சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கை புலி வால் நிலை!

நஜீப் பின் கபூர்

இந்தத் தலைப்பைப் பேசுவதற்கு முன்னர் நாம் சமகால சர்வதேச நிலவரம் பற்றிய சில கருத்துக்களை தெளிவு படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றோம்.  இந்திய நமக்கு அயல் வீட்டுக்காரர் அல்ல துணைக்கு எட்டிய தூரத்தில் அதாவது கூப்பிட்டால் சில நிமிடங்களில் நம் அருகில் வந்து நிற்கக் கூடிய நாடு. வரலாற்று ரீதியிலும் தாய் வீடு.

இந்த நாட்டில் முதன்மை மதங்களாக இருக்கின்ற பௌத்தத்துக்கும் இந்துவுக்கும் தாயகமும் கூட. இதனால் வரலாற்று ரீதியில் என்னதான் நெருக்கடிகள் அல்லது கசப்புக்கள் இருந்தாலும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் தொப்புல் கொடி உறவு என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனாலும் உடன் பிறந்த சகோதரர்கள் ஒரு வளவுக்குள் வாழ்கின்ற போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் இந்த இரு நாடுகளிலும் இருந்து வருவதும் தவிர்க்க முடியாதது இயல்பானது.

இந்தியாவுடன் ஒப்பு நோக்குகின்ற போது நமக்கு நெடுந் தொலைவில் இருக்கின்ற நாடு சீனா. ஆனாலும் இந்தியாவின் அளவுக்கு வரலாற்று காலச்சசாரப் பிணைப்புகள் இலங்கைக்கு சீனாவுடன் இல்லாவிட்டாலும் நெடுங்காலமாக சீனாவுடன் இலங்கைக்கு ஒரு இறுக்கமான உறவு வரலாற்று ரீதியில் இருந்து வருகின்றது.

இது பாஹியன் வந்து போனது முதல் அல்லது அதற்கும் முட்பட்டதாகவும் அது  இருக்கலாம். நமது கருத்துப்படி சமகாலத்தில் சீனாவுடன் இப்படி ஒரு நெருக்க உறவு வலுவடைய எஸ்.டப்லியு.ஆர்.டி. பண்டாரநாயக்க கணிசமான பங்களிப்பை வழங்கி இருந்தார். அந்த உறவு அவர் துணைவியார் ஸ்ரீ மா காலத்திலும் தொடர்ந்தது.

ஆனால் இன்று சீனா பொருளாதார இராணு ரீதியில் அமொரிக்காவுடன் முதலாம் இடத்திக்கு பலப் பரீட்சையில் இறங்கி இருக்கின்றது. இந்த நேரத்தில் இலங்கையின் கேத்திர முக்கியத்துவம் காரணமாக இலங்கையை இந்தியா நெருக்கமாக வைத்திருப்பதை சீனா விரும்புவதில்லை-விரும்பவும் மாட்டது.

பிராந்திய ரீதியிலும் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பது போல உலகில் நன்காவது பெரிய இராணுவத்தை அது வைத்திருக்கின்றது. எனவே இந்தியாவுக்கும் இலங்கை விவகாரத்தில் வேடிக்கை பார்த்தக் கொண்டிருக்க முடியாது.

அது சீனாவின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக அவதானித்த அதற்கு மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியும் உள்ளது. இது அதன் கௌரவம் மற்றும் இறைமை சம்பந்தப்பட விடயம். மறுபுறத்தில் கிழக்கே சீனா, மேற்கே பாகிஸ்தான் என்ற இரு அணு வல்லமையுள்ள நாடுகளும் இந்தியாவுக்கு பெரும் தலையிடியாக இருந்து வருகின்றன.

வழக்கமாக எல்லையில் நடக்கின்ற சீண்டல்கள், கஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடனான முறுகல் என்ற பெரும் பிரச்சனையும் அங்கு இருந்து வருகின்றன.

இந்தப் பின்னணியில்தான் இலங்கை விவகாரத்தில் இந்தியா காய் நகர்தத் வேண்டி இருக்கின்றது. ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் என்னதான் தொப்புல் கொடி உறவு இருந்தாலும் தற்போது ஈழத் தமிழர் விவகாரத்தை இந்தியா தனது முன்னணிப் பிரச்சனைகளில் ஒன்றாக  எடுத்துக் கொள்கின்ற நிலையில் இல்லை.

தமிழகத்தின் அழுத்தம் இருக்கின்ற வரைதான் அது அங்கு எடுபட்டு வந்தது. இன்று அந்த நிலை இல்லை. எம்.ஜீ.ஆர்.-இந்திரா,ரஜிவ் காலத்தில் இருந்த ஆர்வம் தற்போது இந்தியாவிலும் ஏன் தமிழகத்திலும் இல்லை. குறிப்பாக மோடி நிருவாகத்தை ஈழத் தமிழர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் துவக்கத்தில் வரவேற்றார்கள் ஆனால் அது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றமாகத்தான் அமைந்தது.

இந்திய அரசியலில் தற்போதுள்ள கள நிலவரம் இலங்கையில் பேரினத்தார் ஆதரவில் ராஜபக்ஸாக்கள் அதிகாரத்துக்கு வந்தது போல ஒரு நிலைதான் அங்கும் இருந்து வருகின்றது. தொங்கு நிலை அரசுகள் அமைகின்ற போதுதான் தமிழகத்தை எதிர்பார்த்திருக்க வேண்டி வரும்.

இந்தியாவைப் பொருத்தவரை என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் பிஜேபி வலுவாக இருக்கின்றது. இந்தியா உள்நாட்டு அரசியல் கள நிலவரங்கள்தான் இலங்கை விவகாரத்தில் அதிகளவில் தாக்கம் செலுத்தி வந்திருக்கின்றன.

ராஜிவ் படுகொலையும் இதில் மாபெரும் தாக்கங்களை ஏற்படுத்தி இருந்தது என்பதும் எவரும் மறைக்க முடியாது. இந்திய அரசியலில் தற்போது காங்கிரஸ் பலயீனம் அடைந்த நிலையில் காணப்படுகின்றன.

மோடியின் அரசியில் நகர்வுகள் சீனா மற்றும் பாகிஸ்தான் என்ற நாடுகளின் மீது எச்சரிக்கையுடனும் சர்வதேச பொருளாதார ரீதியில் தனது கவனத்தைச் செலுத்த வேண்டி தேவை இந்தியாவுக்கு இருக்கின்றது.

உலக அரங்கில் ஏதேனும் ஒரு இடத்தில் இந்தியாவுக்கு  பொருளாதார ரீதியில்  சருக்கல் வருமாக இருந்தால் பிராந்தியத்தில் அதன் இருப்பே கேள்விக்குறியாகி விடும். எனவே இங்குள்ள தமிழ் தரப்புக்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இது விடயத்தில் கட்டுரையாளனின் தனிப்பட்ட கருத்து ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியா இதனை விட ஒரு படி செய்திருக்கலாம் ஆனால் இப்போது அதற்க்கான காலம் கடந்து பேய்விட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. சர்வதேச அரங்கில் சீன முதன்மை நிலையை மையப்படுத்தி நகரும் போது அது இலங்கையைத்  தன்வசப்படுத்தி வைத்திருக்கவே விரும்புகின்றது.

அதே போன்று அமெரிக்காவின் பைடன் நிருவாகம் இந்தியாவை தனது கட்டுப்பாட்டில் அல்லது வலையில் போட்டுக் கொள்ள சிந்திக்கின்றது. இந்தியாவை சீனா சுற்றி வலைப்பதைப் போல அமெரிக்கா சீனாவை வலைக்க முனைகின்றது.அதற்கு இந்தியாவின் துணை தேவை.

தற்போது பிராந்திய ரீதியில் மத்திய கிழக்கு நெருக்கடி, ஈரான் விவகாரங்களை பைடன் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் காய் நகர்த்தி வருகின்றார். இதனால்தான் இஸ்ரேல் அந்தப் பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அரபு நாடுகளை தன் வலையில் போட்டுக் கொண்டு வருகின்றது.

இதற்கு முஸ்லிம்கள் மத்தியில் இருக்கின்ற ஷீயா-சுன்னி பேதம் அதற்கு சிறப்பாக கை கொடுத்து வருகின்றது. பைடன் நிருவாகம் சீனா, ரஷ்யாவை மையப்படுத்தியே தீர்மானங்களை எடுக்கின்ற நிலையில் செயலாற்றி வருகின்றது.

இது இஸ்ரேல், சவுதி போன்ற தனது நட்பு நாடுகளுக்கு கசப்பாக இருந்தாலும் அவரது தெரிவு சர்வதேச அரங்கில் அமெரிக்காவுக்கு இது வரை இருந்து வந்த முதன்மை ஸ்தானத்தை தக்கவைப்பது முதல் தேவையாக இருக்கின்றது. இதனால்தான் தைவான் விவகாரத்தில் சீனாவுடனும் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடனும் அமெரிக்க விட்டுக் கொடுக்காமல் நடந்து வருகின்றது.

எமது கணிப்புப்படி இந்த இரு பிராந்திய ஆதிக்கமும் அமெரிக்காவின் உலகத் தலைமைத்துவத்துடன் தொடர்புடைய பிரச்சனைகளாகவே பைடன் நிருவாகம் பார்க்கின்றது. மறுபுறத்தில் உலக அரங்கில் தான் தொடர்ந்தும் முன்னணியில் இருக்க வேண்டுமாக இருந்தல் இந்தியாவின் துணையை அமெரிக்க எதிர் பார்க்கின்றது.

ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் இது விடயத்தில் மிகுந்த எச்சரிக்கையாகவே இதுவரை நடந்து வருகின்றார்கள். சமகால நிலவரப்படி ரஷ்யாவும் சீனாவும் ஒரு நெருக்கமான உறவில் இருந்து வருகின்றது. இதனால் இந்தியாவின் தயவு அமெரிக்காவுக்கு கட்டாயம் தேவை என்ற நிலை.

இப்போது மீண்டும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கை புலி வால் பிடித்தவன் நிலை என்ற கதைக்கு வருவோம். இலங்கையில் அண்மைக் கால ஆட்சியாளர்கள் விரலுக்கு விஞ்சிய வீக்கம் போல நாட்டில் பெரும் பெருளாதார முதலீடுகளைச் செய்தார்கள்.

அதற்காக கண்ணை மூடிக் கொண்டு கடன் வாங்கக் கூடிய எல்லா இடங்களிலும் வாங்கி அந்தத் திட்டங்களில் முதலீடும் செய்தார்கள். அதில் மிகக் கணிசமான தொகையை  அவர்கள் கையாடல்களும் செய்தார்கள் என்பது இந்த நாட்டில் சிறுபிள்ளை கூட அறிந்து வைத்திருக்கின்ற கதை.

இது அப்பட்டமான பகல் கொள்ளையாகவும் இருந்தது. இதில் மத்திய வங்கிக் கொள்ளை கப்பம் கமிஷன் என்று பண்டோரக் கொள்ளை என்றளவுக்கு காரியங்கள் நடந்திருக்கின்றது. பண்டோர கொள்ளை தொடர்பில் ஒரு மாதத்துக்குள் ஆணைக்குழு விசாரணை தர வேண்டும் என்று கட்டளை போட்டார்கள்;.

இந்த அரசு பதவியில் இருக்கின்ற வரை அந்த அறிக்கை வருமா என்பது சந்தேகம். அப்படி வந்தாலும் கூட விஷேட சலுகைகளை வழங்கி குற்றவாளிகளை விடுவித்துக் கொள்ளும் வழி முறைகள் இந்த நாட்டில் ஆட்சியாளர்கள் கையில் இருப்பதால் குற்றம் செய்தவர்கள் இது விடயத்தில் அச்சப்படவே தமது அட்டகாசங்களைக் கைவிடவோ மாட்டார்கள்.

இந்த அரசுக்கு என்னதான் நெருக்கடிகள் வந்தாலும் அவர்கள் தமது பதவிக் காலத்தை அடக்குமுறையிலாவது தொடர்ந்து முன்னெடுக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

குடிமக்களும் பட்டினியில் மடிந்தாலும் அரசுக்கு எதிராக வீதியில் இறங்கும் மன நிலையில் இல்லை என்றுதான் கருத வேண்டி இருக்கின்றது. அப்படி நடந்து எவராது அரசாங்கத்தை கையேற்றாலும் நம்பிக்கையான எதிர்காலம் ஒன்று கண்ணுக்குத் தெரியவில்லை.

இன்று அரசுக்கு மூச்சி விட முடியாத நிலை. இதனால் என்னதான் எதிர்கால நெருக்கடிகள் இருந்தாலும் அவர்கள் சீனா மற்றும் இந்தியாவின் கால்களில் விழுந்து கொண்டிருக்கின்றார்கள். அந்நாடுகளும் கேந்திர முக்கியத்துவம், தமது இருப்பு எதிர்காலம் போன்ற காரணங்களை முன்னிருத்தி தொடர்ந்தும் இலங்கைக்கு உதவி வருகின்றார்கள்.

மறுபக்கத்தில் இலங்கையில் சொத்துக்களை கொள்ளையடித்தும் வருகின்றார்கள். இது ஏறக்குறைய ஆப்பம் நிறுத்த குரங்கின் கதைபோல்தான் இருக்கின்றது. சீன இந்திய போன்ற நாடுகளில் இருந்து வாங்குகின்ற பொருட்களுக்கு கொடுப்பதற்குப் பணம்-டொலர்கள் இல்லாத நிலையில், இப்போது பொருட்களையாவது எங்களுக்குக் கடன்களாகத் தருங்கள் என்று மன்றாட்டம் நடக்கின்றது. அதற்கான பணம் எப்போது தருகின்றோம் என்ற விடயத்தில் இலங்கை அரசு தெளிவான நிலை.

சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் பொருளாதாரம் வளமானதாக இல்லை. எனவே இந்திய உணவுப் பொருட்களைக் கொடுத்து இலங்கையைத் தன்னுடன் வைத்திருக்க முனைகின்றது.

சீனா எல்லா வழிகளிலும் இலங்கையைத் தனது ஒரு பிராந்தியம் என்ற பிடிக்குள் வைத்திருக்க வியூகங்களை வகுத்து வருகின்றது. முன்பு சிங்கள அதிகாரிகள்தான் தமிழ் மொழியைப் புறக்கணிப்புச் செய்து வந்தார்கள்.

இப்போது சீனர் சிங்களத்துக்கே ஆப்பு வைத்து வருகின்றார்கள். அண்மையில் சீன வெளிவிவகார அமைச்சர் அங்குரார்ப்பனம் செய்து வைத்த பல இடங்களில் தமிழுடன் சேர்ந்து சிங்கள மொழியும் இந்த முறை காணாமல் போய் இருக்கின்றது.

இது பற்றி கேள்வி எழுப்பினால் அது தவறு. திருத்துவோம் என்று பதில் தருகின்றார் ஊடக அமைச்சர் டலஸ் அலகப்பெரும. இதற்கு முன்பு தமிழுக்கு இந்த நிலை வந்த போது அப்படித்தான் பதில் தந்தார்கள். வேடிக்கை என்னவென்றால் இவற்றை எல்லாம் பார்த்தக் கொண்டு கடும் போக்கு தேசபக்த பௌத்தர்கள் இப்போது மௌனமாக இருப்பதுதான்.

இலங்கை பிரதமர் எம்.ஆர். சீனாவை முகம் கோணாத உயிர் நண்பன் என்று புகழ்ந்து பேசி இருக்கின்றார். தன்னை ஆபாத்தான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சீனா காப்பாற்றி வருகின்றது அது உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் சர்வதேச விவகாரமாக இருந்தாலும் அது என்றைக்கும் எமது உற்ற உயிர் நண்பன் என்பது அவர் கருத்து. அது உண்மையும் கூட.

இந்தியாவை விட இலங்கை சீனாவுடன் மிக நெருக்கமாக இருந்து வருகின்றது என்பதை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும். என்னதான் நிலமை அப்படி இருந்தாலும் அதற்காக இந்தியாவுக்கு இலங்கையை தூக்கி வீசி விட முடியாது இதனால்தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இலங்கை நஷ்டத்தை விளைவிக்கின்ற நாடாக இருந்தாலும், கேந்திர முக்கியத்துவம் காரணமாக புலிவால் பிடித்தவன் என்ற நிலையில்தான் அவர்கள் இந்த உறவைக் கையாள வேண்டி இருக்கின்றது.

இந்திய சீன உறவுகள் எப்படி இருந்தாலும் உள்நாட்டில் மக்கள் இலங்கை அரசாங்கத்தின் மீது மிகுந்த கோபத்தில் இருக்கின்றார்கள் இதனை ராஜபக்ஸ தரப்பினரே பகிரங்கமாக ஒத்தும் கொள்கின்றார்கள். தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற மிகப் பெரிய நெருக்கடிகள் இந்தியா சீனா உறவுகள் உத்துழைப்புக்களினால்  சமாளிக்கக் கூடிய ஒன்று அல்ல.

அது மகா பூதம் போன்ற ஒன்று. இதனால் சர்வதேச ஆய்வலர்களும் இலங்கை ஆட்சியாளருக்கு எதிரான ஒரு கிளர்ச்சிக்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன என்று கருத்துக் கூறி வருகின்றார்கள். சலுகைகளை வழங்கி மக்களை சமாளிக்க ஆட்சியாளர்கள் முனைகின்றார்கள். அதற்காக அவர்கள் கையால்கின்ற அனுகுமுறையும் நாட்டை மேலும் நெருக்கடிக்குத் தள்ளுபவையாகவே இருந்து வருகின்றன.

இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காளியாக இருந்த விமல் வீரவன்ச அதிகாரிகளை மாற்றுவதாலோ அமைச்சர்களை மாற்றுவதாலோ தற்போதய அரசைக் காப்பாற்ற முடியாது. ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து அரசின் போக்கை மாற்றா விட்டால் வீழ்ச்சி நிச்சயம் என்று அவர் சொல்லி வருகின்றார். ஆனால் அவர் இப்போதும் ஒரு அமைச்சர்.

இதற்கிடையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு 1000 நாள் பூர்த்தியாக்கின்ற இந்த நேரத்திலும் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்பட் வில்லை என்று பேராயர் தனது எதிர்ப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார். இதற்கிடையில் இதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை கைது செய்து உள்ளே போடுகின்ற திட்டங்களும் இருப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டது வருகின்றன.

ஆனால் இந்த முயற்ச்சி எவ்வளவு தூரம் அரசுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை. இனப் பிரச்சனைக்கு தீர்வு போல ஈஸ்டர் தாக்குதல் தாரிகளுக்குத் தண்டனை என்ற கதையும் இன்று குடிமக்களின் பிரச்சனைகள் அல்ல. அவர்கள் பட்டியில் தமது பிள்ளை குட்டிகளை எப்படி உயிர் பிழைக்க வைப்பது என்பதனைப் பற்றித்தான் இப்போது ஓடித் திரிகின்றார்கள்.

-நன்றி ஞாயிறு தினக்குரல் 16.01.2022

Previous Story

இந்தி+தமிழ்-ஏ.ஆர்=சர்ச்சை!

Next Story

இந்தியா அழுத்தம் இலங்கை சரண்?