வங்கதேச தலைநகர் டாக்காவில் பள்ளி ஒன்றின் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கி உள்ளது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்திருக்கின்றனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான F7 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்திருக்கிறது. விபத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் முழு விவரம் வெளியாகியுள்ளது. டாக்காவில் உள்ள மைல்கல் பள்ளி வளாகத்தில் இந்த சோக சம்பவம் நடந்திருக்கிறது.

விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் தீயணைப்பு அதிகாரி லிமா கானம் கூறுகையில், “இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர்” என்று கூறியிருந்தார். இருப்பினும், இது குறித்த மேலதிக தகவல்களை அவர் வழங்கவில்லை.
இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 21ஆக அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானம் பள்ளியின் மீது மோதியவுடன் தீப்பிடித்தது. தூரத்தில் இருந்து பார்த்தாலே புகை வெளியேறுவதை காண முடிந்தது என்று ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்தது. தீயை அணைக்க எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருக்கின்றனர்.
விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட வீடியோவில், புல்வெளி அருகே பெரிய தீப்பிழம்பு எரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்து கரும்புகை வெளியேறியது. தூரத்தில் இருந்து மக்கள் கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. விபத்து நடந்தபோது மைல்கல் பள்ளியில் குழந்தைகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்துக்குள்ளான எஃப்-7 பிஜிஐ விமானம், அந்நாட்டின் விமானப்படைக்கு சொந்தமானது என் வங்கதேச ராணுவ வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன. விபத்தில் உயிரிழந்தவர் யார்? மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதா? என்பது குறித்தும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மீது ஏர் இந்தியா விமானம் மோதி விபத்துக்குள்ளான ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேரும், விமானம் மோதிய கட்டிடத்தில் இருந்த 19 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





