
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இப்போது பல்வேறு துறைகளிலும் போட்டி நிலவி வருகிறது. இப்போது உலகின் இரு பெரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடாக அமெரிக்காவும் சீனாவும் இருக்கிறது.
பாதுகாப்புத் துறையில் உலகத்திற்கே முன்னோடியாக அமெரிக்கா இருக்கும் நிலையில், சீனா அதை மெல்ல நெருங்கி வருகிறது.

சீனாவின் பாதுகாப்பு அமைப்பு
அதன்படி அமெரிக்காவுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஒரு அதிநவீன பாதுகாப்பு அமைப்பைச் சீனா ரெடி செய்து வருகிறது. இதன் மூலம் பூமியில் எந்தவொரு பகுதியையும் சீனாவால் தாக்க முடியுமாம்..
உலகில் அமெரிக்கா உட்பட எந்தவொரு நாட்டிடமும் இதுபோன்ற ஒரு பாதுகாப்பு அமைப்பு இல்லை.. அதைத் தான் சீனா சத்தமில்லாமல் உருவாக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைச் சீனா “distributed early warning detection big data platform” என்று அழைக்கிறது. இது அமெரிக்காவின் ‘கோல்டன் டோம்’ திட்டத்தைப் போன்றது என சவுத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்த பாதுகாப்பு அமைப்பு, தற்போது ஆரம்பக்கட்டத்திலேயே இருந்தாலும் கூட இது மிக முக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து சீனா மீது பல ஆயிரம் ஏவுகணைகளை ஏவப்பட்டாலும் அதை ஒரே நேரத்தில் கண்காணிக்க இந்த அமைப்பால் முடியும்.
அமெரிக்காவின் கனவு
அமெரிக்காவும் பல ஆண்டுகளாகவே கிட்டத்தட்ட இதுபோன்ற ஒரு பாதுகாப்பு அமைப்பு உருவாக்க முயன்று வருகிறது. கடந்த 1983ஆம் ஆண்டு, அமெரிக்காவும் சோவியத் யூனியனும் பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்கா இதை உருவாக்க நினைத்தது.
இது தொடர்பாக அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ரொனால்ட் ரீகன் பேசுகையில், “நமது எல்லையை அடையும் முன்பே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கக்கூடிய ஒரு அமைப்பைக் கற்பனை செய்து பாருங்கள். அது நமது மக்களை அணுசக்தி தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்” என்றார்.
டிரம்ப் கூட முயன்றார்
இதற்கான நடவடிக்கைகளும் ஒரு பக்கம் எடுக்கப்பட்டு வந்தது. அப்போது தான் எட்டு ஆண்டுகளில், 1991இல் சோவியத் யூனியன் சரிந்தது. இதனால் ரீகனின் கனவு நிறைவேறாமலேயே போனது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப் ரீகன் விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்ந்தார்.
அதே திட்டத்திற்கு கோல்டன் டோம் எனப் பெயரிட்ட டிரம்ப், இது அமெரிக்காவை முழுமையாகப் பாதுகாக்கும் எனக் கடந்த மே மாதம் அறிவித்தார்.
ஏன் முக்கியம்
$175 பில்லியன் செலவில் உருவாகும் கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு நான்கு அடுக்குகளை கொண்டிருக்கும். அதில் ஒன்று செயற்கைக்கோள் அடிப்படையிலானது, மற்ற மூன்றும் அதிநவீன தரையில் இருந்து தாக்கும் ஏவுகணைகளாகும்.
இது அமெரிக்கா, அலாஸ்கா மற்றும் ஹவாய் பகுதிகளைப் பாதுகாக்கும்… இதைத் தூக்கிச் சாப்பிடும் வகையிலான ஆயுதத்தைத் தான் சீனா இப்போது உருவாக்கி வருகிறது. இதற்கான புரோடோடைம் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் விண்வெளி, கடல் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சென்சார்கள் மூலம் சாத்தியமான அச்சுறுத்தல்கள் கண்டறியப்படும்.
ஏதாவது ஏவுகணை ஏவப்பட்டால் அதைத் துல்லியமாகக் கண்காணிக்க முடியும் இதன் மூலம் பூமியில் எந்தவொரு பகுதியில் இருந்து சீனாவை நோக்கி ஏவுகணை செலுத்தப்பட்டாலும் அதை அழிக்க முடியும்.
இதுபோல பூமி முழுக்க கவர் செய்யும் முதல் ஏவுகணை அமைப்பு இதுவாகும்.