பாலஸ்தீனத்தை தொடர்ந்து தற்போது ஏமன் தலைநகர் மீதும் இஸ்ரேல் கொலைவெறி தாக்குதலை தொடங்கியிருக்கிறது. பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்புக்கு ஏமன் நாட்டிலிருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உதவி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. எண்ணெய் சுத்திகரிப்பு மையம் மற்றும் மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை இஸ்ரேல் தாக்கியுள்ளது. மட்டுமல்லாது அதிபர் மாளிகை மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 35 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்தி ஊடகமான அல் ஜசீரா தெரிவித்திருக்கிறது. காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெளியிலிருந்து இஸ்ரேல் ராணுவம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர்.
இது இஸ்ரேல் ராணுவத்திற்கு பெரும் தலைவலியை உருவாக்கியிருக்கிறது. எனவேதான் இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், “எங்கள் மக்களுக்கு எதிராக ஹவுதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு நாங்கள் பதிலடி கொடுத்திருக்கிறோம்” என தெரிவித்திருக்கிறது.
ஆனால், இந்த தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேலிய போர் விமானங்களை தாங்கள் தாக்கியதாகவும், எனவே அவை உடனே பின்வாங்கியது எனவும் ஹவுதி ராணுவ அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக ஏமன் தலைநகர் சனாவில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இருப்பினும் இஸ்ரேலின் இந்த தாக்குதல்கள், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்படும் ஹவுதிகளின் ராணுவ நடவடிக்கைகளைத் தடுக்காது என ஹவுதிகள் உறுதியாக கூறியிருக்கின்றனர்.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் சட்டவிரோதமானது என ஐநா உட்பட பல சர்வதேச அமைப்புகள் அறிவித்துவிட்டன. ஆனால் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு இந்த போரை நிறுத்த எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
எனவே போர் இப்போது வரை நீடித்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் படையை அழிப்பதாக கூறி, 60,000 பேர் வரை இஸ்ரேல் ராணுவம் கொன்றிருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் என்பது குறிப்பிடத்தக்கது.