இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் ஒரு அமைதி திட்டத்தை அறிவித்திருந்தார். இந்தத் திட்டம் குறித்து முடிவெடுக்க ஹமாஸுக்கு 4 நாட்கள் கெடுவும் விதித்திருந்தார்.
இருப்பினும், இந்தத் திட்டத்தை ஏற்க முடியாது என ஹமாஸ் முக்கிய தலைவர் கூறியிருக்கிறார். இது பாலஸ்தீன நலன்களைப் புறக்கணிப்பதால் இத்திட்டத்தை ஏற்க முடியாது என ஹமாஸ் கூறியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த பல ஆண்டுகளாகவே மோதல் போக்கு தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். இந்தப் போரால் காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்களே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போரை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு தரப்பும் தீவிரமாக முயன்று வரும் சூழலில், இது தொடர்பாக டிரம்ப் ஒரு விரிவான திட்டத்தை முன்மொழிந்திருந்தார்.

காசா அமைதி திட்டம்
அந்த 20 அம்சத் திட்டம் மூலம் போர் முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார். இஸ்ரேல் அமைதி திட்டத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், இது தொடர்பாக முடிவெடுக்க ஹமாஸுக்கு 4 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார். இருப்பினும், இந்த திட்டத்தை ஹமாஸ் ஏற்க வாய்ப்பு குறைவு என்றே சொல்லப்படுகிறது. இது தொடர்பாக மூத்த ஹமாஸ் தலைவர் சர்வதேச ஊடகமான பிபிசி ஊடகத்திற்குச் சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் டொனால்ட் டிரம்ப்பின் காசா அமைதித் திட்டத்தை ஹமாஸ் அமைப்பு நிராகரிக்க வாய்ப்புள்ளது என ஹமாஸின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் திட்டம் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் பாலஸ்தீன மக்களின் நலன்களைப் புறக்கணிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப்பின் திட்டத்தின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்று.. ஆயுதங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்பதாகும். இருப்பினும், இதை உடனடியாக ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்றும் அந்தத் தலைவர் கூறியுள்ளார். அதேபோல சர்வதேச படை (ISF) காசாவில் நிலைநிறுத்தப்படுவதையும் ஹமாஸ் எதிர்க்கிறது. இதை அது ஒரு புதிய ஆக்கிரமிப்பாக ஹமாஸ் கருதுகிறது.
தொடர்ந்து போரிடுவோம்
காசாவில் உள்ள ஹமாஸ் ராணுவத் தளபதியான எஸ் அல்-தின் அல்-ஹடாத் கூட இந்தத் திட்டத்தை ஏற்கத் தயாராக இல்லையாம். டிரம்ப் பிளானை ஏற்பதற்குப் பதிலாகத் தொடர்ந்து சண்டையிடுவதே மேல் என அவர் கருதுகிறார். காசாவிற்கு வெளியே உள்ள ஹமாஸ் தலைவர்களுக்குப் பணயக்கைதிகள் மீது நேரடிக் கட்டுப்பாடு இல்லாததால், டிரம்ப் திட்டம் குறித்த விவாதங்களில் அவர்கள் பங்கேற்கவில்லை.
காசா அமைதி திட்டம் தொடர்பாக முடிவெடுக்க ஹமாஸுக்கு 4 நாட்கள் வழங்கப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார். இருப்பினும், டிரம்ப்பின் இந்த அமைதி திட்டம் குறித்த ஹமாஸ் இறுதி முடிவை எடுக்க பல நாட்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
மற்ற குழுக்கள்
மேலும், காசாவில் ஹமாஸை தாண்டியும் பல்வேறு ஆயுத குழுக்கள் இயங்கி வருகின்றன. அவர்களிடமும் கலந்தாலோசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஹமாஸுக்கு இருக்கிறது. அப்படி இஸ்ரேல் தாக்குதலில் பங்கேற்ற குழுக்களில் ஒன்றுதான் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் ஆயுதக் குழு.
இந்தக் குழுவிடமும் இஸ்ரேலியப் பணயக்கைதிகள் சிலர் இருக்கிறார்கள். இருப்பினும், இந்த குழு காசா அமைதி திட்டத்தை முழுமையாக நிராகரித்தது.
சிக்கல் என்ன
ஹமாஸுக்கு இன்னொரு சிக்கலும் இருக்கிறது. அதாவது அமைதி திட்டத்தின்படி அனைத்து இஸ்ரேல் பணயக்கைதிகளையும் ஒரே நேரத்தில் ஒப்படைக்க வேண்டும். ஹமாஸ் ஏற்கனவே மிகவும் பலவீனமாக இருக்கிறது. இப்போது அவர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் பணயக்கைதிகள் தான்.
அவர்களையும் மொத்தமாக விட்டுவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதால் ஹமாஸ் இதையும் எதிர்க்கிறது. எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் டிரம்ப் திட்டத்தை ஹமாஸ் நிராகரிக்கும் என்றே தெரிகிறது.