நஜீப் பின் கபூர்
நன்றி 16.11.2025 ஞாயிறு தினக்குரல்
எதிரணியில் இருக்கின்ற பொருளாதார விற்பண்ணர்களே ஜனாதிபதி அனுரகுமார வரவு செலவுத்திட்டத்துக்கு நற்சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருப்பது நமது அரசியலில் சற்று அசாதாரணமான ஒரு நிகழ்வாகத்தான் பார்க்க வேண்டி இருக்கின்றது.
சஜித் ஜனாதிபதியானால் பிரதமராகவோ அல்லது நிதி அமைச்சராகவோ வருவார் என்று நம்பப்படுகின்ற அர்ஷத டி சில்வாக இன்று கஜான நிரம்பி வழிகின்றது என்பதனை வஞ்சகமின்றி சொல்லித்தான் ஆகவேண்டும் என்று பகிரங்கமாக கூறி இருந்தார். அதே போன்று கபீர் ஹசிமும் வரவு செலவுத்திட்டத்தில் இருக்கும் நல்ல விடயங்களை தாமும் ஏற்றுக் கொள்வதாக கூறி இருக்கின்றார்.

வரவு செலவுத்திட்டத்தில் இந்த முறை எதிரணிக்கு விமர்சிப்பதற்கு அரிதாகத்தான் வாய்ப்புக்கள் இருந்தன. என்றாலும் அவர்கள் ஏதாவது நொண்டிக் காரணங்களைச் சொல்லிக் கொண்டு வரவு செலவுத்திட்ட வாக்கொடுப்பில் எதிர்த்துத்தான் வாக்களிப்பார்கள் என்று நாம் நம்புகின்றோம். அல்லது வாக்களிப்பின் போது தலைமறைகிவிடவும் இடமிருக்கின்றது. எதிரணி ஆதரித்தாலும் எதிர்த்தாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் இந்த வரவு செலவுத்திட்டம் நிறைவேறும்.
நாம் கடந்த வாரம் எழுதி இருந்த கட்டுரையில் பட்ஜெட் தொடர்ப்பில் ஒரு சின்னத் தவறு இடம் பெற்றிருந்தது. பட்ஜெட் பற்றிய நமது கட்டுரையை அதற்கு முன்னைய நாள் நாம் அச்சுக்கு அனுப்பி வைத்திருந்ததால் நமக்கு முன்கூட்டிக் கிடைத்த தகவலில் சிறு தவறு அதில் நடந்திருக்கின்றது.
அரசு அடுத்த வருடம் வழங்க இருக்கின்ற வேலை வாய்ப்புக்களை நாம் ஐம்பதாயிரம் என்று சொல்லி இருந்தோம். அது எழுபத்தி ஐந்து ஆயிரம் (75000) என்று திருத்தப்பட வேண்டி இருக்கின்றது. இதனால் வாசகர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிக்கவும்.

பட்ஜெட் தொடர்பில் சிலர் குறிப்பாக எதிரணியில் இருக்கின்ற அர்ஷத டி சில்வா சொன்ன சில கருத்துக்கள் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிக்குள் சில நெருக்கடிளை ஏற்படுத்தி இருக்கின்றது. அவர் அரசுக்கு சான்றிதழ் வழங்கியதைத் தவிர்த்திருக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
இதனால் நாம் என்னதான் இந்த அரசை எதிர்த்துக்குற்றம் சாட்டினாலும் நமக்குள்ளே இருப்போரே அரசுக்கு சான்றிதழ் வழங்குவதால் எதிரணிக்கு நெருக்கடி என்ற குற்றச்சாட்டு விமர்சனங்கள் வந்ததால் இப்போது 2026 வரவு செலவுத்திட்டத்தை சஜித் அணியில் இருப்போர் கடுமையாக விமர்சித்துக் கொண்டு வருவதும் அவதானிக்க முடிகின்றது.
பட்ஜெட் கதைகள் அப்படி இருக்க தற்போது ஊடகங்களில் பேசப்படுகின்ற புலிகள் -இஸ்லாமிய பங்கரவாதிகள் கூட்டணி ஒன்று பற்றிய கதை அரசியல் வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பிரபா – தவூத் கூட்டணி என்று நாம் இங்கு உச்சரிக்க விரும்புகின்றோம்.
அதற்கான காரணங்களைத் தொடர்ந்து பார்க்க முடியும். இந்தக் கூட்டணியின் ஒரு பங்குதாரர் விடுதலைப் புலிகள் என இனம் காட்டப்படுகின்றது. அதன் தலைவரைப்பற்றி நாம் இங்கு விரிவாக சொல்ல வேண்டியதில்லை. அவரது விசிரிகளும் எதிரிகளுக்கும் இவரை மறக்க மாட்டார்கள். அது வரலாற்றுப் பதிவாகி விட்ட ஒரு நாமம்.
1954ல் பிறந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009ல் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். அவர் உயிரோடு இருந்தால் இன்று எழுபத்தி ஒரு (71) வயது. தமிழ் மக்களுக்கு தனியான ஒரு தேசத்துக்காக இவர் ஆயுதங்களை எடுத்துப் போராடியவர். அதனால் இலங்கை அரசு அவரை பயங்கரவாதியாக பார்க்கின்றது – முத்திரை குத்தி இருக்கின்றது.
தனது பதினெட்டாவது (18) வயதில் இவர் புலிகள் அமைப்பைத் 1972 ல் தோற்றுவித்தார். என்னதான் பிரபாகரனைப் பயங்கரவாதி என்று இலங்கை அரசு அழைத்தாலும் தழிழ் மக்கள் அவரை தமது தேசியத் தலைவர் என்று உயர் மரியாதைகளுடன் அழைப்பதையும் பார்க்க முடிகின்றது.
சொல்லப்படுகின்ற அடுத்த தரப்பு இஸ்லாமிய அடிப்படைவாதிகள். இவர்கள் நாட்டில் ஈஸ்டர் தாக்குதலை நடாத்தியவர்கள். இவர்களுடன் இணைந்துதான் ஒரு முடிச்சுப்போடப்படுகின்றது. இப்போது இலங்கை அடிப்படைவாதிகள் தாவுத் இப்ராஹிம் என்பரின் தலைமையிலான அணியில் இணைந்து செய்படுவதாக ஒரு செய்தி சொல்லப்படுகின்றது.

இந்த தாவூத் இப்ராஹிம் 1955ல் இந்தியாவில் பிறந்தவர். பொதுவாக பிரபாவும் தாவூதும் சம வயதுக்கார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தாவூத் மும்பாய் குற்றக்கும்பல் ஒன்றின் தலைவராக செயலாற்றி வந்திருக்கின்றார்.
இந்திய வார்த்தையில் சொல்வதாக இருந்தால் தாவூத் ஒரு தாதா. இவர் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாக இந்திய தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது. 1993ல் மும்பாய் குண்டுத்தாக்குதலில் சூத்திரதாரி என்று இந்தியா இவரைக் குற்றஞ்சாட்டி வருகின்றது.
உலகப்பிரபல்யங்கள் தரவரிசையில் இந்த தாவூத் இப்ராஹிமுக்கு ஐம்பத்தி இரண்டாவது (52) இடம் என்றும் சொல்லப்படுகின்றது. அப்படியாக இருந்தால் இந்த மனிதனின் செல்வாக்கை ஒருவர் மதிபீடு செய்து கொள்ள முடியும்.
அந்தளவுக்கு ஜனரஞ்சகமான ஒரு மனிதான் தவூத். இந்திய இவரை மோசமான பயங்கரவாதி என்று குற்றம்சாட்டி வருகின்றது. இவர் பாகிஸ்தானில் இருப்பதாக இந்தியா நம்புகின்றது. அவர் உயிரோடு இருக்கின்றார் இல்லை என்ற ஒரு குழப்பமும் இருக்கத்தான் செய்கின்றது.
இந்தப் பிரபாகரன் அணியினரும் தாவூத் அணியும் கூட்டணி அமைத்து இலங்கையில் தாக்குதல்களை மேற்கொள்ள இருப்பதாக சில இந்திய ஊடகங்கள் செய்தி சொல்லி இருந்தது. இது எந்தளவு யதார்த்தமானது என்பதில் நிறையவே குழப்பங்கள் காணப்படுகின்றன. பணத்துக்கு விலைபோகின்ற ஊடக நிறுவனங்களும் தனி நபர்களும் இது போன்ற செய்திகளை சந்ததைப்படுத்துகின்ற வாய்ப்புக்களும் இருந்து வருகின்றன.
இதனை இங்குள்ள இனவாதிகளும் சில ஊடகங்களும் கூடத் தூக்கிப்பிடித்து வருகின்றன. அதற்கு அரசியல் பின்னணிகளும் ஒரு காரணம். அடுத்தது பாதாள மற்றும் போதைக்குழுக்களை அரசு கடுமையாக நசுக்கி வருவதால் அவர்களும் இன்று பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் தாவூத் தலைமையில் இவர்களும் விடுதலைப்புலிகளை அழித்ததால் அதற்குப்பலிவாங்கும் ஒரு முயற்சியாக அவர்களும் இணைந்து இருக்கின்றார்களாம், என்பதுதான் இந்த பிரபா-தவூத் கூட்டணி என்பது அவர்கள் தர்க்கமாக இருக்க வேண்டும் – இருக்கின்றது.

இது வலுவான ஆதாரங்கள் இல்லாத ஒரு தகவலாக இருந்தாலும் இதற்கான விளம்பரங்களை செய்வதற்கும் கதையை காட்டுத் தீ போல உள்நாட்டிலும் சர்வதேச பிராந்திய மட்டங்களிலும் பரப்புவதற்கு நிறையவே ஆட்கள் குழுக்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அவர்களுக்கு இதற்கான தனித்தனி நிகழ்சி நிரல்களும் இருக்கின்றன. முதலில் அரசியல் காரணங்களைப் பார்ப்போம். தற்போது அரசை பதவியில் இருந்து கவிழ்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சர்வதே அரசியல் ரீதியிலும் உள்நாட்டு அரசியலிலும் பல காரணங்களினால் இருந்து வருகின்றது.
தற்போது மாகாணசபை தேர்தல் பற்றிய எதிர்பார்ப்பு நெருங்கி வருவதால் நாடு ஆபத்தை எதிர்நோக்கி வருகின்றது. அதனால் தமிழ் பயங்கரவாதிகளிடமிருந்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தும் நாட்டை மீட்டெடுக்க வேண்டுமாக இருந்தால் ராஜபக்ஸாக்களை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவர வேண்டும் என்ற இசுவை இந்தக் கூட்டணிக்கதை மூலம் கொடுத்து மக்கள் மத்தியில் தாம் இழந்த செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்புவது ஒரு தரப்பின்னரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.
அதனால் கடந்த காலங்களைப்போல ஒரு கல்லில் இரு கானிகளைப்பறிப்பது போல புலிப்பயங்கரவாதிகளும் இஸ்லாமிய பயங்கரவாதிகளும் ஓரணியில் இணைந்து விட்டனர் என்று செய்தியை பேரின சமூகத்துக்கு கொடுப்பது இவர்களின் முக்கிய குறிக்கோளாக இருக்க அதிக வாய்ப்புக்கள் என்பது நமது கணிப்பு.
மாகாணசபைத் தேர்தலில் அரசுக்கு பின்னடைவு வந்தால் அதனை வைத்து நாட்டில் ராஜபக்ஸாக்களுக்கு எதிராக மக்கள் வீதியில் இறக்கிய பாணியில் ஜனாதிபதி அனுராவை விரட்டியடிக்கின்ற ஒரு திட்டமும் இவர்களுக்கு இருக்கும் என்று நாம் கருத வேண்டி இருக்கின்றது.
எனவே இந்த தழிழ் பயங்கரவாதிகளையும் தாவூத் தலைமையில் இப்போது இங்கு இயங்கி வருவதாக இவர்கள் சொல்கின்ற தரப்பினரை பேரின மக்கள் மத்தியில் ஒரு பயத்தை ஏற்படுத்தி ராஜபக்ஸாக்களின் கரத்தைப்பலப்படுத்துவது.
இந்தியாவின் வடக்கை மையப்படுத்தி இதுவரை செயல்பட்டு வந்த தாவூத் இப்ராஹீம் இப்போது தென்னிந்திய முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பது இந்தக் கூட்டணி கதைக்கான ஒரு நியதி. அடுத்து இன்று அரசு போதை மற்றும் பாதாள உலத்தாருக்கு எதிராக முன்னெடுத்து வருகின்ற இருக்கமான நடவடிக்கைகள் காரணமாக உள்நாட்டிலும் சர்வதேச போதை வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. சர்வதேச போதை வியாபாரத்தில் இலங்கை ஒரு மத்திய நிலையம்.
இதனால் நாட்டில் இருக்கின்ற போதை வியாபாரிகளும் சர்வதேச போதை வியாபாரிகளும் கூட்டணி போட்டு அரசுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்கின்ற முயற்சி என்பதும் எதிர்பார்க்கக் கூடியது-யதார்த்தமானதுதான். மேலும் இந்த போதை வியாபாரத்தில் அரசியல் பின்புலம் இருப்பதால் பாதிக்கப்பட்ட தரப்பில் அவர்களும் இருப்பதால் இந்தக்கூட்டணிக்கு நிறையவே வாய்புக்கள் இருக்கத்தான் செய்கின்றது.
அதற்காக பிரபாகரனையும் தாவூத் இப்ராஹிமையும் இணைத்து போட்டிருக்கின்ற முடிச்சியைத்தான் எமக்கு ஜீரணிப்பது கஸ்டமாக இருக்கின்றது. அல்லது அதில் குழப்பமாக இருக்கின்றது.!
இந்தியாவின் தமிழ்நாடு கேரள லச்சதீவை மையப்படுத்தி இந்த பிரபா – தாவூத் கூட்டணியின் செயல்பாடுகள் நடப்பதாக சொல்லப்பட்டாலும் கூட்டணி தொடர்பில் விரிவான தகவல்கள் ஏதும் அந்த செய்தியில் கிடையாது.
சில தினங்களுக்கு முன்னர் வன்னியில் என்பது (80) கிரேணட்டுக்களுடன் ஒரு தமிழர் கைது செய்யப்பட்ட பின்னர் கொழும்பு-புளுமென்டலில் பத்து கிரேணட்டுக்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. மற்றுமொருவர் குருனாகலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இவர்கள் முன்னாள் புலிப்போராளிகளுடன் தொடர்புடையவர்கள் என்பது உண்மைதான்.
மேலும் புலிகளில் பல தலைவர்கள் நாட்டிலிருந்து தப்பியோடி இருக்கின்றார்கள் என்பதும் உண்மை. எனவே கூட்டணி பற்றிய தகவல்கள் உண்மையோ பொய்யோ புலிகள் மீள் எழுந்து வரக்கூடும் என்ற அச்சம் பேரின மக்கள் மத்தியில் சிறிதளவாகவோ பெரிதாகவோ இருக்கத்தான் செய்கின்றது.
ஆனாலும் புலிகளை பழைய நிலைக்கு வருவது என்பதும் இலகுவான ஒரு காரியம் கிடையாது. புலிகள் மீள் எழுதல் பற்றி ஒரு தகவல் 2023லும் வந்தது. இந்த முறை ‘தியா’ டிவியும் ‘கோ’ டிவியும் தான் இந்தியாவில் இந்தக் கதையை முதலில் சந்தைப்படுத்தி இருந்தது.
இப்ராஹிம் முஸ்லிம் என்பதால் ஈஸ்டர் தாக்குதல் போன்ற ஒன்றையோ பலவற்றையோ இலங்கையில் செய்ய முடியும் என்ற இசு இதில் எதிர்பார்க்கப்படுகின்றது. புலிகள் மீள் எழுகின்றார்களோ இல்லையோ ஆனால் இந்த போதை பாதாள உலகத்தினர் அதனைவிட பெரும் ஆபத்தானவர்கள் என்பது எமது கணக்கு.

அதற்காக இவர்கள் எவரை வேண்டுமானாலும் உயிர்ப்பலி எடுக்க முடியும் என்ற அச்சம் நமக்கும் இருக்கத்தான் செய்கின்றது. பிரபாகரனையும் இப்ராஹிமையும் காட்டி இங்குள்ள பேரின மக்களை தூண்டிவிடுக்கின்ற ஒரு தேவை நாட்டில் சில அரசியல்வாதிகளுக்கும் அவர்களால் பிழைக்கின்றவர்களுக்கும் இருப்பது என்பதும் உண்மையே. கடும் போக்கு பௌத்த தேரர்களும் இதில் இருக்கின்றார்கள்.
இந்தியாவிலும் குறிப்பாக தமிழ் நாட்டிலும் தேர்தல். இலங்கையிலும் மாகாணசபைத் தேர்தல் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் இப்படியான கதைகளைச் சந்தைப்படுத்தி தேர்தலில் சாதிக்க அங்கும் இங்கும் சிலர் எதிர்பார்ப்பது நமக்கு தெளிவாகத் தெரிகின்றது. கச்சதீவு பற்றிய கதையும் இதில் ஒன்றுதான்.
இந்தியாவுக்கு தாவூத் இப்ராஹிமும் இலங்கைக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனும் பெரும் தலைவலியைக் கொடுத்தவர்கள். இரு நாடுகளினதும் இயல்பு நிலையில் பெரும் தாக்கங்களைச் செலுத்தியவர்கள். எனவே இவர்கள் நமங்களை உச்சரித்து இந்தியாவிலும் இலங்கையிலும் சிலர் பிழைப்பு நடத்துவதும் இயல்பானதே.
நமக்குத் தெரிந்த இராஜதந்திரப்படி சொல்லப்படுகின்ற பிரபா-தவூத் கூட்டணி என்பது ஒரு மாயா ஜாலக் கதையாக இருந்தாலும் ஒரு சிறு குழுவோ தனி நபர்களோ இயல்பு நிலையில் குழப்பங்களை ஏற்படுத்தவும் வன்முளைகளைப் பண்ணவும் நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.
அண்மையில் இந்திய பாகிஸ்தான் குண்டு வெடிப்புக்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல என்பதுதான் எமது கருத்து. எங்கும் ஏதும் நடக்க முடியும். அப்படி இதற்கு முன்னரும் பல நிகழ்வுகள் நடந்தும் இருக்கின்றது.





