மனித உடலில் பன்றி இதயம்: 25 ஆண்டுக்கு முன் இந்திய மருத்துவர்!

-திலிப் குமார் ஷர்மா-

“25 ஆண்டுகளுக்கு முன்பே, பன்றியின் ஒவ்வொரு பாகத்தையும் மனித உடலில் பொருத்த முடியும் என்று உலகுக்குச் சொன்னேன். ஆனால் யாரும் என்னை ஆதரிக்கவில்லை. இந்த அரசாங்கம் என்னைச் சிறையில் அடைத்தது” – கோபத்தில் மேசையைக் குத்தியபடி இவ்வாறு கூறுபவர் 71 வயதான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தனி ராம் பருவா.

2016-ம் ஆண்டு மூளையில் பக்கவாதம் ஏற்பட்டதையடுத்து, டாக்டர் தனிராம் பருவாவால் தெளிவாகப் பேச முடியவில்லை. பல ஆண்டுகளாக அவருடன் பணியாற்றிய டாலிமி பருவா, அவரது தெளிவற்ற பேச்சைப் புரிந்துகொண்டு, அவரது கோபத்திற்குக் காரணம் என்ன என்று கூறுகிறார்.

அவர் தனது ஆராய்ச்சிக்குப் பயனாகப் பெற்ற கசப்பான அனுபவங்களே இந்த கோபத்துக்குக் காரணம். யார் இவர்? அப்படி என்ன செய்தார்?

அண்மையில் அமெரிக்க மருத்துவர்கள் குழு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தினர். அறுவை சிகிச்சை உலகில் இது முதன்முறையாக வெற்றிபெற்றுள்ளதாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகிலேயே முதன்முறையாக இந்த வகையான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், பன்றியின் இதயம் பெற்ற டேவிட் பென்னட் என்ற 57 வயது நபர் தற்போது குணமடைந்து வருவதாகவும் மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மைய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

1997-ல் அறுவை  செய்து சிறை

அசாம் மாநிலம் சோனாபூரில் அமைந்துள்ள `தனிராம் பருவா ஹார்ட் சிட்டி அண்ட் சிட்டி ஆஃப் ஹ்யூமன் ஜீனோம் (Dr. Dhaniram Barua Heart City and City of Human Genome)` என்ற மருத்துவ நிறுவனத்தை நடத்தி வருகிறார் டாக்டர் பருவா.

அமெரிக்க மருத்துவர்களால் நடத்தப்பட்ட மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றும் புதியது அல்ல என்கிறார் இவர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு தனது ஆராய்ச்சியின் மூலம் பன்றியை இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய அதே நுட்பத்தின் அடிப்படையில்தான் அமெரிக்க மருத்துவர்கள் இந்தச் சாதனையைச் செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கிறார்.

 அவரது உரையாடலில் அவர் தெரிவித்ததாவது:

“1997, ஜனவரி 1 அன்று 32 வயதான ஒருவரின் உடலில் ஒரு பன்றியின் இதயத்தை மாற்றி வைத்தேன். இந்த அறுவை சிகிச்சைக்கு முன், 100க்கும் மேற்பட்டோர் ஆராய்ச்சி செய்யப்பட்டு, பன்றியின் பல பாகங்களை மனித உடல் ஏற்றுக்கொள்கிறது என்பது உறுதி செய்யப்பட்டது.

வெற்றிகரமான அறுவை சிகிச்சையின் விளைவாக, இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி 7 நாட்களுக்கு உயிருடன் இருந்தார். ஆனால் நோயாளிக்கு பல தொற்றுகள் இருந்ததால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. உண்மையில், நோயாளிக்கு இதயத்தின் கீழ் அறையில் ஒரு துளை இருந்தது, இது வெண்ட்ரிக்குலர் செப்டல் குறைபாடு என்று அழைக்கப்படுகிறது. இதனால், நோயாளிக்குப் பலவிதமான தொற்றுகள் ஏற்பட்டன” என்று விளக்குகிறார்.

டாக்டர் தனிராம் பருவா இந்த அறுவை சிகிச்சையை சோனாபூரில் உள்ள அவரது இதய நோய் மருத்துவ மையத்தில், ஹாங்காங்கைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோனாதன் ஹோ கே-ஷிங்குடன் இணைந்து செய்தார்.

சுமார் 15 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில், அந்த நோயாளிக்குப் பன்றியின் இதயம் மற்றும் நுரையீரலைப் பொருத்தியுள்ளார் டாக்டர் பருவா. ஆனால் நோயாளி இறந்ததையடுத்து, இந்த மாற்று அறுவை சிகிச்சையால் ஒரு பெரிய சர்ச்சை எழுந்தது.

உள்ளூர் ஊடகங்களில் இந்தச் சம்பவம் பற்றிய செய்தி பரவியதை அடுத்து, இரு மருத்துவர்களும் கொடூரக் கொலை மற்றும் மனித உறுப்பு மாற்றுச் சட்டம், 1994 இன் கீழ் கைது செய்யப்பட்டனர்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ ராயல் கல்லூரியில் கார்டியோ அறுவை சிகிச்சை படித்த டாக்டர் தனிராம், இப்போது அந்தச் சம்பவத்தை நினைவு கூர்கிறார், “இன்று உலகம் முழுவதும் பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சை பற்றி பேசப்படுகிறது, ஆனால் அந்தக் காலத்தில் நான் சிறையில் அடைக்கப்பட்டேன். என் நிறுவனம் சூறையாடப்பட்டது. நான் 40 நாட்கள் சிறையில் இருக்க நேர்ந்தது. அரசாங்கத்திலோ, மருத்துவத்துறையிலோ பணிபுரிபவர்கள் யாரும் எனக்கு உதவவில்லை. இன்றும் என் மீதான அந்த வழக்கு நடந்து வருகிறது.”

இந்திராவால் இந்தியா வந்தேன்

“கிளாஸ்கோவில் கார்டியோ படித்து முடித்து, இங்கிலாந்து, அபுதாபி உள்ளிட்ட பல நாடுகளில், இடங்களில் பணிபுரிந்தேன். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் விருப்பப்படி நாடு திரும்பினேன். ஆனால் அந்தக் காலத்தில் இந்த மாநிலத்தை ஆண்ட அசாம் கன பரிஷத் (ஏஜிபி) அரசு என்னை மிகவும் மோசமாக நடத்தியது.

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, எனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன். இதுவரை இதயம், எச்.ஐ.வி, நீரிழிவு போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 23 மருந்துகளை நான் கண்டுபிடித்துள்ளேன்” என்றும் கூறினார்.

மேலும், அவர் “தான் கண்டுபிடித்த ஒரு மருந்தை ஊசியாகச் செலுத்தினால், எந்த இதய நோயாளிக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்படாது” என்றும் கூறுகிறார்.

நான் தயாரித்துள்ள இதய மருந்தினால் மனித உடலில் பன்றி இதயத்தை வைக்க வேண்டிய அவசியமே இருக்காது, இதய நோயாளிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படாமல் இருக்க, ஊசி வடிவில் இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. வேறு ஏதேனும் அறுவை சிகிச்சையும் தேவைப்படாது.”

இருப்பினும், கண்டுபிடிக்கப்பட்ட இந்த மருந்துகளின் மருத்துவப் பரிசோதனைகள் குறித்தும், சம்பந்தப்பட்ட சுகாதார நிறுவனங்களிடம் ஒப்புதல் பெறுவது குறித்தும் டாக்டர் தனிராமிடம் கேட்டபோது, அவர் அதைப் பற்றி அதிகம் கூறவில்லை.

கொரோனாவுக்கும் மருந்து!

டாக்டர் தனிராமுடன் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றிய டாக்டர் கீதா, “இந்த மருந்துகள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பிறகு தயாரிக்கப்படுகின்றன. இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) உள்ளிட்ட பிற நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும், ஆனால் இது ஒரு நீண்ட செயல்முறை. அதன் பிறகே அனுமதி கிடைக்கும். நாங்கள் கொரோனா தடுப்பூசியையும் தயார் செய்துள்ளோம், மேலும் ICMR-க்கு கடிதம் எழுதியுள்ளோம். ஆனால் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. எங்களைக் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்” என்றார்.

அத்துடன் “எச்.ஐ.வி. மருந்தையும் டாக்டர் தனிராம் தயாரித்துள்ளார். அதில் நோயாளி 10 நாள் சிகிச்சை பெற வேண்டும். நோயாளிக்கு தினமும் ஊசி போடப்படுகிறது. அதன் பிறகு ஒருவர் எச்.ஐ.வி மருந்தை உட்கொள்ளாமல் இயல்பான வாழ்க்கையை நடத்தலாம். 25 சதவீதம் நோயாளிகளுக்குச் சிகிச்சைக்குப் பிறகு, எச்.ஐ.வி பரிசோதனை அறிக்கை எதிர்மறையாக வருகிறது” என்கிறார் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஆய்வியல் படிப்பை முடித்த டாக்டர் கீதா.

டாக்டர் தனிராம் மற்றும் அவரது குழுவினர், உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் பல நோயாளிகளின் பெயரைக் குறிப்பிட்டு, தங்களின் மருந்துகளை உட்கொண்ட பிறகு, அவர்கள் இன்று முற்றிலும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்று கூறுகிறார்கள்.

இவரது மருந்தால் உயிரிழப்புகள்?

இருப்பினும், டாக்டர் பருவாவின் கூற்றுகள் முன்பு போலவே இன்னும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.

அஸ்ஸாமைச் சேர்ந்த எச்.ஐ.வி எய்ட்ஸ் ஆர்வலர் ஜாஹ்னபி கோஸ்வாமி, டாக்டர் தனிராம் பருவாவின் எச்.ஐ.வி சிகிச்சையை எடுத்துக் கொண்டதால், மாநிலத்தில் நான்கு பேர் இறந்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், “டாக்டர் தனிராம் பருவாவின் ஆராய்ச்சியைக் குறித்து நான் கேள்வி எழுப்ப விரும்பவில்லை, ஆனால் உங்கள் எச்ஐவி மருந்தை உலக சுகாதார நிறுவனத்திற்கு அனுப்புங்கள் என்றும் ஐசிஎம்ஆரின் அனுமதியைப் பெறுங்கள் என்றும் நாங்கள் அவரிடம் பலமுறை கூறியுள்ளோம்.

ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், டாக்டர் தனிராம் தயாரித்த ஹெச்ஐவி மருந்து குறித்தும் அசாம் அரசு விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளோம்” என்றும் சொல்கிறார் ஜஹ்னாபி கோஸ்வாமி.

நௌகாவில் இவரது எச்.ஐ.வி ஊசி போட்டுக்கொண்ட நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் ஏழை மக்கள், குறிப்பாக எய்ட்ஸ் காரணமாக உயிரிழந்தால், அதைப் பெரிது படுத்தி வெளியிடுவதில்லை. சமூகத்தில் அவர்கள் ஒதுக்கி வைக்கப்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்” என்றார்.

பாதுகாப்பு!

சோனாபூரில் அமைந்துள்ள டாக்டர் தனிராம் பருவா ஹார்ட் சிட்டி அண்ட் சிட்டி ஆஃப் ஹ்யூமன் ஜெனோம் என்ற நிறுவனத்திற்கு வெளியே எந்த வித அடையாள பலகையும் இல்லை.

நீண்ட மற்றும் உயரமான நான்கு சுவர்களால் சூழப்பட்ட குன்றின் மீது அமைந்துள்ள இந்த இதய நிறுவனத்தில் டாக்டர் தனிராமின் அனுமதியின்றி யாரும் நுழைய முடியாது.

இவரது இந்த நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்ட தெருநாய்களை வளர்த்து வருகின்றனர்.

ஆனால், நாய்களைப் பற்றி கேட்டால், டாக்டர் தனிராம் சிரித்துக்கொண்டே, “மருத்துவ உலகில் தொடர்ந்து புதுப்புது ஆராய்ச்சிகள் செய்து வருகிறேன், ஆனால் எங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்தப் பாதுகாப்பும் தரப்படவில்லை. இப்போது இந்த நாய்கள்தான் என்னைக் காக்கின்றன” என்கிறார்.

Previous Story

இலங்கை விலைவாசி  - களநிலவரம் என்ன?

Next Story

ஆடை அலங்காரக் கண்காட்சி