“பாகிஸ்தானில் போர் வெடித்தது..”

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று நடந்த மிக மோசமான தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இது அங்குப் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் நாட்டில் இப்போது போர் வெடித்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியுள்ளார். மேலும், ஆப்கானிஸ்தான் தாலிபான்களே இதற்குக் காரணம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த பல காலமாகவே தீவிரவாதத் தாக்குதல் தொடர்கதையாக இருக்கிறது. இப்போது நிலைமை ரொம்பவே மோசமாகிவிட்டது எனச் சொல்லலாம். ஒரு பக்கம் பலுச் போராளிகள் அந்நாட்டில் பல்வேறு இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இன்னொரு பக்கம் பாகிஸ்தான் தாலிபான்களும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பாகிஸ்தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் இந்தச் சூழலில் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று குண்டுவெடிப்பு நடந்தது. தற்கொலைப் படை தாக்குதலாக நடந்த இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த பாகிஸ்தானிலும் பதற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதற்கிடையே அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதலை நாட்டிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதன் மூலம் பாகிஸ்தான் போர் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  ஆப்கன் தான் காரணம் இத்தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களே காரணம் என்றும் அவர் நேடியாகக் குற்றஞ்சாட்டினார். ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் சூழலில், இனிமேல் அந்தப் போர் எல்லைப் பகுதியான துராண்ட் லைன் உடன் மட்டும் நின்றுவிடாது என்றும் அவர் எச்சரித்தார்.

தங்கள் மண்ணில் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்திக் கொண்டு இருப்பதால் தாலிபான் அரசுடன் பேச்சுவார்த்தை என்பது யதார்த்தமற்றது என்றும் கவாஜா ஆசிஃப் குறிப்பிட்டார். மேலும், பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கும் என நம்பிக்கை வைப்பதே வீண் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நாம் இப்போது போர் நிலையில் இருக்கிறோம். பாகிஸ்தான் ராணுவம் ஆப்கான் எல்லைப் பகுதியிலும், பலுசிஸ்தானின் பகுதிகளிலும் மட்டுமே போரை எதிர்கொள்வதாக நினைப்பவர்கள் அனைவரும், நீதிமன்றத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்:

பாகிஸ்தான் முழுக்க இந்த போர் நடக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் தினமும் தியாகங்கள் செய்து மக்களைப் பாதுகாக்கிறது. பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களைத் தாலிபான் ஆட்சியாளர்களால் தடுக்க முடியும். ஆனால் இந்தப் போரை தலைநகர் இஸ்லாமாபாத் வரை அவர்கள் கொண்டு வந்துவிட்டனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வலிமை பாகிஸ்தானுக்கு உள்ளது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.   அதிர வைக்கும் தகவல் என்ன நடந்தது நேற்று பிற்பகலில் அங்கு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கார் முழுக்க வெடிகுண்டுகளை நிரப்பி வந்த நபர், முதலில் நீதிமன்றக் கட்டிடத்திற்குள் நுழைய முயன்றுள்ளான்.

இருப்பினும், அது முடியவில்லை. இதனால் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அங்கேயே வெயிட் செய்து பார்த்துள்ளான். நீதிமன்ற வளாகத்தில் நுழைய முடியாது என்று தெரிந்தவுடன் அங்கிருந்த ஒரு போலீஸ் வாகனத்திற்கு அருகே சென்று காரில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளான்.

Previous Story

டெல்லி ‛அட்டாக்'கின் பின்னணியில் பாகிஸ்தான்!

Next Story

 டெல்லி கார் வெடிப்பில் உயிரிழந்த 8 பேர்