இந்தோனேஷியா மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயல்பட்ட புகாரில் அந்த நாட்டின் நீண்டகால நிதி அமைச்சரான ஸ்ரீ முல்யானி இந்திரவதி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் உள்பட மொத்தம் 5 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக அதிகாரிகளுடன் மீட்டிங்கில் இருந்தபோது அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் உதவியாளர் நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திரவதிக்கு போன் செய்து உங்களை அமைச்சரவையில் இருந்து நீக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தோனேஷியாவில் அதிபராக இருப்பவர் பிரபோவோ சுபியாண்டோ (Prabowo Subianto). தற்போது இந்தோனேஷியா பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.
தனி நபர் வருமானம் ரூ.59000 ஆயிரமாக உள்ளது. இருப்பினும் எம்பிக்களுக்கான சலுகைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்திய சம்பள உயர்வால் எம்பிக்களின் மாத சம்பளம் ரூ.17 லட்சமாக உள்ளது. இதுதவிர வீட்டு வாடகை உள்பட பல சலுகைகள் எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது.
நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் எம்பிக்களுக்கு சலுகைகள் வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 2 வாரங்களுக்கு முன்பு பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து ஏற்பட்ட வன்முறையில் 7 பேர் பலியாகினர்.
மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இதனால் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்தோனேஷியா அதிபர் பிரபாவோ சுபியாண்டோ அதிரடியான உத்தரவை பிறப்பித்தார். அதன்படி நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திரவதி, ராணுவ அமைச்சர் புடி குணவன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான அமைச்சர் அபதுல் கதீர் கார்டிங், கூட்டுறவுத்துறை அமைச்சர் புடி ஆரி செடியாடி, விளையாட்டு துறை அமைச்சர் திடோ அரிடோடிஜியோ ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதில் புதியவர்கள் அமைச்சர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் முக்கியமானவர் யார் என்றால் நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திரவதி தான். அடிப்படையில் பொருளாதார நிபுணரான இவர் அந்த நாட்டின் நீண்டகாலம் நிதி அமைச்சராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
தற்போது பொருளாதார நெருக்கடி, எம்பிக்களுக்கான சலுகை உள்ளிட்டவற்றால் அவர் மீது மக்கள் அதிருப்தியடைந்த நிலையில் அவரிடம் பதவி பறிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்ரீ முல்யானி இந்திரவதி துறை அதிகாரிகளுடன் மீட்டிங் நடத்தி கொண்டிருந்தார்.
அப்போது அதிபர் பிரபாவோ சுபியாண்டோவின் உதவியாளரிடம் இருந்து அவருக்கு போனில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் நேபாள நிதியமைச்சர் பிஷ்ணு பவுடலை அந்த நாட்டின் போராட்டக்காரர்கள் துரத்தி துரத்தி அடித்தனர்.
நேபாளத்தில் சமூக வலைதளங்களின் தடையை நீக்குவது மற்றும் ஊழல் ஆட்சியால் பிரதமர் கேபி சர்மா ஒலி ராஜினாமா செய்ய வேண்டும் என்று இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையான நிலையில் நிதி அமைச்சர் பிஷ்ணு பவுடலை போராட்டக்காரர்கள் துரத்தி துரத்தி அடித்தனர்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் உறைய வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.