உரையாடிய அனில் யாதவ், யதி நரசிம்மானந்த் சரஸ்வதிக்கு நெருக்கமானவர், ‘சோட்டா நரசிம்மானந்த்’ என்று அழைக்கப்படுபவர். சிரித்துக்கொண்டே, “வழக்குகளின் நீண்ட பட்டியலே உண்டு. ஆனால், எந்த பிரச்னையும் இல்லை. இவை எங்களுக்கு ஆபரணங்கள் போன்றவை.” என்கிறார்.

“குருஜி எந்த குற்றமும் செய்யவில்லை, அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்பது தான் நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம்,” என்றும் அவர் கூறினார்.

யதி நரசிம்மானந்த் சரஸ்வதிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 13 வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று காசியாபாத் காவல்துறை கூறுகிறது.

யதி மீது குண்டர் சட்டம் போடும் விவகாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். காஸியாபாத் மாவட்ட மெஜிஸ்ட்ரேட் ராகேஷ் குமார் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை அனுப்பிய செய்திகளுக்குப் பதிலும் வரவில்லை. அதாவது, இவர் மீது பல வழக்குகள் நடந்து வந்தாலும், டெல்லி பிரஸ் கிளப் மற்றும் டெல்லி கலவரத்தின் போது வகுப்பு வாதச் சூழலை மோசமாக்கும் அச்சுறுத்தல்கள், ஆத்திரமூட்டும் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் அவரது இஸ்லாமிய விரோத அறிக்கைகள் தொடர்ந்து மக்களைத் தடையின்றிச் சென்றடைகின்றன.

அரசியல் பாதுகாப்பு?

யதி நரசிம்மானந்திற்கு எதிராக எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்காததற்கு யோகி அரசாங்கத்தின் அனுசரணையே காரணம் என்று குற்றம் சாட்டினார் காஸியாபாத் காவல்துறை அதிகாரி ஒருவர்.

“அவருக்கு எதிராக எதுவும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று மேலிடத்திலிருந்து தெளிவான உத்தரவு உள்ளது. ” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்தார். யதிக்கு எதிரான வழக்குகள் தொடர வாய்ப்பில்லை என்றும் தானே அதைப் பற்றி மோசமாக உணர்வதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்குகளைத் தேவையின்றி இழுத்தடித்துக் காலம் கடத்தவே இந்த வழக்கறிஞர்கள் முயல்வதாக இந்த அதிகாரி தெரிவிக்கிறார்.

யதி நரசிம்மானந்திற்கு எதிராக குண்டாஸ் சட்டம் சுமத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் காட்டப்படும் மெத்தனப் போக்கு குறித்து, மற்றொரு காஸியாபாத் காவல்துறை அதிகாரியும் இதே போன்ற கருத்து தெரிவித்தார்.

அரசியல் பாதுகாப்பால் தான் நீதிமன்ற வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதான குற்றச்சாட்டு குறித்து, யதி நரசிம்மானந்த சரஸ்வதியின் வழக்கறிஞரும், டாஸ்னா தேவி கோயில் மஹந்த்துமான மா சேத்னானந்த சரஸ்வதி, அரசியல் ஆதரவு எப்படி நீதிமன்ற வழக்குகளை நீட்டிக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்.

யதி நரசிம்மானந்த் சரஸ்வதிக்கு எதிரான நடவடிக்கையில் எந்த அரசியல் அழுத்தமும் இல்லை என்று காசியாபாத் எஸ்எஸ்பி பவன் குமார் மறுத்தார்

வெறுப்புப் பேச்சு குறித்த வழக்குகளே அரசியல் காரணமாகத் தான் என்று விவரித்த அவர், “எத்தனை முறை உடல்நிலை சரியில்லை என்று கூறி விண்ணப்பிக்க முடியும்? அடிக்கடி இப்படிச் செய்வதால், ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்டை நீதிமன்றம் பிறப்பிக்கக்கூடும்.” என்கிறார்.

யதி நரசிம்மானந்தின் சித்தாந்தத்தின் வாரிசு என்று தன்னைக் கூறிக்கொள்ளும் அனில் யாதவ், “குருஜிக்கும் யோகிஜிக்கும் நல்ல உறவு இருக்கிறது” என்று தயக்கமின்றி வெளிப்படையாகக் கூறுகிறார்.

பாஜகவில் ‘குருஜி’யை மரியாதையாகக் கருதும் பல தலைவர்கள் உள்ளனர். ஆனால் பல நேரங்களில் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக வெளிக்காட்டிக்கொள்வதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

அனில் யாதவ், பாஜக தலைவர் கபில் மிஸ்ராவைப் பற்றி குறிப்பிடுகையில், அவர் இங்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார், பின்னர் ஒரு ட்வீட்டிற்குப் பிறகு தன்னைத் தானே விலக்கிக்கொண்டார், அது கட்சியின் கட்டாயமாக இருக்கலாம்” என்று கூறினார்.

பாஜக தலைவர் கபில் மிஸ்ரா யதி நரசிம்மானந்தின் அறிக்கைகள் குறித்து ஒருபோதும் கவலைப்படவில்லை. ஏப்ரல் 2021 இல் அவருக்காக நன்கொடைகளை கூடச் சேகரித்தார்.

பிபிசியுடனான உரையாடலில் இதற்குப் பதிலளித்த கபில் மிஸ்ரா, “யதி மீது தாக்குதல் குற்றச்சாட்டு எழுந்த போது, அவருக்கு எதிராக ஃபத்வாக்கள் வெளியிடப்பட்டன. இந்த வழியில் ஒரு மனிதனைக் கொன்றுவிடுவோம் என்று வெளிப்படையாக மிரட்டல் விடுக்கப்படும் நிலையில் அவர் கமலேஷ் திவாரி போன்ற நிலையில் இருக்கிறார், அப்போது அவருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். அதற்காக நிதி திரட்டி அவர்களின் பாதுகாப்புக்காக 50 லட்சம் கொடுத்தோம். அதன் பிறகு அவருடைய சில அறிக்கைகள், குறிப்பாக பெண்களைப் பற்றி வந்தன, அது எனக்குப் பிடிக்கவில்லை. அப்போது, கோவிலில் அமர்ந்திருக்கும் எந்த நபருக்கும் இதுபோன்ற அறிக்கைகள் தகுதியானவையாகத் தெரியவில்லை என்று நான் சொன்னேன். நான் அவரிடம் செல்வதையும் அவரைச் சந்திப்பதையும் நிறுத்தினேன்” என்று விளக்கினார்.

மேலும், “கட்சியைப் பொறுத்த வரையில் இதுகுறித்து எந்த விவாதமும் இல்லை என்று கபில் மிஸ்ரா கூறினார். கட்சிக்கு வேறு பல பிரச்னைகள் பேச வேண்டியுள்ளது. பா.ஜ.க.வில் எந்த மட்டத்திலும் இதுபோன்ற எந்த ஒரு விஷயத்திலும் எந்த விவாதமும் பேச்சுவார்த்தையும் இல்லை என்று நினைக்கிறேன்,” என்றார் அவர்.

உத்தரப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, யதி நரசிம்மானந்த் விவகாரத்தில் அரசின் தலையீட்டை மறுத்து, “உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஜியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, சட்டத்தை மீறும் எவர் விஷயத்திலும் காவல்துறைக்கு முழுச் சுதந்தரம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவரது உடை பச்சையா காவியா, அவரது ஜாதி என்ன, மதம் என்ன, என்றெல்லாம் பார்க்காமல், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.” என்றார்.

ராகேஷ் திரிபாதி கூறுகையில், கலாசார மரபுகளைக் கெடுக்கும் எந்த ஒரு வகுப்புவாதச் செயலையும் அரசாங்கம் கண்டிக்கிறது என்று விளக்கினார்.

ஆனால், முதல்வர் யோகி ஆதித்யநாத்தே, முஸ்லிம்களைக் குறிவைத்து ‘அபாஜான்’, ‘அலி’, ‘பஜ்ரங்பலி’ போன்ற பிரிவினைவாத வார்த்தைகளைப் பிரயோகித்து வருகிறார் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில், இந்துக்களும் முஸ்லிம்களும் தனித்தனி கலாசாரமாக இருக்கவேண்டும், அவர்கள் ஒன்றாக வாழ முடியாது என்று கூறினார்.

மறுபுறம், தன்னை அரசியலமைப்பின் விசுவாசி என்று அழைக்கும் ‘சோட்டா யதி’ அனில் யாதவ், யதியின் ஆதரவாளர்கள் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வார்கள் என்று கூறுகிறார்.

“பாஜகவில் ஒரு தலைவர் இருக்கிறார், அவர் பெயர் யோகி ஆதித்யநாத்” என்கிறார்.நரேந்திர மோதி குறித்து கருத்து தெரிவித்த அவர், “மாண்புமிகு மோதி ஜி இஸ்லாமியர்களுக்கு இதுபோன்ற பல பரிமாணங்களை திறந்து வைத்துள்ளார். தற்போது தனது 10 வருட காலத்தில், அவர்களை மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகவும் மாற்றியுள்ளார்” என்றார்.

யதி நரசிம்மானந்தின் சித்தாந்தத்தின் வாரிசு என்று தன்னை கூறிக் கொள்ளும் அனில் யாதவ்

யதி நரசிம்மானந்த் மற்றும் அவருடன் பணிபுரியும் குழுவினர் ஒரு அதிதீவிர இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை ஏற்று, ‘இந்து இனத்தையும் அதன் வளர்ச்சியையும்’ காப்பாற்ற அழைப்பு விடுத்துள்ளனர்.டாஸ்னா கோவில் முற்றத்தைச் சுற்றிலும் இந்துக்கள் குறைந்தது ஐந்து குழந்தைகளாவது பெற்றுக் கொள்ளவேண்டும், இதனால் இந்து மதம் காப்பாற்றப்படும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன,

பரவும் மதவாதமும் அரசு செலவில் கோயில் பாதுகாப்பும்

டாஸ்னாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். இங்குள்ள பெரும்பாலான மக்கள் சிறு வேலை, விவசாயம் அல்லது கூலி வேலை செய்பவர்கள்.

உள்ளூர் மக்களிடம் பேசும்போது, இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே வளர்ந்து வரும் அவநம்பிக்கை, சந்தேகம், தூரம் போன்ற உணர்வுகளை உணரமுடிகிறது. இருப்பினும் இந்த உணர்வுகள் எவ்வளவு காலமாக அவர்களின் மனதில் உருவாகி வருகின்றன அல்லது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்து கொள்வது எளிதானது அல்ல.

கோவிலுக்கு எதிரே காங்கிரஸின் சதீஷ் சர்மாவின் வீடு உள்ளது. அவர் டாஸ்னாவில் பிறந்தவர். மற்றவர்களைப் போலவே, அவர் தனது குழந்தைப் பருவத்தில் இருந்து, விளையாடுவதற்கும் சுத்தம் செய்வதற்கும் அல்லது குளிப்பதற்கும் கோயிலுக்குச் செல்வது வழக்கம்.

குளிர்ந்த காலையில் வெயிலில் தனது வீட்டின் வெளியே பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருந்த சதீஷ் சர்மா, “நான் கட்சிக்காரன் என்பது இரண்டாம்பட்சம் தான். முதலில் ஒரு தீவிர இந்து, ஆனால் இந்துத்துவவாதி அல்ல” என்றார்.சட்டசபை தேர்தலில் சதீஷ் சர்மாவுக்கு கட்சி சீட்டு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் டாஸ்னாவை இந்து-இஸ்லாமியர் சங்கமத்தின் அடையாளமாகவே பார்க்கிறார். “இங்கு இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் சுகதுக்கங்களில் பங்கு கொள்வார்கள். ஒன்றாகக் கோயில்களுக்குச் செல்வார்கள். 1947 அல்லது 1992 ஆம் ஆண்டுகளில் மத அடிப்படையில் எந்தக் கலவரமும் நடந்ததில்லை.முன்பு ராஜஸ்தான் அல்லது பிற இடங்களில் இருந்து முஸ்லிம்கள் டாஸ்னா கோவிலுக்குப் பிரசாதம் நைவேத்தியம் செய்ய வருவார்கள்,” என்று அவர் கூறுகிறார்.

டாஸ்னாவில் வசிப்பவரும் சமாஜ்வாதி கட்சிக்கு நெருக்கமானவருமான சஜித் ஹுசைன், சதீஸ் சர்மாவின் இல்லத்துக்கு அருகில் வசிப்பவர். அவர் கோவிலில் தசரா வழிபாட்டிற்குப் பணம் கொடுத்ததையும் சட் பூஜையில் பங்கேற்றதையும் நினைவில் கொள்கிறார்.

ஆனால் இன்று கோவிலுக்குள் இஸ்லாமியர்கள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழைய, அடையாள அட்டையைக் காட்டவேண்டும். மேலும் வாயில் அருகே காவலர் ஒருவர் பதிவேட்டில் தகவல் உள்ளிடவேண்டும்.

யதி நரசிம்மானந்தின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதைக் கருத்தில் கொண்டு கோவிலில் எப்போதும் 22-28 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான செலவு மாதத்திற்கு 25-30 லட்சம் ரூபாய் அரசாங்கத்தின் மீது விழுகிறது என்றும் காவல் துறை குறிப்பிடுகிறது.

“இப்போது உருவாக்கப்படும் வெறுப்புச் சூழல், பரஸ்பர அன்பு, நல்லிணக்கம் ஆகியவற்றைப் பாதிக்கிறது. தற்போது இஸ்லாமியர்கள் இங்கு வருவதற்கு அஞ்சுகிறார்கள், விலகிக் கொள்கிறார்கள்.” என்று சதீஷ் சர்மா கூறுகிறார்.

இன்னும் சிறிது தூரம் சென்றால், இக்லா மற்றும் ரகுநாத்பூர் கிராமம் உள்ளது. யதி நரசிம்மானந்தா கோவிலுக்கு வருவதற்கு முன்பு, கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் இஸ்லாமிய இளைஞர்கள் இந்து பெண்களுக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் கோயிலில் திருடு போவது வழக்கமாக இருந்ததாகவும் அவர் வந்த பிறகு இந்தத் தொந்தரவுகள் இல்லை என்றும் அங்குள்ள இந்துக்கள் உரையாடலின் போது தெரிவித்தனர்.

கோயிலுக்குள் செல்ல அடையாள அட்டை அவசியம்

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் இது போன்ற தகவல்களைப் பெற்றனர் என்பது தெளிவாக தெரியவில்லை, ஆனால் ரகுநாத்பூர் கிராமத்தில் உள்ள மதனவதி என்ற பெண், “இந்து சிறுவர்கள் செய்யமாட்டார்கள். இஸ்லாமியர்கள் மட்டுமே செய்வார்கள். அந்த பகுதி இஸ்லாமியர்கள் வாழும் பகுதி” என்று கூறினார்.

அவர்கள் செவிவழிச் செய்தியை நம்பிக் கூறுகிறார்களா என்ற ஐயத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை அடையாளம் காட்டக் கோரினால், எந்தக் குடும்பத்தில் அதற்குத் தயாராக இருப்பார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

கடந்த காலங்களில் கோவிலுக்குள் இஸ்லாமிய இளைஞர்களை சீண்டியது அல்லது சண்டையில் தானும் பங்கு பெற்றுள்ளதாக ஓர் இந்து கூறுகிறார்.

இக்லா கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் குஜர், “நாங்கள் அவர்களின் மசூதிகளுக்குச் செல்வதில்லை. அவர்கள் உள்ளே நுழையக்கூட அனுமதிக்க மாட்டார்கள். சொல்லுங்கள், நீங்கள் அங்கே உட்கார்ந்து ஹனுமான் சாலிசாவைப் படிக்க முடியுமா?

(குருகிராமில்) ஒரு குருத்வாராவுக்கோ கோயிலுக்கோ அழைத்து அல்லது துர்கா பந்தலில் அழைத்து நமாஸ் செய்யச் சொல்கிறோம். ஹனுமான் சாலிசாவை அங்குப் படிக்க அனுமதிப்பார்களா?” என்ற கேள்வியை எழுப்புகிறார்.

யதி நரசிம்மானந்தரின் வருகையால், “இந்துக்கள் விழிப்புணர்வோடு, ஒன்றுபட்டுள்ளனர்” என்று சாலையோரக் கடை நடத்தும் நரேந்திர சர்மா உணர்கிறார்.

இன்னும் சிறிது தூரம் சென்றால், கோவிலுக்குள் பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் இப்போதுதான் நடக்கின்றன, முன்பெல்லாம் நடக்கவில்லை என்று சில இந்துப் பெண்கள் கூறுகின்றனர்.

யதி நரசிம்மானந்தின் வீடியோ பற்றி அருகிலுள்ள பாஜிகிரான் மொஹல்லாவில் உள்ள ஒரு இஸ்லாமிய நபரிடம் கேட்டபோது, அவர் யதியைப் “பைத்தியம்” என்று புறந்தள்ளுகிறார்.

“தவறாகப் பேசினால் பைத்தியக்காரன் என்று தான் சொல்லமுடியும். இங்குள்ள இணக்கமான சூழலைக் கெடுக்க எவ்வளவு முயற்சி செய்கிறார்கள், ஆனால் இங்கே எல்லோரும் அமைதியாகவே வாழ்கிறார்கள்” என்கிறார் அவர்.யதி நரசிம்மானந்தரின் வருகையால், “இந்துக்கள் விழிப்புணர்வோடு, ஒன்றுபட்டுள்ளனர்” என்று நரேந்திர சர்மா உணர்கிறார்

இதே பகுதியில்தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வாடகை வீட்டில் குடியிருந்த இஸ்லாமிய சிறுவன், தண்ணீர் குடிக்க தேவி கோயிலுக்குள் நுழைந்தபோது கொடூரமாகக் கொல்லப்பட்டான்.

சிறுவனின் குடும்பத்தினர் வாடகை வீட்டை விட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட்டனர்.

பழங்கால தேவி கோவிலைச் சுற்றி ஏராளமான இஸ்லாமியர்கள் குடியேறியுள்ளார்கள். தவிர, அப்பகுதியில் இருக்கும் இந்துக்கள், தங்கள் மக்கள் தொகை குறைந்து வருவதையும் உரையாடலில் குறிப்பிட்டனர்.

மக்கள்தொகை குறைவாக இருப்பதால் அவர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் என்று அவர்களது பேச்சு மற்றும் செயல்களில் தெரிந்தது.

2011 இன் தரவுகள்படி, காசியாபாத் மாவட்டத்தில் 82.5 சதவீதம் இந்துக்களும் 14.18 சதவீதம் இஸ்லாமியர்களும் இருந்துள்ளனர்.

கோயிலின் வரலாறும் யதி நரசிம்மானந்தரின் வருகையும்

அதிகாரப்பூர்வ ஆவணங்களில், நிலம் கோயில் பெயரில் உள்ளது. கோயிலுடன் தொடர்புடைய பல புராணங்களும் உள்ளன.

காங்கிரஸின் சதீஷ் சர்மா கூறுகையில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இந்தக் கோவிலில், கங்கையில் நீராடுவதற்கு முன் இரவைக் கழிக்க மக்கள் வருவது வழக்கம்.

கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள குளத்தில் குளித்தால் தோல் நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.

பரசுராமர் தானே குளத்திற்கு அருகிலுள்ள கோயிலில் சிவலிங்கத்தை நிறுவினார் என்று அனில் யாதவ் கூறுகிறார்.

இங்கு லங்காபதி ராவணனின் தந்தை பல வருடங்கள் தவம் செய்ததாகவும் ராவணனும் இங்கு வழிபட்டதாகவும் இக்கோயிலைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.

யதி நரசிம்மானந்தின் அறிக்கைகளால் முகமது ஃபரூக் வருத்தமடைந்துள்ளார்

மேலும், மகாபாரதப் போருக்கு முன்பு, குந்தியும் ஐந்து பாண்டவர்களும் அரக்கு மாளிகையிலிருந்து தப்பிச் சென்ற பிறகு, பாதுகாப்பாகச் சில காலம் இங்கு தான் ரகசியமாகத் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பழைமையான கோயில், டாஸ்னாவில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

யதி நரசிம்மானந்த சரஸ்வதி, தேவி கோயிலுக்கு வருவதற்கு முன், மௌனி பாபா என்ற பூசாரி பல ஆண்டுகளாக கோவிலின் பொறுப்பை ஏற்றிருந்தார்.

2005 ஆம் ஆண்டு திருடர்கள் மௌனி பாபாவை அடித்துத் தாக்கியதாகவும் சிறிது காலம் கழித்து அவர் கோயிலை விட்டு வெளியேறியதாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

அவருக்குப் பிறகு, தன்னை மௌனி பாபாவின் சீடர் என்று சொல்லிக் கொண்ட கணேஷ் ஷர்மா என்கிற கணேஷ் கிரி, கோயிலின் பணியை மேற்கொண்டார், ஆனால் அவரும் கோயிலை விட்டு வெளியேறி எங்கோ சென்றுவிட்டார்.

2007 ஆம் ஆண்டு தேவி கோவிலின் தலைவர் பதவி காலியாக இருந்த நேரத்தில், யதி நரசிம்மானந்த் சரஸ்வதி தேவி கோவிலுக்கு மஹந்தராக வந்தார் என்று அனில் யாதவ் கூறுகிறார்.

துறவு மேற்கொள்வதற்கு முன்பு, யதி நரசிம்மானந்தின் பெயர் தீபக் தியாகி.

தீபக் தியாகி மாஸ்கோவில் படித்து லண்டனில் பணி புரிந்து வந்ததாக அனில் யாதவ் கூறுகிறார்.

அவர் பின்னர் அரசியலில் நுழைந்து 1998 இல் சமாஜ்வாதி கட்சியின் பெருநகரத் தலைவராக ஆனார், ஆனால் ‘லவ் ஜிஹாத்’ -ஆல் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு உதவ முடியாமல் போனதில் குற்ற உணர்ச்சியில் துவண்டார்.

தீபக் தியாகி, மத மாற்றத்தைக் காரணம் காட்டி, மசூதிகள் மற்றும் மதரஸாக்களுக்குச் சென்றார். அதன்பிறகு அவர் முழுவதுமாக மனம் மாறி, 1999-2000 ஆம் ஆண்டில் துறவறம் பூண்டார்.

அவர் பாஜக எம்.பி பிஎல் ஷர்மா பிரேமுடன் தொடர்புகொண்டு ‘முழுமையான இந்துத்துவவாதி’ ஆனார். கோவிலில் பி.எல்.சர்மாவின் சிலை உள்ளது, அவரை யதி நரசிம்மானந்த் தனது குரு என்று குறிப்பிடுகிறார்.

கோயில் நிலம் மற்றும் அறக்கட்டளை

கதை இத்துடன் முடிந்துவிடவில்லை.

காஸியாபாத்தில் வசிக்கும் ஜிண்டால் குடும்பத்தைச் சேர்ந்த கௌரவ் ஜிண்டால் கூறுகையில், தேவி கோயில் கட்டப்பட்டுள்ள நிலம் உண்மையில் தனது குடும்பத்திற்கு சொந்தமானது என்றும் சுமார் 500-1,000 ஆண்டுகளுக்கு முன்பு தனது முன்னோர்கள் இந்த கோயிலைக் கட்டியுள்ளனர் என்றும் இதன் பராமரிப்பு மகாராணி தேவி மந்திர் அறக்கட்டளையின் கீழ் இருந்தது என்றும் கூறுகிறார்.

கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள குளத்தில் குளித்தால் தோல் நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது

வழக்கறிஞரான கௌரவ் ஜிண்டால் கூறுகையில், இதற்கு முன்பு இந்த நிலம் விவசாய நிலமாக இருந்ததாகவும் அருகில் உள்ள குளத்திலிருந்து பாசனம் நடந்ததாகவும் தெரிவித்தார்.ஒரு நாள் குளத்திலிருந்து தேவியின் சிலை வெளியே வந்ததாகவும் அதற்காக ஒரு கோயில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கோயிலின் வரலாற்றை பாண்டவர்கள், பரசுராமர் மற்றும் ராவணன் ஆகியோருடன் இணைப்பது வெறும் வதந்தி என்பது இவர் கருத்து.

யதி நரசிம்மானந்த் சரஸ்வதி முன்பு இந்து மகாசபையுடன் தொடர்புடையவர் என்றும் டாஸ்னாவைச் சேர்ந்த ஒருவர் அவரை தேவி கோயிலுக்கு அழைத்து வந்தார் என்றும் கௌரவ் கூறுகிறார்.

துறவறம் பூண்ட பிறகு, யதி கோயிலுக்கு வந்ததாகக் கூறுகிறார் கௌரவ். ஒரு தீவிர இந்து என்பதால், யதியின் மீது தானும் மறைந்த தனது தந்தையும் நாட்டம் கொண்டதாக கௌரவ் குறிப்பிடுகிறார். அத்தகைய சூழ்நிலையில், கோயிலில் வசிக்கத் தொடங்கிய யதி, பின்னர் அதை விட்டு வெளியேறவில்லை.

கடந்த காலங்களில் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் நிகழ்ச்சியைத் தனது தந்தை எதிர்த்ததாகவும் அதன் பிறகு இந்த விஷயம் சலசலப்பை ஏற்படுத்தி, கோயிலின் கட்டுப்பாடு தனது குடும்பத்தின் கைவிட்டுப் போனதாகவும் கௌரவ் குறிப்பிடுகிறார். இப்போதும் அச்சத்துடனேயே கோயிலுக்கு வந்து செல்வதாகவும் மீண்டும் கோயிலின் உரிமை தம் குடும்பத்துக்குக் கிடைக்கவேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் கௌரவ் கூறுகிறார்.

இவ்விஷயத்தின் மூன்றாவது தரப்பு ஆனந்த் குப்தா என்பவர். அவர் நிலத்தின் ஒரு பகுதியை தனது மூதாதையர்கள் நன்கொடையாக அளித்ததாகவும், அந்த நிலத்தில் யதி சட்டவிரோதமாக வசிப்பதாகவும் கூறுகிறார்.

ஆனந்த் குப்தாவின் வீடு கோயிலுக்கு எதிரே உள்ளது. வீட்டின் முதல் தளத்தில் உள்ள கட்டிலில், கோவில் தொடர்பான பழைய ஆவணங்களைக் காட்டினார்.

2010-ம் ஆண்டு நீதிமன்றத்தில் தான் ஒரு வழக்கு தொடர்ந்ததாகவும், இந்த வழக்கின் விசாரணை கீழ் நீதிமன்றத்தில் நடந்து வருவதாகவும் ஆனந்த் குப்தா கூறினார்.

இது குறித்து கோவிலை சேர்ந்த அனில் யாதவ் கூறுகையில், நீதிமன்றத்தில் அப்படி எந்த வழக்கும் இல்லை என்றும், “இப்போது அது கோவிலின் நிலம்” என்பதால், நிலத்தின் உரிமையில் எந்த சர்ச்சையும் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்.

“என் தந்தையும் என் தாத்தாவும் ஒரு அறக்கட்டளை, கோயில், தர்மசாலா ஆகியவற்றுக்கு நிலம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள், இன்று எனக்கு அதைத் திரும்ப வேண்டும் என்று நான் கூற ஆரம்பித்தால், அது முற்றிலும் அர்த்தமற்றது.” என்ற வாதத்தை முன்வைக்கிறார் அவர்.

அறக்கட்டளை பற்றிக் கூறவேண்டுமானால், தேவி கோவில் பல்வேறு அறக்கட்டளைகளாகப் பிரிக்கப்பட்டு அனைத்து அறக்கட்டளைகளுக்கும் தலைவர் யதி நரசிம்மானந்த சரஸ்வதி ஆவார்.

2021 ஆம் ஆண்டில் யதி நரசிம்மானந்த் சரஸ்வதி அறக்கட்டளை, ஸ்ரீ கிருஷ்ண யோகம் மற்றும் ஹர் ஹர் மகாதேவ் பக்த மண்டல் ஆகிய மூன்று அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டன என்றும் நான்காவது அறக்கட்டளையை உருவாக்கும் பணி நடந்து வருகிறது என்றும் அனில் யாதவ் கூறுகிறார்.

யதி நரசிம்மானந்த் சரஸ்வதி அறக்கட்டளையின் பணிகளில் ஒன்று புதிய வேலையைத் தொடங்குவது. இரண்டாவது அறக்கட்டளையின் பணி குழந்தைகளை விளையாட்டுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களை ராணுவத்திற்குத் தயார்படுத்துவது. மூன்றாவது அறக்கட்டளையின் பொறுப்பு கோவிலில் அன்னைக்குச் சேவை செய்வது, நான்காவது அறக்கட்டளையின் பொறுப்புகளில் பள்ளி மற்றும் கோசாலை பராமரிப்பு இருக்கும் என்று விளக்குகிறார் அனில் யாதவ்.

கோயிலில் 25-30 பேர் பணியாளர்கள் இருப்பதாகவும், கோயிலுக்கு மாதம் 2.5 முதல் 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

கோயிலின் சொந்த வருமானம் குறைவாக இருப்பதால், ஊழியர்களின் சம்பளப் பொறுப்பை வெளியாட்கள் ஏற்றுக்கொண்டதாக அனில் யாதவ் கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் யதியின் பயணம்

யோகி ஆட்சியில் யதி நரசிம்மானந்தாவுக்குப் பாதுகாப்பு கிடைக்கிறதா?

இந்தக் கேள்வியைக் கேட்டால், அனில் யாதவ், “ஹரித்வாரில் யோகி ஜி இல்லை. டெல்லியில் யோகி ஜி இல்லை. மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 2017 க்கு முன்பு, யோகி ஜி இல்லை. மேலும் விஷயங்கள் இப்போது இருப்பதை விட பெரிதாக இருந்தது. 2017 க்கு முன்பு பெரிய அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கலாம், ஆனால் அந்த நேரத்தில் எங்களுக்கு அணுகல் குறைவாக இருந்தது.”

யதி நரசிம்மானந்தா

யதிக்கு நெருக்கமான அனில் யாதவ், ஒரு அனுபவமிக்க சமூக ஊடக நிபுணரின் புரிதலுடன் பேசுகிறார்.

அனில் யாதவின் கூற்றுப்படி, கோயில் அல்லது யதி நரசிம்மானந்த் என்ற பெயரில் எந்தவொரு சமூக ஊடகக் கணக்கையும் தொடங்கும் போது, அந்த தளத்தின் சமூக விதிகளை மீறுவதாகப் புகாரளிக்கப்படுவதால் அதை மூட வேண்டியதாகிறது.

இதைத் தவிர்க்க, அதிக சந்தாதாரர்களைக் கொண்ட யூட்யுபர்களின் உதவியை நாடவேண்டியுள்ளது. செய்தி வெவ்வேறு கணக்குகள் மூலம் பரப்பப்படும் போது, அது பற்றிய எந்தப் புகாருக்கும் வாய்ப்பு குறைகிறது.

“ஒரு கருத்துருவாக்கத்தை ஒரு தளத்தில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் போது அது புகாருக்குரியதாகிறது. ஆனால் வெவ்வேறு கணக்குகளின் மூலம் பரவும் போது புகாருக்கு வாய்ப்பு குறைகிறது.” என்கிறார்.

ஒரு விடியோவைப் பரவலாக்க, ஒரு வாட்ஸ்அப் குழுவில் அனுப்பப்படுகிறது. இது யதி ஆதரவாளர்களால் அவர்களின் சமூக ஊடக கையாளுதல்கள் மூலம் மேலும் பரப்பப்படுகிறது.

வாட்ஸ்அப்பை யாராலும் தடுக்க முடியாது என்று அனில் யாதவ் கூறுகிறார்.

இந்தச் சமூக ஊடக தளங்களைத் தவிர, அனில் யாதவ், சூர்யா புல்லட்டின் என்ற ஹிந்தி இதழ் மற்றும் செய்தி இணையதளத்தின் ஆசிரியராகவும் உள்ளார்.

இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைப்பதாக அவர் கூறுகிறார். இந்தத் தளத்தில் ‘க்ரீன் கன்டென்ட்’ என்ற சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட கருத்துகளே வெளியாகின்றன. ஆனால் இதிலும் கூட அவர்கள், இந்துக்களுக்கு இஸ்லாமியர்களால் ஏற்படும் அச்சுறுத்தல் பற்றிக் கூறுகிறார்கள்.

அக்டோபர் 2021 இன் 50 ரூபாய் இதழின் பக்கங்களைப் புரட்டியபோது, ‘காஷ்மீர்’, ‘ஆர்யன் கான்’, ‘ஜிஹாதிகள்’ போன்ற வார்த்தைகள் நிறைந்த தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் வெளிவந்திருந்தன.

சமூக ஊடகங்கள் அவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். இந்துக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அவரது கருத்தை ஏராளமானோருக்குத் தெரிவிக்க வேண்டும்.

‘மதங்களின் பாராளுமன்றமும்’ இந்த உத்தியின் ஒரு பகுதியாகும். சென்ற ஆண்டும் இப்படி ஒரு கூட்டம் நடைபெற்றது. ஆனால் உத்தரபிரதேச தேர்தலைக் கருத்தில் கொண்டு, இன்னும் பல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

ஹரித்வாரில் நடந்த ‘மதப் கூட்டத்தை தொடர்ந்து, புத்தாண்டின் முதல் நிகழ்ச்சியாக, ஜனவரி 1 மற்றும் 2 தேதிகளில் டாஸ்னாவிலும் இத்தகைய கூட்டம் நடைபெற இருந்தது, ஆனால் ஹரித்வார் மற்றும் ராய்ப்பூரில் எழுந்த சர்ச்சைக்குப் பிறகு, டாஸ்னா நிகழ்ச்சியை ஒத்தி வைக்க வேண்டியதாயிற்று.

கோவிலின் உள்ளே ஒரு மண்டபத்தில் பி.எல்.சர்மாவின் சிலை

உத்தரகாண்ட் அரசு முஸ்லிம்களின் அழுத்தத்தில் உள்ளதாகவும், எப்படியும் இந்தக் கூட்டம் நடத்தப்படும் என்றும் ஹரித்வாரில் யதி நரசிம்மானந்த் சரஸ்வதி கூறியுள்ளார்.

காசியாபாத் எஸ்எஸ்பி பவன் குமார் உரையாடலில், ‘மதங்களின் பாராளுமன்றத்தில்’ என்ன தலைப்புகள் விவாதிக்கப்படப் போகிறது என்பதை காவல்துறை கண்காணிக்கும் என்று கூறினார்.

“ஒரு சர்ச்சைக்குரிய தலைப்பு இருந்தால், அது எந்த தவறான எண்ணத்தையும் பரப்பலாம், அல்லது ஒரு கடுமையான குற்றத்தை ஊக்குவிக்கலாம். அதன் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார் அவர்.

ஆனால் ‘மதங்களின் பாராளுமன்றத்திற்கு’ள் என்ன பேசப்படும் என்று எப்படி முடிவு செய்யப்படும்?

ஹரித்வார் மற்றும் ராய்ப்பூரின் உதாரணங்கள் அனைவரின் பார்வைக்கும் உள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் வெளிப்படையாக முஸ்லிம்கள் படுகொலை பற்றி பேசப்படுகிறது.

பவன் குமார் கூறுகையில், “முந்தைய உதாரணத்தின் அடிப்படையில், எதிர்காலத்திலும் தவறாகப் பேசப்படும் என்று கருத முடியாது.” என்றார்.

உத்தரபிரதேசத்தில் பரவும் இந்த வெறுப்பு விஷத்தை யார் தடுப்பது? உ.பி.யில் உள்ள யோகி ஆதித்யநாத்தின் அரசு, முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வைப் பரப்பும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

யதி நரசிங்கானந்த்

14.02.2022

கைது

இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ள சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.உத்தராகண்ட் மாநிலத்தில் சென்ற மாதம் நடந்த இந்து சாமியார்களின் ‘தர்ம சன்சத்’ (மத நாடாளுமன்றம்) கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக, அதன் முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சாமியார் யதி நரசிங்கானந்த் சனிக்கிழமை இரவு உத்தராகண்ட் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் பலவற்றிலும் இந்தச் செய்தி பிரதானமாக வெளியாகியுள்ளது.

ஹரித்வாரில் நடந்த மதங்களின் நாடாளுமன்றத்தில், யதி நரசிங்கானந்த், “இஸ்லாமியர்களைக் கொல்ல, வாள் தேவையில்லை. ஏனென்றால் அவர்கள் உங்கள் ஆயுதங்களால் மடியக்கூடியவர்கள் அல்லர். தொழில்நுட்பத்தில் நீங்கள் அவர்களைவிட முன்னேற வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

டிசம்பர் 17 முதல் 19 வரை ஹரித்துவாரில் ‘தர்ம சன்சத்’ கூட்டம் நடந்தது. இதில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக ஏற்கனவே ஜிதேந்திர நாராயண் தியாகி என்கிற வாசிம் ரிஸ்வி வியாழனன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள டாஸ்னா கோயிலின் பீடாதிபதியான நரசிங்கானந்த், ஜிதேந்திர நாராயண் தியாகியின் கைதைக் கண்டித்து ஹரித்துவாரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

”ஜிதேந்திர நாராயண் தியாகி இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறியதே அவரது கைதுக்கு காரணம்; அப்போதுதான் இனி எந்த இஸ்லாமியரும் இந்து மதத்துக்கு மாறக் கூடாது என்று கைது செய்யப்பட்டார்,” என்று நரசிங்கானந்த் கூறியிருந்தார்.

உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜகவும், பஞ்சாபில் ஆளும் காங்கிரஸும் அடுத்த மாதம் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல் வேட்பாளா் பட்டியலை சனிக்கிழமை வெளியிட்டன என்று தினமணி செய்தி தெரிவிக்கிறது.

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், கோரக்பூா் தொகுதியிலும், பஞ்சாப் முதல்வா் சரண்ஜித் சிங் சன்னி, ரூப்நகா் மாவட்டத்திலுள்ள சம்கெளா் சாஹிப் தொகுதியிலும் போட்டியிடுகின்றனா்.

அயோத்தி அல்லது மதுராவில் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவார் என்று எதிபாக்கப்பட்ட நிலையில், கோரக்பூர் தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 

Previous Story

பன்றி இதய மனிதன் கதை ?

Next Story

பாகிஸ்தானில் குடியேரலாம்!