சர்வதேச ஊடகங்கள்
இஸ்ரேலுக்கு கடிதம்!
காசாவில் நிலவும் உணவு பஞ்சம் காரணமாக ஊடகவியலாளர்கள் பட்டினியை எதிர்கொள்வதாக முன்னணி ஊடக நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. பிபிசி, ராய்ட்டர்ஸ், அசோசியேட்டட் பிரஸ் மற்றும் ஏஎப்பி ஆகிய நிறுவனங்கள், காசாவிற்குள் ஊடகவியலாளர்கள் சென்று வர இஸ்ரேலிய அதிகாரிகள் அனுமதிக்குமாறு கூட்டறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் காரணமாக உணவு பஞ்சம் அதிகரித்திருக்கிறது. கடந்த சில வாரங்களில் 80 குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இதனை பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
மறுபுறம், காசாவில் பணியாற்றும் தங்கள் ஊடகவியலாளர்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் இருப்பதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.
காசாவில் உள்ள நிலவரங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் ஊடகவியலாளர்கள் தற்போது உணவு கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். போர் நடக்கும் இடங்களில் ஊடகவியலாளர்கள் பல இன்னல்களை சந்திக்கிறார்கள். அதில் பட்டினி ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று சர்வதேச செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவுப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, காசாவிற்குள் ஊடகவியலாளர்கள் செல்லவும், அங்கிருந்து வெளியேறவும் இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்றும், மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஊடக நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
போர் நடக்கும் இடங்களில் உணவு பஞ்சம் ஏற்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், உலக நாடுகள் காசாவுக்கு உணவு பொருட்களை அனுப்பி வைத்திருக்கிறது. இதில் சிக்கல் இருக்கிறது. இஸ்ரேல் அனுமதித்தால்தான் இந்த உணவு பொருட்கள் உள்ளே செல்ல முடியும்.
இஸ்ரேல் உதவிப் பொருட்களை தடுத்ததோடு, மிகக் குறைந்த அளவிலான உதவிகளை மட்டுமே அனுமதித்தது. இதனால், காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இஸ்ரேல் வழங்கும் உதவிப் பொருட்கள் பற்றாக்குறையானவை என்று ஐ.நா. தொடர்ந்து கூறி வருகிறது.
உதவி கிடைக்காமல் காசா மக்கள் கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட யாருக்கும் உணவு கிடைப்பதில்லை என்று பாலஸ்தீனியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். அதிக விலை காரணமாக எளிய உணவுகளைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காசாவிற்குள் செல்லும் உதவி லாரிகளை நோக்கி சென்ற பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உதவி பெற முயன்ற 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காசாவில் “பட்டினி” நிலவுவதைக் கண்டித்து 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. ஆனால், இஸ்ரேல் அரசு இதை மறுத்துள்ளது. ஹமாஸ் அமைப்புதான் உணவுப் பற்றாக்குறைக்கு காரணம் என்று இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் டேவிட் மென்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
“டேவிட் மென்சர் கூறுகையில், “ஜூலை 19ம் தேதி முதல் கடந்த 22ம் தேதி வரை 4,400க்கும் அதிகமான உதவி லாரிகள் காசாவிற்குள் உணவு, மாவு மற்றும் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களுடன் சென்றுள்ளன. ஹமாஸ்தான் உணவு விநியோகத்தைத் தடுக்கிறது.
காசாவில் ஏற்படும் பசிக்கு ஹமாஸே காரணம்” என்று கூறியுள்ளார். மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேலிய துருப்புகள் நடத்திய தாக்குதலில் அகமது அல்-சலா (15 வயது) மற்றும் முகமது காலேத் அலியன் இஸ்ஸா (17 வயது) ஆகிய இரண்டு பாலஸ்தீனிய சிறுவர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். .