சுசில் பிரேமஜயந்த! அடுத்து என்ன?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அங்கத்துவம் கேள்விக்குறியாகியுள்ளது. சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கட்சிக்குள் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பிரேமஜயந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழு கூடி தீர்மானிக்கும் என காரியவசம் தெரிவித்துள்ளார். “பல பெரமுன உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமஜயந்த மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

நான் சொந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கட்சியின் மத்திய குழு முடிவு செய்யும்,” என்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழு எப்போது கூடும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இன்னும் குறிப்பிட்ட நாள் எதுவும் இல்லை என்று காரியவசம் கூறினார்.

அமைச்சரவையை பகிரங்கமாக விமர்சித்த பிரேமஜயந்த தனது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். விவசாய அமைச்சர் தனது கடமைகளில் தவறிவிட்டதாக முன்னாள் கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.

டொலர் விவகாரம் மற்றும் வாழ்க்கைச் செலவு தொடர்பாகவும் அவர் அரசாங்கத்தை விமர்சித்தார். பிரேமஜயந்த தனது பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டதன் பின்னர், அவரை பிரதமர் மகிந்த ராஜபக்ச தொடர்பு கொண்டு உரையாடினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் பிரதமர் தமக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக பிரேமஜயந்த செவ்வாய்கிழமை மாலை தெரிவித்தார்.

மேலும், தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக எழுத்துப்பூர்வமாக தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்

 

Previous Story

ஓய்வு வயதெல்லை 65 

Next Story

USA:குடியிருப்பில் தீ 13 பேர் பலி!