“ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வரப்போகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார், விளாடிமிர் புடின் அதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்.” என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப், அலாஸ்கா நகரில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று சந்தித்துப் பேசினார். அப்போது ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலரும் இருந்தனர். இந்தச் சந்திப்பை தொடர்ந்து, டிரம்ப், ஜெலன்ஸ்கி கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், “உக்ரைன் அதிபர் எங்களுடன் இருப்பது ஒரு மரியாதை. நாங்கள் நிறைய நல்ல விவாதங்களை நடத்தியுள்ளோம், நிறைய நல்ல பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக நான் நினைக்கிறேன், பல வழிகளில் மிகவும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்கு முன்பு ரஷ்ய அதிபருடன் ஒரு நல்ல சந்திப்பை நடத்தினோம்.
அதிலிருந்து ஏதாவது நல்ல செய்தி வர வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன், இன்றைய சந்திப்பு மிகவும் முக்கியமானது. போர் முடிவுக்கு வரப்போகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார், விளாடிமிர் புடின் அதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்.
முழு உலகமும் போரைக் கண்டு சோர்வடைந்துவிட்டது என்று நினைக்கிறேன். நாங்கள் அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம். நான் 6 போர்களை முடித்துள்ளேன். இது எளிதான ஒன்றாக இருக்கலாம் என்று நினைத்தேன்.
இது எளிதான ஒன்றல்ல. இது ஒரு கடினமான ஒன்று.. நீங்கள் இந்தப் போர்களில் சிலவற்றைப் பாருங்கள், நீங்கள் ஆப்பிரிக்காவுக்குச் சென்று அதைப் பாருங்கள்.
ராவாண்டா மற்றும் காங்கோ – அது 31 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்தப் போரை நாங்கள் முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று நான் நம்பிக்கையுடன் உணர்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.





